சிங்காசனப் பிரசங்கம்! (வித்யா’வின் பதிவு)

Share this page with friends

இது பிரசங்கக் காலம்

வீட்டிலும் பிரசங்கம்
வீதியிலும் பிரசங்கம்
 
காலை மாலை மதியம்
எப்பொழுதும் பிரசங்கம்
 
ஒரே ஒருவர் முன் இருந்தாலும்
ஓராயிரம் பேர் கூடினாலும்
பிரசாங்கம்தான்!
 
பேச்சு அதிகம்
செயல்பாடுகள்
மிகக் குறைவு,
இவர்களுக்குப் பெயர்
அதிகப்பிரசங்கிகள்
 
ஓயாமல் பேசுகிறவர்கள்
செயல்படமாட்டார்கள்
 
அயராமல் செயல்படுகிறவர்கள்
அதிகம் பேசுவதில்லை

முன்பெல்லாம்,  தான்
வாழ்ந்துகாட்டியதைப்
பேசினார்கள்

இப்போது, தாம்
பேசியபடி
வாழ்ந்துகாட்டுபவர்கள்
மிகவும் சொற்பம்!
 
சொற்பொழிவு
ஆற்றும் இடத்தில்
உணவும் உண்டு


உணவு விடுதியில்
சொற்பொழிவும்
உண்டு
 
பேசுகிறவர்களெல்லாம்
பிழைக்கிறார்கள்
 

பேச்சைக் கேட்பவர்களோ
சற்று குழம்பி போகிறார்கள்
 
மாலை வந்தால்
மதி மயங்குகிற
பேச்சால் மக்கள்
கிறங்கிப் போகிறார்கள்
 
பேசுகிறவர்களோ
(மார்ஸ்) மேடையை விட்டு
இறங்கிப் போகிறார்கள்
 
பகலவன் உதிக்கும் போது
அனைத்தும் மறந்துபோகிறது
 
மீண்டும் ஒரு மாலை
வரவேண்டும்

விழிப்புணர்வு
வேண்டுவோருக்கு
வீண் பேச்சு போதாது
விவேகமான
செயல்பாடு தேவை
 

குறைவாகப் பேசி
நிறைவாகச்
செயல்படுதல்
நன்மை பயக்கும்

பேச்சாளர்களைச்
சார்ந்தே பெரிய
ஊழியங்களைக்
கட்ட நினைப்பது
பெரிய செலவு

 
பரலோக ராஜ்யம்
பேச்சிலே அல்ல
பெலத்திலே இருக்கிறது
 
இப்போது யாரும்
சுருங்கச்சொல்லி
விளங்கவைக்க
விரும்புவது இல்லை
 
சுருக்கத்தைப்
பெருக்கமாக
பெருமைப்படுத்திப்
பேசுவதே
இன்றைய பேச்சு

 
இந்தக் காலம்
சிங்காசனப்
பிரசங்கங்கள்
நிறைந்த காலம்
 
ஏரோது சபையிலே
சிலரைத் துன்பப்படுத்திய
காலத்தில்
யாக்கோபை
கொலைசெய்த கையோடு
பேதுருவையும் பிடித்து
கொலை செய்யும்படி
அவரைப் பிடித்து
சிறை வைத்தான்

 
பேதுருவின்
அற்புத விடுதலை
ஏரோதுக்கு பெரிய
கலக்கத்தை
உண்டுபண்ணியது
 
பயந்துபோய் தன்
இருப்பிடத்தையும்
ஊரையும் மாற்றி
யூதேயா தேசத்தைவிட்டு
செசரியா
பட்டணத்துக்குப் போய்
அங்கே வாசம்பண்ணினான்

அப்போஸ்தலர்களெல்லாம்
பிரசங்கம் பண்ணி மக்களை  
மாற்றுகிறார்களே,
நாம் ஏன் பிரசங்கம்
பண்ணக்கூடாது? இப்படி
ஏரோது நினைத்தான்
 
