உலகத்தில் என்ன நடக்கிறது என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது சபைகளுக்கு எளிதானது

உலகத்தில் என்ன நடக்கிறது என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது சபைகளுக்கு எளிதானது

சபைக்கு வெளியே விவாதிக்கப்படும் சில விவாதங்களை சபைக்குள் நுழைய விடாமல் தடுத்துவிட்டாலும், சபை மக்கள் அதை நினைக்காமல் இல்லை பேசாமல் இல்லை. உலகத்தை அசைத்துக்கொண்டிருக்கும் எந்த ஒரு விவாதப்பொருளுக்கும்திருச்சபையில் பதில்களைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று விசுவாசிகள் கற்று நிச்சயத்துக் கொண்டார்கள். அதற்காக வெளி உலகத்தில் விவாதிக்கப்படும் அத்துணை விவாதங்களுக்கும் சபைகளில் பதில் கொடுக்கப்பட வேண்டும் என்று நினைப்பதும் தவறு.

குறைந்த பட்சம் சுவிசேஷ ஊழியத்திற்கு தடையாயுள்ள ஒரு முக்கியமான பிரச்சனை இன்றைய பேசும் பொருளாயிருக்கிறது.அதற்கான வேதத்தின் பதில்களையாவது சபை வெளிப்படையாக பேச துணிய வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட ஜாதியே தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட உயர் குலத்தினர் , அதிலும் ஆண்களே ஆளப்பிறந்தவர்கள் என்பது வேதாகமத்தின் போதனையல்ல.
வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள யூத மத நம்பிக்கை, வாழ்க்கை முறை.

புதிய ஏற்பாடு எழுதின அத்துணை ஆசிரியர்களும் யூத மதத்தை வேண்டாம் என அதை விட்டு வெளியேறியவர்களே. புதிய வாழ்க்கைமுறையை இயேசு கிறிஸ்து துவக்கி வைத்தார். அவர் ஒழித்த யூத மத நம்பிக்கைகளின், சில தவறான வாழ்க்கை முறையை இன்றய நமது சபைகள் துணிந்து கைவிட்டு, இயேசுவின் போதனைகளை பின்பற்றத் துவங்கினால் இந்தியா மாபெரும் எழுப்புதல் அடையும்.

இரட்சிக்கப்படுகிறவர்களை அனுதினமும் சபையில் சேர்த்து வந்தார் என்ற வேதாகம கால எழுப்புதல் நம் தலைமுறையில் காண வேண்டும் என்று விரும்பு வோராவது புதிதாக சிந்திப்போம்.

புதிய ஏற்பாடு கற்றுத்தரும் வாழ்க்கைமுறையான கிறிஸ்துவுக்குள் ஆணொன்றும் இல்லை பெண்ணென்றும் இல்லை , யூதனென்றும் இல்லை கிரேக்கனென்றும் இல்லை, என்பதைத்தான் நாம் பின்பற்றுகிறோம் என்பதை இன்றைய இந்தியா நம்புமானால், நாம் கண்ணீருடன் கதறி அழுது போராடி அழைக்கிற எழுப்புதல் தானாக ஏற்பட்டுவிடும்.

உங்கள் வேதத்திலும் ஒரு உயர்குல ஜாதியும், மற்ற அனைத்தும் அதற்கு கீழான புறஜாதிகள் என்று தானே சொல்லப்பட்டிருக்கிறது.

பெண்ணாக பிறக்காததற்காக ஸ்தோத்திரம் என்ற ஜெபங்களும் ,பெண்களை கவனமாக மேலேவராவிடாமலும் பார்த்துக்கொள்கிறீர்களே என்ற கேலியும் கேள்விகளும் அடுத்த இரு வாரங்களில் நமது சபை மக்கள் தங்கள் அன்றாடக வாழ்க்கையில் தங்கள் நண்பர்கள் மூலம் எதிர் கொள்ள இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்ற நெருடலுடன் சபைக்கு வரும் விசுவாசிகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம். நமது வழக்கமான பிரசங்கம் பதில் கொடுக்குமோ? பழைய ஏற்பாட்டு வாழ்க்கைமுறையான ஜாதியப் பாகுபாடு, ஆணாதிக்கம் யூத மதத்தின் நம்பிக்கையே தவிர , கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டிய வேதாகமத்தின் போதனையல்ல என்பதை சபையாருக்கு கற்றுத்தருவது அவசியம். உலகத்திற்கு பதில் பேச அறிந்து கொள்வதற்காகவாவது, கற்றுக்கொடுப்போம். கடந்த காலங்களில் உள்ள தவறான முன்னுதாரணங்களை திரும்ப நினைப்பதற்காக , விவாதிப்பதற்காக இப்பதிவை வெளியிடவில்லை.

தற்காலத்திற்குத்தேவையான சீர்திருத்தங்களை எதிர்கால தலைமுறைகளாவது சிந்திக்கட்டும், பேசமுன்வரவேண்டும் என்ற ஆவலில் பதிவிடுகிறேன்.

கலை தேவதாசன்