பிரசங்கம் – ஜாக்கிரதை!
ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திப் பிரசங்கம் செய்ய வேண்டும்.
ஆசீர்வாத மழையைப் பற்றி ஆதி அப்போஸ்தலா்கள் பிரசங்கம் செய்யவில்லை.
பரிசுத்த வாழ்க்கை நடத்தி, பரலோக இராஜ்யம் எப்படிப் போக முடியும் என்பதைக் குறித்துப் பிரசங்கம் செய்தார்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை வாசித்துப் பாருங்கள்.
மத்தேயு 3:7-8
அப்போஸ்தலர் 2:40
1 கொரிந்தியர் 2:12-13
மனுஷரைப் பிரியப்படுத்திப் பேசுவது பிரசங்கம் கிடையாது.
தேவனுடைய ஆலோசனைகளையும், கற்பனைகளையும் ஜனங்களுக்குப் போதிப்பதுதான் பிரசங்கமாகும்.
பொருளாசையைத் தூண்டிவிட்டுப் பேசுவது பிரசங்கம் கிடையாது.
இச்சகமான வாா்த்தைகளைப் பேசுவது பிரசங்கம் கிடையாது.
தேவன் உங்களுக்குப் பணம் கொடுப்பாா், பொருள் கொடுப்பாா்,
சைக்கிளில் போகிற நீ பைக்கில் போகப் போகிறாய்,
பைக்கில் போக போகிற நீ காரில் போகப் போகிறாய் என்று
பேசுவது பிரசங்கம் கிடையாது.
ஏராளம் நகைகளை அணிந்து கொண்டு, ஆடம்பரமும், அலங்காரமுமான துணிகளை உடுத்திக்கொண்டு, பூவோடும், பொட்டோடும் சபைக்கு வரலாம் அது தவறு கிடையாது என்றும்,
ஒரு கல்யாண வீட்டுக்கு எப்படிப் போகிறாயோ, அதேபோல அப்பா வீட்டுக்கு (சபைக்கு) வா என்று சொல்லிப் பேசுவது பிரசங்கம் கிடையாது.
பிரசங்கம் செய்கிறவா்கள் கண்களைத் திறந்து பைபிளை வாசிக்க வேண்டும்.
ஒரு விவசாயி தன்னுடைய நிலத்திலிருக்கிற கற்களையும், முட்களையும் சுத்தம் செய்து, ஏர் உழுது, தண்ணீர் பாய்ச்சி, அதன் பிறகுதான் நிலத்தில் விதைகளை விதைப்பான். அப்பொழுதுதான் அவனுக்குப் பலன் கிடைக்கும்
அதே போல சபைக்கு வரும் விசுவாசிகளை சுத்தம் செய்து, கர்த்தருடைய ஆலோசனைகளை அவா்களுக்குச் சொல்லித் தந்து, சுத்திகரிப்பைப் பிரசங்கத்தின் மூலம் உண்டுபண்ண வேண்டும்.
பரிசுத்தத்தைக் குறித்து பிரசங்கத்தில் அதிகமாகக் குறிப்பட்டுப் பேச வேண்டும். அப்போதுதான் வசனமாகிய விதைகள் தன்னுடைய பலனைத் தரும்.
கண்டித்து, கடினமாகப் பிரசங்கத்தால்தான் விசுவாசிகள் தங்கள் கனிகளாகிய பலனைக் கர்த்தருக்குத் தருவாா்கள்.
இயேசு கிறிஸ்து எப்படிப் பிரசங்கம் செய்தாரோ, அதுபோலத்தான் நாமும் பிரசங்கம் செய்ய வேண்டும்.
உதாரணமாக:
இருதயத்தில் சுத்தம் இருந்தால்தான் என்னைத் தரிசிக்க முடியும் என்று இயேசு கிறிஸ்து பிரசங்கித்தார்.
நிபந்தனைகளோடுதான் இயேசு கிறிஸ்து பிரசங்கத்தார்.
ஆதி அப்போஸ்தலா்கள் எப்படி பிரசங்கித்தார்களோ அப்படித்தான் நாமும் பிரசங்கம் செய்ய வேண்டும்.
யோவான் ஸ்நானகன், பேதுரு, ஸ்தேவான், பிலிப்பு, பவுல், போன்றோரின் பிரசங்கங்களைக் கவனமாக வேதத்தில் வாசிக்க வேண்டும்.