தீரியர் பேரிலும் சீதோனியார்
பேரிலும் அக்காலத்தில் அவனுக்கு
மிகவும் கோபம் இருந்தது
 
குறித்த நாளிலே
அவர்களையெல்லாம்
அழைத்தான்
 
தான் ராஜ வஸ்திரத்தைத்
தரித்துக்கொண்டான்
சிங்காசனத்தில் ஏறி
உட்கார்ந்துகொண்டான்

 
அவர்களுக்குப்
பிரசங்கம்பண்ண
ஆரம்பித்தான்
 
இதற்குப் பெயர்தான்
சிங்காசனப் பிரசங்கம்!
 
இவன் பிரசங்கத்தைக்
கேட்ட ஜனங்கள் இது
மனுஷ சத்தமல்ல
இது தேவ சத்தம் என்று
ஆர்பரித்தார்கள்

கண்டதுக்கெல்லாம்
ஆர்ப்பரிக்கும்
கூட்டத்தார் இன்றைக்கும்
இருக்கிறார்கள்
 
இது எப்படி இருக்கிறது?
 
கான மயில் ஆடினால்
அதைக் கண்டுகளிக்கலாம்

 
அதை நினைத்து வான்கோழி
தானும் ஆடினால்

பார்க்க எப்படி இருக்கும்?
 
கறிச்சுவைக்கு உதவும்
வான்கோழி

நகைச்சுவைக்காக
ஆடலாம். 

இப்படித்தான்
இன்று அநேக
பிரசங்கங்கள்!

தேவனுக்கு மகிமையைக்
கொண்டுவராத
பிரசங்கங்கள்
மக்களுக்குத்
தேவை இல்லை
 
பவுல் சொல்லுகிறதை
கவனியுங்கள்
நாங்கள்
எங்களையே

பிரசங்கியாமல்
கிறிஸ்து இயேசுவைக்

கர்த்தரென்றும்
எங்களையோ

இயேசுவினிமித்தம்
உங்கள்

ஊழியக்காரரென்றும்
பிரசங்கிக்கிறோம்

(2 கொரிந்தியர் 4:5)
 
இயேசுகிறிஸ்துவைப்
பற்றிய பிரசங்கமாகிய
என் சுவிஷேசம்
(ரோமர் 6:26) என்று பவுல்
குறிப்பிடுகிறார்
 
ஏற்ற காலங்களிலே நம்முடைய
இரட்சகராகிய தேவனுடைய
கட்டளையின்படி எனக்கு
ஒப்புவிக்கப்பட்ட
பிரசங்கத்தினாலே
தமது வார்த்தையை
வெளிப்படுத்தினார்
(தீத்து 1:4)

தேவன் ஒப்புவித்ததை
பிரசங்கியுங்கள்
 
தேவனால்
கட்டளையிடப்பட்டதைப்
பிரசங்கம்பண்ணுங்கள்

(அப்போஸ்தலர் 10:33)

யோவான் ஸ்நானன் இவ்வாறு
பிரசங்கித்தான்;
மனந்திரும்புங்கள் பரலோக
ராஜ்யம் சமீபித்திருக்கிறது”

(மத்தேயு 3:2)
 
இதையே இயேசுவும்
பிரசங்கித்தார்
 
இன்றோ,
தேவ ராஜ்யத்தைக்
குறித்துப் பிரசங்கியாமல்
உலக ராஜ்யத்தைக் குறித்தே
பிரசங்கிக்கிறார்கள்

(மத்தேயு 10:7, மாற்கு 1:14,
லூக்கா 9:2)
 
கிராமந்தோறும்
பிரசங்கியாமல்
பட்டணந்தோறும்
பிரசங்கிக்கிற
அநேகர்,
தாங்களே ஆகாமலும்
போகிறார்கள்
(1 கொரிந்தியர் 9:27)
 
சொல்லும் செயலும்
வேறுபடுகிறது.
இடத்திற்கு இடம்
மாறுபடுகிறது

பச்சோந்திகள்
பரவாயில்லை

என்று
சொல்லப்படுகிறது
 
முதலில் செயலில்
தூய்மையாக
இருக்கவேண்டும்.
அதை
உறுதிப்படுத்திகொண்டு
பின்பு சொல்ல வேண்டும்
 
ஆண்டவராகிய
இயேசுவைக்
குறித்து வசனம்
என்ன சொல்லுகிறது?
 
