சிறுநரியும் குழிநரியும். உன்னதப்பாட்டு - 2 : 15. "திராச்சைத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும், சிறு நரிகளையும் நமக்கு பிடியுங்கள்"

சிறு நரி :
a. இது காட்டில் வசிக்கக் கூடியது.
b. இது இரவில் மட்டும் திராச்சைத் தோட்டத்திற்குள் செல்லும்.
திராச்சைப் பழங்களை தின்று தீர்க்கும்.
c. காலையில் திராச்சைத் தோட்டத்தை விட்டு வெளியேறும்.
d. அவ்வப்போது திராச்சைத் தோட்டத்திற்கு வந்து செல்லும்.

குழி நரி :
a. இதுவும் காட்டில் வசிக்கக் கூடியது.
b. திராச்சைத் தோட்டத்திற்குள் சென்று குழி தோண்டி படித்துக்கொள்ளும்.
c. குழி தோண்டி படித்துக் கொள்வதால் திராச்சைச் செடியை வேரற்று போகச் செய்யும்.
d. திராச்சைத் தோட்டத்தை வேரோடு அழிக்கும் வரை தோட்டத்தை விட்டு செல்லாது. நாம் செய்யும் தவறுகள் முழுவளர்ச்சி அடையும் போது அவைகள் " குழிநரிக்கு" ஒப்பிடப்படுகிறது. அவைகள் வளர்ச்சியடையாமல் சிறியதாக இருக்கும் போது " சிறுநரிகளுக்கு" ஒப்பாக இருக்கின்றன. இந்த நரிகளை மற்றவர்களுடைய நலனுக்காகவும், நமது நலன்களுக்காகவும் பிடிக்கும்படி வேதவாக்கியம் நமக்குக் கட்டளையிடுகிறது. வேதத்தில் கூறியுள்ள சில சிறு நரிகளை குறித்து இங்கு தியானிப்போம்.

1.சந்தேகம் :
இது மிகவும் அழிவை உண்டு பண்ணக் கூடியது. இது விசுவாசத்திற்கு விரோதமானதாகும். ‘சந்தேகம்’ என்ற குணம் “உலகத்தை ஜெயிக்கிற ஜெயத்தை” அழித்துப் போடுகிறது. (1யோவான் 5 : 4) விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியமாகும். (எபிரேயர் 11 : 6) தேவனையோ, அல்லது அவருடைய சத்திய வசனத்தையோ சந்தேகிப்பது அவரை அவமதிப்பதாகும். எனவே ‘சந்தேகம்’ எனப்படுகிற அந்த சிறுநரியை பிடிப்பது எத்தனை அவசியமாகிறது. இதை உடனடியாக தடை செய்யாவிட்டால் நிச்சயமாக நமது விசுவாசத்தை அழித்துப் போடும்.

2 . பயம் :
அவநம்பிக்கையும், சந்தேகமும் பயத்தை உண்டு பண்ணுகிறது. தேவனிடம் விசுவாசம் வைத்து, அவருடைய வசனத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற அவரது மகிமை நிறைந்த குணமாகிய அன்பை நாம் ருசிக்க கற்றுக்கொள்ளவேண்டும். இதற்கு எதிர்மாறாக இருக்கும் ‘பயம்’ என்கிற சிறுநரியை அகற்ற கற்றுக் கொள்ள வேண்டும். அன்பிலே பயமில்லை. பயப்படிகிறவன் அன்பிலே பூரணப்பட்டவன் அல்ல என்பதை (1யோவான் 4 : 8) இல் வேதமும் சாட்சி இடுகிறது.

3.கோள் சொல்லுதல் :

புறங்கூறுதல்
“உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள் சொல்லித்திரியாயாக” என்று லேவி 19 : 16 லும், “கர்த்தாவே யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? உத்தமனாய் நடந்து நீதியை நடப்பித்து, மனதார சத்தியத்தை பேசுகிறவன் தானே. அவன் நாவினால் புறங்கூறாமலும் தன் தோழனுக்கு தீங்கு செய்யாமலும், தன் அயலான் மேல் செல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான் என்று சங்கீதம் 15 : 1 – 3 இல் வாசிக்கின்றோம். எனவே கோள் சொல்லுதல், புறங்கூறுதல் என்ற சிறுநரியை நமக்காகப் பிடிப்பது எத்தனை அவசியமாகிறது? என்பதை நாம் அறிந்து கொள்கிறோம்.

