
(தெளிவான விளக்கம்)
ஆன்மீக காரணத்திற்காக “உணவு மற்றும் பானம் (நீர், நீராகாரம்) இரண்டிலிமிருந்து” விலகி இருப்பது உபவாசம்.
ஒரு வேளை மாத்திரம் சாப்பிடுவதும், பழ சாறு மாத்திரம் குடித்துக்கொள்வதும், பால் மாத்திரம் குடித்துக்கொள்வதும், தலைக்கு பூ வைக்காமலும், பட்டுப்புடவை கட்டாமல் இருப்பதும், அழுது ஜெபிப்பதும் உபவாசம் அல்ல – அதன் பெயர் ஒடுக்கிக்கொள்வது !! அதாவது சில காரணங்களுக்காக தங்கள் மனதைக் கட்டுப்படுத்திக்கொள்வது.
நியாயபிரமாணத்தின்படி ஒரே ஒரு உபவாசம் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டதாயினும் யூதர்கள் அடிக்கடி பழைய ஏற்பாட்டு சகாப்தத்தில் கடைபிடித்தார்கள்.
பாவநிவிர்த்தி நாளில் ஒவ்வொரு ஆண்டும் எபிரேயர்கள் இருக்கவேண்டியது. லேவி. 16:31, ஏசா. 58:3.
அதுபோல ஒரு “கட்டாய உபவாசம், (கட்டளை) கிறிஸ்தவர்களுக்கு வேதாகமத்தில் விதிக்கப்படவில்லை” என்றாலும், புதிய ஏற்பாடு தேவனுடைய பிள்ளைகள் அவ்வப்போது உபவாசம் இருந்திருப்பதைக் காணமுடிகிறது.
கர்த்தருடைய சீஷர்கள் உபவாசம் இருப்பதில்லை என்று விமர்சிக்கப்பட்டபோது, இயேசுவின் பதில் “மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார். லூக். 5:34-35).
தொழுகையின் ஒர் அங்கமாகவும் ஒழுக்கமாகவும் கடைபிடிக்க முனையும் போது கிறிஸ்துவின் ஒர் எச்சரிக்கை “நீங்கள் “உபவாசிக்கும்போது”, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார் – மத் 6:16.
இந்த வசனத்தில் நீங்கள் கவனிக்க வேண்டியது முக்கியமாக “உபவாசித்தால் என்று சொல்லவில்லை – உபவாசிக்கும் போது என்றார்” !!
கிறிஸ்தவருக்கு உபவாசம் என்பது அவரவர் மனதைப் பொருத்தது.
உபவாசம் இருப்பது ஒரு சடங்காகவோ கட்டாயத்தின் பேரிலோ அல்ல – உள்ளார்ந்த தீவிரமான தேவையின் உணர்விலிருந்து அவசியப்படுவதை பொருத்தது.
உபவாசத்தின் விளைவும் பிரயோஜனமும் என்ன?
“தனிப்பட்ட துக்க காலங்களில்” உபவாசம் ஆன்மீக ரீதியில் பயனளிக்கும்.
சவுலின் மரணம் குறித்து தாவீதும் அவனுடைய ஆட்களும் துக்கம் அனுஷ்டித்தனர் (2 சாமு. 1:12).
எருசலேமின் அழிந்த நிலையைப் பற்றி நெகேமியா அறிந்தபோது அவ்வாறே செய்தனர் (நெகே. 1:4).
அன்புக்குரியவர் மோசமாக நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, உபவாசம் இருந்தது பொருத்தமானதாகத் தெரிகிறது (2 சாமு. 12:16).
ஆத்தும வளர்ச்சிக்காக உண்மையான மனந்திரும்புதலோடு பாவ காரியத்திற்காக துக்கப்பட்டு வெளிப்புற அறிகுறியாக மனந்திரும்புதலுடன் உபாவசம் கடைபிடிக்கப்பட்டது (1 சாமு. 7:6).
