பிரசங்க குறிப்பு

தன் வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான் நீதிமொழிகள் 11:29

தன் வீட்டை கலைக்கிறவன் காற்றை சுதந்தரிப்பான். ஒருவன் தன் பொருளாசையினால் தவறு செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அதினிமித்தம் அவனுடைய குடும்பமே பாடுபடும். உதாரணத்திற்கு ஆகான் சாபதீடானதிலிருந்து சிலதை எடுத்துக் கொண்டபடியால் இஸ்ரவேலர் முறிய அடிக்கப்பட்டனர். பொருளாசையினிமித்தம் அவனால் முழு இஸ்ரவேலரும் பாதிக்கப்பட்டனர்அதுப்போல ஒரு குடும்பத்தலைவன் பாவம் செய்யும்போது முழு குடும்பத்திற்கும் சாபம் வந்து, அவன் வீட்டை கலைக்கிறவனாக காணப்படுகிறான். அப்படிப்பட்ட காரியத்தை செய்யாதபடிக்கு நாம் ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.ஒரு குடும்பம் நலமானதாக, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு பாத்திரவான்களாக அந்த குடும்பம் இருக்க வேண்டும். குடும்ப தலைவன் குடிகாரனாக, அடிக்கிறவனாக, சண்டையிடுகிறவனாக இருந்தால் அந்த குடும்பத்தில் சந்தோஷம் காண முடியாதல்லவா? அங்கு தேவனுடைய ஆசீர்வாதமும் வரமுடியாதபடி நம் பாவங்களே தடையாகி நிற்குமே!மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான். இதற்கு நல்ல உதாரணம் சவுலையும், தாவீதையும் சொல்லலாம். சவுல் ஆரம்பத்தில் நல்லவிதமாகத்தான் ஆரம்பித்தார். ஆனால் எப்போது அவருக்குள் பொறாமை வந்ததோ, அப்போதிருந்து தாவீதை கொல்லவும், தேவன் விரும்பாத காரியங்களை செய்து அரசனாக்கியதற்கு தேவனே மனஸ்தாபப்படும் அளவிற்கு நடந்து கொண்டார். அதினால் அவரும் அவர் குடும்பமும் தாவீதிற்கு அடிமையாகும் நிலை வந்தது.இந்த வார்த்தைகளை அறிந்து, நம் குடும்பத்தை கலைக்கிறவர்களாக இல்லாதபடி, கட்டுகிறவர்களாக, தேவன் வந்து தங்கும் குடும்பமாக வாழ தேவன் கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!

Thanks for

Bishop.Kennedy, Tirchy