
லெந்து கால உபவாசம் பற்றி ஒரு சிறு பார்வை!
“லென்ட்” என்பது கத்தோலிக்க சபையில் துவங்கி பின்னர் புராட்டஸ்டன்ட் சபைகளாலும் பாரம்பரியமாக அனுசரிக்கப்பட்டு வரும் உபவாசத்தின் காலமாகும். இக்காலத்தில் பெரும்பாலும் எல்லா சபைகளுமே இதைப் பின்பற்றுவதைப் பார்க்கிறோம்.
இது சாம்பல் புதன் கிழமை தொடங்கி ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமைடன் முடிகிறது.
லெந்து கால உபவாசம் என்பது 4ம் நூற்றாண்டில் 46 நாட்கள் கைக்கொள்ளப்படத் துவங்கியது. (இடையில் வரும் ஞாயிற்றுக் கிழமைகள் உயிர்த்தெழுந்த நாளைக் குறிப்பதால் அவைகளைக் கணக்கிடுவதில்லை).
உபவாசத்தின்போது குறைவாகவே சாப்பிடுவார்கள், அல்லது ஒரு குறிப்பிட்ட உணவு அல்லது பழக்கத்தை விட்டு விடுவார்கள். உபவாசத்தின்போது மதுபானம் அருந்துதல், புகை பிடிப்பதை நிறுத்தி வைத்தல், அல்லது தொலைக்காட்சி பார்ப்பதைக் குறைத்துக் கொள்வது, இறைச்சி உணவுகளைத் தவிர்ப்பது, பூ வைக்காமல் இருப்பது, பொய் சொல்வது, சத்தியம் செய்வது போன்றவைகளை விட்டு விடுவது என்று சில சுய ஒழுக்கமான காரியங்களைச் செய்ய முயற்சி செய்வார்கள். இது வேதாகம அடிப்படையிலான உண்மையான மனந்திரும்புதலுக்குள் வழி நடத்தாவிட்டால் இவைகளால் எந்தப் பயனும் இல்லை.
4ம் நூற்றாண்டில் கத்தோலிக்க சபையில் மனந்திரும்புதலின் மதிப்பை நினைவூட்டுவதற்காக லெந்து நாட்கள் துவங்கியது. பழைய ஏற்பாட்டுக் கால மக்கள் எப்படி உபவாசம் இருந்தார்கள், மற்றும் சாம்பலில் அமர்ந்து மனந்திரும்பினார்கள் என்பதற்கு அடையாளமாகவே லெந்து நாட்கள் உருவானது. (எஸ்தர் 4: 1-3; எரேமியா 6:26; தானியேல் 9: 3).
பல நூற்றாண்டுகளாக லெந்து கால அனுசரிப்புகள் உலக அளவில் ஒரு மதிப்பான பாரம்பரியமாகவும், பலரால் கவனிக்கப்படக் கூடிய ஒரு கிறிஸ்தவ சடங்காகவும் மாறியுளளது என்பது உண்மையாகும்.
பல கத்தோலிக்கர்கள் லெந்து நாட்களில் எதையாவது விட்டுக் கொடுப்பது தேவனுடைய ஆசீர்வாதத்தை அடைவதற்கான ஒரு வழியாகும் என்று நம்புகிறார்கள்; ஆனால் இவைகளினால் தேவனுடைய கிருபையையும், பாவ மன்னிப்பையும் சம்பாதிக்க முடியாது என்று வேதம் போதிக்கிறது. அது தேவனுடைய கிருபையினால் அருளப்படும் ஒரு நீதியின் ஈவு என்று ரோமர் 5:17ல் காண்கிறோம். .
மேலும் உபவாசம் எப்படி செய்யப்பட வேண்டுமென்பதைக் குறித்து:
“நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப் போல முக வாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப் பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். | நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. | அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய் பலனளிப்பார்”.
என்று மத்தேயு 6:16-18ல் இயேசு போதித்தார்.
சாம்பல் புதன் கிழமையன்று ஒருவரின் முகத்தில் சாம்பலைத் தேய்க்கும் செயல் “உங்கள் முகத்தை கழுவ வேண்டும்” என்ற இயேசுவின் போதனைக்கு எதிரானதும், முரண்பாடானதுமாகத் தெரிகிறது.
உபவாசம் ஒரு நல்ல காரியமாகவே இருந்தாலும், பாவத்திலிருந்து நாம் மனந்திரும்பும்போது மட்டுமே தேவன் மகிழ்ச்சியடைகிறார்.
இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் கவனம் செலுத்த சிறிது நேரம் ஒதுக்குவதில் தவறில்லை.; இருப்பினும், பாவத்திலிருந்து மனந்திரும்புவது என்பது லெந்து காலத்தின் 46 நாட்களுக்கு மட்டுமல்ல, அது நாம் உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய முக்கியமான ஒரு காரியமாகும்.
ஒரு கிறிஸ்தவர் லெந்து கால உபவாசத்தைக் கடைப்பிடிக்க விரும்பினால் அவர் அவ்வாறு செய்ய சுதந்திரமுள்ளவராக இருக்கிறார் என்றாலும் பாவங்களை விட்டு மனந்திரும்புதல், தேவனுக்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதில் கவனம் செலுத்துவது போன்றவை அதிக முக்கியமானவைகளாகும்.
லெந்து நாட்கள் என்பது ஒருவரின் தியாகத்தைப் பெருமையாக் காண்பித்துக் கொள்வது, அல்லது தேவனுடைய தயவையும் – அன்பையும் மாம்சீகப் பிரகாரமாகப் பெற முயற்சிக்கும் குறுக்கு வழியாக இருக்கக் கூடாது. தேவன் மீது வைத்திருக்கும் அன்பு லெந்து காலங்களீல் அதிகமாகி விடும் என்கிற மூட நம்பிக்கையை உருவாக்க முயற்சிக்கக் கூடாது.
பாஸ்டர். ரூபன் சத்தியராஜ்