நினிவே மக்கள் தங்கள் பாவங்களை அங்கீகரிக்கும் போது உபவாசத்தை அறிவித்தனர் (யோனா 3:5).
மோசே நியாயப்பிரமாணத்தைப் பெற்றுக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் உபவாசம் இருந்தார் (யாத் 34:28).
அது போல வனாந்தரத்தில் கிறிஸ்து உபவாசம் இருந்தார் (மத் 4:2).
அந்த ஆபத்தான முதல் மிஷனரி பிரயாணத்தில் பர்னபாவையும் சவுலையும் அனுப்புவதற்கு முன்பு சபையார் உபவாசம் இருந்தார்கள். (அப் 13:2-3).
பவுலின் ஊழியத்தில் உபவாசம் ஒரு அங்கமாக இருந்தது (2 கொரி. 6:5; 11:27).
“உபவாசம் இருப்பவர்களுக்கான எச்சரிக்கைகள்”
உபவாசம் துஷ்பிரயோகம் செய்யப்படலாம் என்பது கவனிக்கப்படவேண்டியது.
தனிப்பட்ட தெய்வீக வாழ்க்கைக்கு “மாற்றாக” இந்த நடைமுறை ஒருபோதும் பயன்படுத்தப்படக்கூடாது.
உபவாசம் இருந்து கொண்டே உலக இன்பங்களை தொடர்ந்த ஜனங்களுக்கு ஏசாயாவின் எச்சரிப்பு பெரிய பாடம் (ஏசா. 58).
உபவாசம் என்பது ஒருவரின் மார்க்கத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் அல்ல. பரிசேயர்கள் இந்த விஷயத்தில் குற்றம் செய்தனர் (மத் 6: 16-18).
உபவாசம் என்பது ஒரு மார்க்க சடங்கு அல்ல !! அதுவே கண்ணியாகிவிடும். லூக்கா 18: 9-14.
“உண்ணாவிரதத்தின் நன்மைகள்”
ஆழ்ந்த மற்றும் நேர்மையான அர்ப்பணிப்பின் அடையாளமாக உபவாசம் இருக்கும் பட்சத்தில் தேவன் கவனிக்கிறவர் என்று வேதம் கூறுகிறது.
மிதமான உபவாசம் ஆரோக்கியத்திற்கு நன்மை.
உபவாசத்தில் மனம் அதிக ஒருங்கிணைக்கப்படுகிறது.
சுய ஒழுக்கத்தில் வளர்த்துக் கொள்ள உபவாசம் உதவும்.
மேலும், நாமும் 40 நாள் உபவாசிக்க வேண்டும் என்று கிறிஸ்து நமக்கு கட்டளையிடவில்லை. அது, அவரவரின் சொந்த விருப்பம்!
ஓரிரு வேளை சரீரத்தை ஒடுக்கிக்கொண்டு ஜெபிப்பதற்கு நேரம் ஒதுக்குவது தவறல்ல…
ஆனால் 40 நாள் உபவாசம் இருக்கிறேன் என்று பழச்சாறும் பாலும் அல்லது ஒரு வேளை மாத்திரம் சாப்பிட்டுக்கொண்டு “உபவாசம் என்று சொல்வது” தவறு. சரீர ஒடுக்கம் என்று சொல்லிக்கொள்வதில் எந்த தவறும் இல்லை..
உபவாசத்தை கொள்கையாக மார்க்க ரீதியாக கடைபிடிக்க கட்டளையிடுவதும் மற்றவர்களை கட்டாயப்படுத்துவதும் வேதத்திற்கு முரணானது.
நீயோ உபவாசிக்கும்போது, இந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார். மத் 6:17-18
(இக்கட்டுரை சிறு மாற்றங்களுடன், பகிரப்பட்டுள்ளது)
ஆக்கியோன்:
Eddy Joel Silsbee