பிலிப்பு பிரசங்கித்து, அசுத்த ஆவிகளைத் துரத்தினார். சப்பாணிகள் நடந்தாா்கள், திமிர்வாதக்காரர்கள் குணமாக்கப்பட்டனர். (அப்போஸ்தலர் 8: 1-8)
யோவான் ஸ்நானகன் தன்னுடைய பிரசங்கத்தில் பேசிய முக்கியமான குறிப்பை பாா்க்கலாம்
மத்தேயு 3: (7) பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக் குட்டிகளே, வரும் கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்? (8) மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
தேவனுக்குக் கனி தர வேண்டும் என்கிற ஆழமான காரியத்தை ஜனங்களுக்கு யோவான் சொல்லிக் கொடுத்தார்.
பேதுரு தன்னுடைய பிரசங்கத்தில் பேசிய முக்கியமான குறிப்பை பாா்க்கலாம்
அப்போஸ்தலர் 2:40: இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சி கூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள் என்றும் புத்தி சொன்னான்.
உலகத்தைத் தேடுவதை விட்டு விட்டு, கர்த்தரை மட்டுமே தேடுங்கள் என்று பேதுரு தன்னுடைய பிரங்சத்தில் குறிப்பிடுகிறாா்
ஸ்தேவான் தன்னுடைய பிரசங்கத்தில் நமக்கு சொல்லித் தரும் முக்கிய குறிப்பைப் பாா்க்கலாம்
அப்போஸ்தலர் 7:53: தேவதூதரைக் கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமல் போனீர்கள் என்றான்.
நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, அதன்படி உங்கள் பிதாக்கள் நடக்கவில்லை என்பதை ஸ்தேவான் தன்னுடைய பிரசங்கத்தில் குறிப்பிடுகிறான்.
பவுல் தன்னுடைய பிரசங்கத்தில் நமக்குச் சொல்லித் தரும் முக்கிய குறிப்பைப் பாா்க்கலாம்.
அப்போஸ்தலர் 20: (26) தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, (27) எல்லாருடைய இரத்தப் பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேன் என்பதற்கு உங்களை இன்றைய தினம் சாட்சிகளாக வைக்கிறேன்.
தேவனுடைய ஆலோசனைகளை மட்டுமே நான் பிரசங்கமாகப் பேசினேன், அதினால் விசுவாசிகளுடைய இரத்தப் பழி என்மேல் வராது என்பதைப் பவுல் தன்னுடைய பிரசங்கத்தில் குறிப்பிட்டுள்ளாா்.
முறைப்படி வேதாகமக் கல்லூரியில் படித்துப் பிரசங்கத்தால் மட்டும் போதாது; முறைப்படி வேதாகமத்தையும் வாசித்து, தியானித்து இயேசுவைப் போல, ஆதி அப்போஸ்தலா்களைப் போல பிரசங்கம் செய்தால்தான் விசுவாசிகளுடைய இரத்தப் பழி உங்கள் மீது வராது; இல்லையென்றால் ஆபேலுடைய இரத்தப்பழிக்காகக் காயீனை கர்த்தர் நியாயந்தீர்த்தது போல, விசுவாசிகளுக்காகக் கர்த்தர் ஊழியக்காரரை நியாயந்தீர்ப்பாா். மிகுந்த ஜாக்கிரதையுடன் ஊழியம் செய்யக்கடவோம்.
1 கொரிந்தியர் 2: (12) நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். (13) அவைகளை நாங்கள் மனுஷ ஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவியானவர் போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்.
ஆம், ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்தி மட்டும் பிரசங்கம் செய்யுங்கள்.
கட்டுக் கதைகளையும், வம்ச வரலாறுகளையும் விட்டு விலகி, பரிசுத்த ஆவியானவா் சபையை ஆளுகை செய்யும்படி ஊழியர்களாகிய நாம் கர்த்தருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்துவோம்.
பரிசுத்தமான ஜீவியத்திற்கு நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தை ஒப்புக்கொடுப்போம்.
இயேசுவைப் போல மாற வாஞ்சிப்போம்.. கர்த்தர்தாமே நம்மனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
(கர்த்தருடைய மன்னா – தெரிந்தெடுக்கப்பட்டு, சிறு மாற்றங்கள் செய்யப்பட்டது)
– Pas Sargunam