4.சுகபோக வாழ்க்கை : " தற்பிரியர், பணப்பிரியர், வீம்புக்காரர், தூசிக்கிறவர்கள், அகந்தையுள்ளவர்கள், தாய்தகப்பன்மார்களுக்குக் கீழ்ப்படியாதவர், நன்றி அறியாதவர் போன்றோர்கள் தேவப்பிரியராயிராமல் சுகபோக பிரியராய் இருப்பர். ( 2 தீமோத்தேயு 3 : 2-4) என்றும் சுகபோகமாய் வாழ்கிறவன் உயிரோடே செத்தவன் ( 1தீமோதேயு 5 : 6) என்றும் வேதம் எச்சரிக்கிறது. எனவே சகோதர, சகோதரிகளே நாமும் சுகபோக வாழ்க்கை என்னும் சிறுநரியை அகற்ற போராட முயற்சிக்க வேண்டும் என நம்மை வேதம் எச்சரிக்கிறது.

5. பிறரது குறைகள் : நாம் நம்முடைய பெரிய தவறுகளை உணர்ந்து கொள்ளாமல், பிறரது சிறிய குறைகளை பற்றி பேசுவதும் தவறாகும். "நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? அல்லது உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல் உன் சகோதரனை நோக்கி சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப் போட்டடும் என்று நீ சொல்வதெப்படி? என்று கிறிஸ்து கூறுவதை லூக்கா 6 : 41,42 இல் வாசிக்கிறோம். இந்த காரியத்தை குறித்து பவுல் கூறும்போது,

“ஆகையால் மற்றவர்களை குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானலும் சரி, போக்கு செல்ல உனக்கு இடமில்லை. நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக் குறித்து சொல்லுகிற தீர்ப்பினாலே, உன்னைத் தானே குற்றவாளியாக தீர்க்கின்றாய் “இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கின்றதென்று அறிந்திருக்கிறோம் என்று ரோமர் 2 : 1,2 இல் பவுல் எச்சரிப்பதை வாசிக்கிறோம். இதை வாசிக்கும் தேவ பிள்ளைகளே, நாம் நமது தவறுகளை அல்லது அபூர்ணத்தை “மைக்ரோஸ்கோப்” கொண்டு பார்க்கவேண்டும். நமது தவறுகளை நோக்காமல் பிறரது தவறுகளை நோக்கும் பார்வை நம்மிடம் இருக்குமேயானால், அப்படிப்பட்ட சிறுநரியை உடனே நம்மை விட்டு அகற்ற பாடுபட வேண்டும். இல்லாவிடில், இந்த சிறுநரி நமது வாழ்க்கையை பாழாக்கிவிடும் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது.

குழிநரியின் குணாதிசயங்கள் :

