ஒத்தயடிப் பாதையிலே..

Share this page with friends

கதிரைப் பொறுக்கக் களமிறங்கிய வெண்புறா

நாம் இருவரல்ல ஒருவரானோம்
பயன்பட விருப்பமுள்ளவர்கள்
பண்பட வேண்டும் என்பது
பரிசுத்தரின் விருப்பம்.  

இந்த கருப்பொருளில்
மெய்ப்பொருள் காண,
சுத்திகரிப்பின் மூலம்
எழுப்புதல் அடைய
,
களம் விட்டு ஜெபத்தோட்டத்திற்குள்
களமிறங்கியிருக்கிற
உங்களை வாழ்த்தி
வரவேற்கிறேன்.

இது அளவான கூட்டம்தான்.
ஆனால் அறிவார்ந்த கூட்டம்.  
கூட்டம் சிறிதோ பெரிதோ
நாட்டம் இருந்தால் நட்டம் ஏதுமில்லை.

ஓர்பாள் ஓடிப்போனாள்
நகோமி நழுவப் பார்த்தாள்
ரூத் ஒட்டிக்கொண்டாள்
வாழ்ந்து கெட்ட குடும்பத்தின்
வாழ்க்கை குறிப்பு
!

மாறுபட்ட மாமியின்
கருத்தைத் தள்ளிவிட்டு
கழுத்தைக் கட்டிப்
பிடித்துக் கொண்டாள் ரூத்.

உம்மை விடமாட்டேன்
என் அருமை மாமியே
என்னைப் பார்த்தா
ஓர்பாளைப் போல் ஓடிவிடு என்று
சொல்லுகிறீர்?

பின்னிட்டு பார்த்து
உப்புத்தூணான
லோத்தின் மனைவியைப் போல,
விட்டுவந்த தேசத்தைத் திரும்பிப்பார்த்து
காலத்தால் கரைந்து போக மாட்டேன்   

பத்து ஆண்டுகளில்
உங்கள் பரிசுத்த தேவனை
கண்டுகொண்டேன்

உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு
உம்மை ஒட்டிக்கொண்டு ஓடிவருவேன்

எங்களால் உமக்கு இருப்பது விசனம்
உம்மால் எனக்கு கிடைத்தது வசனம்
நம்மை விட்டு பிரிக்கும் சக்தியை 
எரிக்கும் சக்தி என்னிடம் உண்டு

நான் தானியேலின்  உடன்பிறவா
சகோதரியாக்கும்
எடுத்த தீர்மானத்தை
தலையே போனாலும் விடமாட்டேன்

மருமகளின் உறுதியான
தீர்மானத்தைக் கண்டதும்
மாமி தனது முடிவை மாற்றிக் கொண்டாள்  

வா மருமகளே வா
வலது காலை எடுத்துவைத்து வந்தவளே வா வறுத்தெடுக்கப்பட்டவளே
பிரித்தெடுக்கப்பட்டவளே வா


ஒத்தையடிப் பாதையானாலும்
ஒருமித்து ஓடுவோம்
மத்தபடி மன்னவர் பார்த்துக்கொள்வார்

நலிவடைந்த நகோமி
மெலிவடைந்த ரூத்  
இருவரும் மனதளவில் ஒருவரானார்கள்

நம்பிக்கையுடைய சிறைகள்  
அரணுக்குத் திரும்பின
அப்பாவின் வீட்டில் அப்பமும் ஆதரவும் உண்டு
இதுவே இரட்டிப்பான நன்மை (சகரியா 9:12)

உழைத்து உண்ணும் உழைப்பாளர்
வர்க்கத்தை சேர்ந்தவள் தான் ரூத்
உடைந்துபோன குடும்பத்திலிருந்து வந்தவள்
உணவுக்காக வயல்வெளிக்குப் போனாள்
தற்செயலாய் ஒரு கோதுமை வயலில்
இறங்கி கதிர்  பொறுக்கினாள்

வறுமைக் கோட்டில்
வௌவால் போல்

தொங்கிக்கொண்டிருந்தவள்
வயல்காட்டில்
வெண்புறா போலக்
கதிரை பொறுக்கக் களமிறங்கியிருந்தாள்

எதேச்சையாதிகார உலகில்
எதுவும் இவளுக்கு எதேச்சையாக
நடந்துவிடவில்லை
எல்லாமே தேவனால்
திட்டமிடப்பட்டிருந்தது

வயல் மட்டுமல்ல
வாழ்வும் கூடத்தான்


உண்மையுள்ள உழைப்பாளி
உரிமையாளரின் பார்வையில்
பட்டுவிட்டாள்

பட்டமரம் துளிர்த்துவிட்டது 
பக்கக் கிளையும்  முளைத்துவிட்டது

ஒலிமுக வாசலில் கூட்டம் கூடிவிட்டது
ஊரறிய இருமனமும் ஒருமனமாகிவிட்டது

போவாஸ் அந்த ஒலிமுக வாசலில் நின்று
ரூத்தைப் பார்த்து
நாம் இனி இருவரல்ல ஒருவரானோம் என்றபோது
வாழ்த்து மழை பெய்யத் துவங்கியது. 

முழுமை என்பது
இருவர் ஒருவராகும்பொழுது
பிறக்கும் ஓர் உன்னத நிகழ்வு

பாதியும் மீதியும் ஒன்றாக இணைந்து
வாழ்க்கை பவுர்ணமி நிலவானது.

ரூத்தின் கனவுகள் நிஜமானது
ஓபேத் என்னும் ஆதரிக்கிறவன்
வந்து பிறந்தான்
ஈசாய் என்னும் பிள்ளையை பெற்றெடுத்தான்
அவனே தாவீதின் தகப்பனாய் மாறிவிட்டான்.

தாவீதின் வம்சத்தில்
இயேசு வந்துதித்தார்.

ஆம் அந்த முழுமைபெற்ற
குடும்பத்தின் வம்சத்தில்
முதல்வர் வந்துதித்தார்
(கொலோசெயர் 1:18)

வேதம் சங்கீதங்களால்
நிரம்பி முழுமைபெற
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் நிரம்பி வழிய
இணைக்கப்பட்ட ஓர் குடும்பம்
இன்றும் உலகெங்கிலும் பேசப்படுகிறது

ஆம், நாம் இருவரல்ல ஒருவரானோம் என்று
உரக்கச் சொல்லி
உலகத்தைக் கலக்கும்போது
அமாவாசை அடியோடு அகன்று போகும்  
முப்பத்தொரு  நாளும்
பவுர்ணமியாக மாறிப்போகும் 
அல்லேலூயா

குறிப்பு: 2014 செப்டம்பர் 10-12 தேதிகளில் சுத்திகரிப்பின் மூலம் எழுப்புதல் ஊழியங்களின் சார்பில் ஜெபத்தோட்டத்தில் நடைபெற்ற ஊழியர் தரிசன முகாமில் வாசிக்கப்பட்ட கவிக் கட்டுரை.    


Share this page with friends