இயேசுவானவர்
எடுத்துக்கொள்ளப்பட்ட
நாள்வரைக்கும்
செய்யவும்
உபதேசிக்கவும்

தொடங்கின
எல்லாவற்றையும் குறித்து…”
(அப்போஸ்தலர் 1:2)
 
எஸ்றா தன் இருதயத்தை
எப்படிப் பக்குவப்படுத்தினார்?
வேதத்தை ஆராய, அதின்படி
செய்ய, பின்பு உபதேசிக்க…

(எஸ்றா 7:10) 
 
உங்கள் செயல்களோ
வெறுமையிலும் வெறுமை..
(ஏசாயா 41:24) என்று தேவன்
சொல்லுகிறார்.
 
ஜனங்கள் எல்லாருக்கும்
முன்பாக செய்கையிலும்
வாக்கிலும் வல்லமையுள்ளவர்

இயேசுவானவர்
(லூக்கா 24:19)
 
மோசே வாக்கிலும்
செய்கையிலும்
வல்லவன்

(அப்போஸ்தலர் 7:22)
 
சிங்காசனப் பிரசங்கிகள்
சிங்காசன வரவேற்பையும்
(அதாவது சிவப்புக் கம்பள
வரவேற்பை)
எதிர்பார்க்கிறார்கள்

 
அவர்களை அழைத்துப்
பேசவைக்க, பெரிய அளவில்
செலவு செய்ய

வேண்டியிருக்கிறது
 
இவ்வளவு செய்தாலும்,
கர்த்தருக்குப் பிரியமானதைப்
பேசாமல், ஜனங்களுக்கும்
தங்களுக்கும் பிரியமானதைப்
பேசிவிட்டுப் போகிறார்கள்

 
அப்போதைக்கு அப்போது
பரிசுத்தம் என்ற வார்த்தையை
ஊறுகாயைத்
தொட்டுக்கொள்வதுபோல
இடையிடையே வசனத்தைத்
தொட்டுக்கொள்கிறார்கள்
 
உலக மயக்கத்திலும்
தற்பெருமையிலும்
ஆடம்பரத்திலும் அலைந்து
திரியும் சிங்காசனப்
பிரசங்கிகளை,
அதிகப் பிரசங்கிகளை,
தேவனுடைய மனுஷனே
நீ அடையாளம்
கண்டுகொள்ளவில்லையென்றால்
உன் நிலைமை பரிதாபமாய்ப்
போய்விடும்.

 
அரசாங்கங்கள் வெறும்
புள்ளிவிவரங்களையே
சொல்லிச் சொல்லி மக்களை
மயக்கத்தில்
ஆழ்த்துகின்றன
 
இப்போது சபைகளும்
அவர்களைப் போலவே
புள்ளிவிவரங்களை
கோடிகளில் பட்டியலிட்டு
பவனிவந்து
பரவசமடைகின்றன
 
எதற்கெடுத்தாலும்
கணக்கெடுப்பது கர்த்தருக்குப்
பிடிப்பதில்லை.
 
கவனமாய் செயல்படுவோம்
கள்ளத் தீர்க்கதரிசிகளை,
கள்ள பிரசங்கிகளை,
சிங்காசனப் பிரசங்கிகளை
,
இனம்கண்டுகொள்வோம்.
விசுவாசத்தைக்
காத்துக்கொள்வோம்.
 
எழுதியவர்:
பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்
போதகர் / எழுத்தாளர்

——————————————

தொகுப்பு:
Pastor J. Israel Vidya Prakash B.Com., M.Div.,
Director of Literature Dept.
tcnmedia.in
Radio Speaker; Aaruthal FM

Share this page with friends