1. பழிவாங்குதல் :
பிரியமானவர்களே பழிவாங்குதல் எனக்குறியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால் நீங்கள் பழிவாங்காமல் கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். அன்றியும் உன் சத்துரு பசியாயிருந்தால் அவனுக்குப் போஜனங் கோடு, அவன் தாகமாய் இருந்தால் அவனுக்கு பானங் கோடு. நீ அப்படி செய்வதினால் அக்கினிதழலை அவன் தலையின் மேல் குவிப்பாய், நீ தீமையினாலே வெல்லப்படாமல் தீமையை நன்மையினாலே வெல்லு என்று அப். பவுல் கூறுவதை ரோமர் 12 : 19 – 22 இல் வாசிக்கிறோம். எனவே நாம் சகோதரர்களை பழி வாங்காமல் தேவனிடம் எல்லாவற்றையும் ஒப்படைப்பதே நன்மை என்று பார்க்கிறோம். மேலும் சகோதரரே ஒருவருக்கொருவர் விரோதமாய் பேசாதிருங்கள். சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப் பேசி நியாயப்பிரமானத்தைக் குற்றப்படுத்துகிறான். நியாயப்பிரமானத்தைக் குற்றப்படுத்துவாயானல் நீ நியாயப்பிரமாணத்தின் படி செய்கிறவனாய் இராமல் அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய் என்று அப். பவுல் கூறுவதை யாக்கோபு : 4. 11 இல் வாசிக்கின்றோம். நாம் நியாயதிபதியாய் மாறுவோமேயானால் தேவனுக்கு சரிசமமாக நம்மை நிறுத்துவது போலாகிவிடும். தேவனுக்கு சரிசமமாக நினைப்பது சாத்தானின் முயற்சியாகும். நாமும் சாத்தானைப் போல் நம்மை தேவனுக்கு சரிசமமாக்கி மற்றவர்களை தேவனுக்கு ஒப்புக் கொடுப்போமாக! ” பழி வாங்குதல் “என்ற சாத்தானின் குணாதிசயமாகிய ‘ குழிநரியை’ நம்மிடத்திலிருந்து எடுத்தெரிய நாம் கடுமையாக முயற்சிக்க வேண்டும்.

2.ஜீவனத்தின் பெருமை :
ஜீவனத்தின் பெருமை என்பது ‘குழிநரியை’ வகையைச் சார்ந்ததாகும். “மனுஷனே நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார். நியாயஞ்செய்து, இரக்கத்தை சிநேகித்து உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்? எனவே தேவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பதெல்லாம் மனத்தாழ்மையை மட்டுமே. நாம் ஜீவனத்தின் பெருமையோடு இருக்கக்கூடாது என்பதை நமக்கு உணர்த்துவதற்காகவே “பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் என்று 1 பேதுரு 5 : 5 இல் எச்சரிக்கிறார். மேலும் பராக்கிரமசாலியாகிய பெனாயா, மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழை காலத்தில் அவன் இறங்கிப்போய், ஒரு கெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தை ( எதிராளியாகிய பிசாசு – கெர்க்சிக்கிற சிங்கம்) கொன்றுப் போட்டான். என்று 2சாமுயேல் 23 : 20 இல் வாசிக்கிறோம் கெபிக்குள் மறைந்திருந்த சிங்கம் என்பது, நமது இருதயத்தில் அல்லது சிந்தையில் நாம் அறியாமலே மறைந்து இருந்து நம்மை கெடுக்கப்பார்க்கும் “பெருமை” என்கிற குழிநரியை குறிக்கிறது. இந்த “பெருமை” என்கிற குழிநரியை குறிக்கிறது. இந்த பெருமை என்கிற பிசாசை கண்டுபிடிப்பது மிகக்கடினமாகும்,எப்படி குழிநரியானது குழிக்குள் மறைந்து பின்பு திராச்சைச் செடியை வேரோடு அழிக்குமோ அதைப் போலவே தேவப் பிள்ளைகளின் ஆவிக்குரிய வாழ்க்கையை பெருமை என்ற குழிநரி அழித்துவிடும். இதை வாசிக்கும் தேவப்பிள்ளைகளே, நாமும் கூட “பெருமை” என்ற குழிநரியை நம்மை விட்டு அடியோடு அழிக்க முயற்சிக்க வேண்டும் என்ற எச்சரிப்பை இப்பாடம் நமக்கு உணர்த்துகிறது அல்லவா!

இதை வாசிக்கும் சகோதர, சகோதரிகளே நம்மிடத்தில் காணப்படுகிற சிறுநரிகள் மற்றும் குழிநரிகள் எது என்பதை நாம் கண்டறிந்து அவற்றை நம்மை விட்டு அகற்ற நாம் பாடுபட வேண்டும். நம்முடைய பெலவீனங்களில் தேவ பெலத்தை நாட கற்றுக் கொள்ள வேண்டும். நமது பெலவீனங்களில் தேவன் தாமே தமது பெலத்தைத் தந்து சிறு நரிகளையும், குழிநரிகளையும் நம்மை விட்டு அகற்ற, கிருபை செய்வாராக.

என்னுடைய பிரசங்கத்தில் இருந்து…….
எழும்பி பிரகாசி