“…பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” (யாக். 1:4).

ஆவியின் கனிகளில் ஒன்று நீடிய பொறுமையாகும். கர்த்தருடைய பிள்ளைகள் கிறிஸ்துவின் சாயலில் பூரணப்படுவதற்கு பொறுமை மிகவும் அவசியம். பொறுமையுள்ளவர்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருப்பார்கள்.

ஒரு சிறந்த ஆபரணம் செய்ய விரும்பும் தட்டான் அதிக பொறுமையாயிருக்க வேண்டும். அவன் இரும்பு, வெண்கலம் முதலியவற்றைத் தேடாமல், நல்ல பொன்னைத் தேடுகிறான். அதை பல முறைப் புடமிடுகிறான். அதிலுள்ள அழுக்கு, கழிவு முதலியவற்றை பொறுமையாய் நீக்குகிறான். மாத்திரமல்ல, சிறந்த வேலைப்பாட்டை, மிக நுணுக்கமாய் அந்த பொன்னில் அவன் செய்கிறான். ஒரு ஆபரணத்தை செய்யும்போது, இரவும் பகலும் உழைத்து மிகக் கருத்தோடு, மிக ஜாக்கிரதையோடு செய்து முடிக்கிறான்.

கர்த்தர் உங்களை விலையேறப்பெற்ற ஆபரணமாக மாற்றுவதற்காகவே, உங்களைப் பாடுகளின் பாதையிலும், உபத்திரவத்தின் குகைகளிலும் நடத்துகிறார். நீங்கள் பொறுமையை இழந்துவிடுவீர்களென்றால், அவருக்கு உகந்த ஆபரணமாய் உங்களால் விளங்க முடியாமல் போய்விடும். பொறுமை உங்களை அலங்காரமுள்ளவர்களாய் மாற்றும். யாக்கோபு எழுதுகிறார், “இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபுவின் பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்” (யாக். 5:11).

யோபுவின் பொறுமை பரீட்சிக்கப்பட்டபோது, அவர் சொன்னார், “நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” (யோபு 23:10). அப்படியே அவர் சுத்த பசும் பொன்னாக விளங்கினார். தன்னுடைய சிறையிருப்பின் காலங்களிலே யோபு மிகவும் பொறுமையாய் இருந்தார். சிறையிருப்பு மாறியதும் அவர் இரண்டத்தனையாய் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். வேதத்திலும் நீங்காத இடம் அவருக்குக் கிடைத்தது. பொறுமையைக் குறித்து அருமையாக போதிக்கக்கூடிய சிறந்த பக்தன் ஒருவர் உண்டென்றால் அது யோபுதான் அல்லவா?

தேவபிள்ளைகளே, எல்லா சூழ்நிலையிலும் பொறுமையாயிருங்கள். வேதம் சொல்லுகிறது, “நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப் பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவ விருட்சம் போல இருக்கும்” (நீதி. 13:12). நீங்கள் பொறுமையோடு காத்திருக்கும்போது, கர்த்தர் நிச்சயமாகவே பதில் தந்தருளுவார்.

தேவபிள்ளைகளே, கிறிஸ்துவின் பொறுமையை தியானித்துப் பாருங்கள். அவர் உலகத்தில் வாழ்ந்த நாட்கள் முப்பத்தி மூன்றரை வருடங்கள்தான். அதில் ஊழியத்தை ஆரம்பிக்கு முன் 30 வருடங்கள் பொறுமையாய் இருந்தார். பிதாவின் வேளைக்காக அவர் பொறுமையுடன் காத்திருந்ததினாலே அவரது ஊழியம் மிகுந்த ஆசீர்வாதமாய் அமைந்தது. கொஞ்ச கால ஊழியம் பெரிய பலனைத் தருகிறதாய் விளங்கியது.

நினைவிற்கு:- “ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார்… அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்” (ஏசாயா 30:18).