பாழடைந்த பங்களாவில் முரடனும் D.L. மூடியும் என்ன ஆச்சு தெரியுமா?

Share this page with friends

D.L மூடி என்ற தேவ மனிதர் ஒரு கூட்டத்தில் பிரசங்கித்த பொழுது அநேகர் தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு மனம் திரும்பினார்கள். கூட்டம் முடிந்தவுடன் ஒரு முரட்டு மனிதன் மூடியின் கரத்தைப் பிடித்துக்கொண்டு, “மூடி நீ என்னோடு வா” என்றான்.

மூடியை அந்த கூட்டத்திற்கு அழைத்திருந்த போதகர் மூடியிடம், “ஐயா, அவன் ஒரு கொலை காரன். நீங்கள் அவனோடு போகவேண்டாம்” என்றார். பிரசங்கத்தை முடித்திருந்த மூடிக்கு ஆவிக்குரிய தைரியம் ஏற்ப்பட்டது. அந்த முரட்டு மனிதனுடன் காரில் ஏறினார். கார் பட்டணத்தைக் கடந்து காட்டுப் பாதையில் சென்றது. மூடி காருக்குள் அமைதியாக ஜெபித்துக் கொண்டிருந்தார். கார் ஒரு பாழடைந்த பங்களாவில் சென்று நின்றது. முரட்டு மனிதன் மூடியை இறங்கச் சொன்னான். பங்களாவிற்குள் இருவரும் சென்றார்கள்.

ஒரு அறையைத் திறந்தான் முரடன். உள்ளே மதுபாட்டில்கள் குவிந்து கிடந்தன. முரடன் மூடியைப் பார்த்து, “இவைகளையெல்லாம் இயேசு மன்னிப்பாரா?” என்று கேட்டான். மூடி சமாதானமாய் அவனிடம் “இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும் (I யோவான் 1: 7)” என்றார். அடுத்த அறை முழுவதும் எலும்பு கூடுகளால் நிறைந்திருந்தன. முரடன் மூடியைப் பார்த்து, “இவைகளெல்லாம் நான் கொன்றவர்கள். இயேசு இதையும் மன்னிப்பாரா?” என்று கேட்டான். மூடி சமாதானமாய் அவனிடம் “இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” என்றார். அடுத்த அறையில் தான் கொள்ளையடித்த அனைத்து தங்கம், வெள்ளி போன்ற பொருட்களையும் காண்பித்து, “இயேசு இதையும் மன்னிப்பாரா?” என்று கேட்டான். மீண்டும் மூடி சமாதானமாய் அவனிடம் “இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” என்றார்.

அதன் பிறகு மலை அடிவாரத்திற்கு மூடியை அழைத்துச் சென்றான் முரடன். அங்கே ஒரு சிறிய குடிசை இருந்தது. முரடனின் மனைவி நோய்வாய்ப்பட்டு அந்த கட்டிலில் படுத்திருந்தாள். அருகில் அவனது 12 வயது மகள் முகத்தில் தீக்காயங்களுடன் அழுதுகொண்டிருந்தாள். முரடன் மூடியைப் பார்த்து, “இவள் என் மனைவி. குடித்து விட்டு தினமும் இவளை நான் சித்திரவதை செய்வேன். நேற்று இவளை அடித்த பொழுது என் மகள் தடுத்தாள். அவளைத் தள்ளிய பொழுது, அவள் விளக்கில் விழுந்ததால் அவளுடைய முகம் கருகிற்று. உன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, என்னைப் போன்ற கொடூர குணமுள்ள மனிதனை மன்னிப்பாரா?” என்று கேட்டான். மூடி மீண்டும் மௌவுனமாக அவனிடம், “நீ பாவங்களை விட்டு மனம்திரும்பி இயேசுவிடம் வரும்பொழுது, இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, உன்னைச் சுத்திகரிக்கும்” என்றார்.

உடனே மூடியின் கால்களைப் பிடித்துக் கொண்டு அழுதான் முரடன். கர்த்தாவே என்னை மன்னித்தருளும், ஆண்டவரே என்னை மன்னித்தருளும் என்று கதறி அழுதான். அன்றைக்கு அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, பரலோகத்தின் பிரஜை ஆனான்.

இதை வாசிக்கின்ற இயேசுவுக்கு பிரியமானவர்களே, நீங்கள் இரட்சிக்கப்பட்டு சபைக்கு சென்று, ஞானஸ்நானம் பெற்று பின்மாறிப்போயிருக்கலாம். பாவ வாழ்க்கையை விடுவதற்கு கடுமையாக போராடிக் கொண்டிருக்கலாம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கரம் இன்றைக்கு உங்களை நோக்கி திறந்திருகின்றது. இயேசுவிடம் வாருங்கள். அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, உங்களை சுத்திகரிக்கும்.


Share this page with friends