
இயேசு கிறிஸ்து பாவமற்றவராக இருந்தும், தவறு செய்யாதவராக இருந்தும் குற்றம் சாட்டப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.
அந்த சிலுவையின் மத்தியிலும் தவறு இழைக்காமல் பரிசுத்தர் என்ற தம்மை வெளிப்படுத்தினார். தமக்கு விரோதமாக விபரம் அறியாமல் சிலுவையில் பரியாசம் செய்த, சிலுவையில் தனக்கு தண்டனையை நிறைவேற்றின காவலாளிகள் மற்றும் வழிப்போக்கரை மன்னித்து, எல்லார் எதிர்த்து அவரை சிலுவையில் நிந்தித்த போதும் தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த கள்வனுக்கு பரதீசில் இடத்தை பரிசாக கொடுத்தும், நிற்கதியாக தூரத்தில் நின்ற தன் தாயின் கடமையை நிறைவேற்றியும், தான் கைவிடப்பட்ட சூழலிலும் பிதாவிடம் இறைஞ்சி நின்றும், வலிகள் எல்லாவற்றையும் தாண்டி தன் மரணத்திற்கு பின் வரும் ஆத்ம வருத்தத்தின் பிரதிபலனை கண்டு தாகம் அடைந்தும், பிதா தமக்கு கொடுத்த எல்லா கடமையை முடித்தேன் என்று கூறி, தான் எங்கிருந்து வந்தாரோ அதே இடத்திற்கு தன் ஆவியை ஒப்பு கொடுத்ததை எல்லாம் பார்க்கும் போது இவைகள் எல்லாம் அன்பின் அடிப்படையில் மனிதனுக்காக வெளிப்பட்ட இரட்ச்சிப்பே!
ஏனெனில் தேவன் அன்பாகவே இருக்கிறார். நாம் பாவிகளாக இருக்கையில் அன்பு கூர்ந்தார். முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தார். அன்பு கூர்ந்த படியால் தான் கிருபாதார பலியாக மரித்தார். அன்பில்லாதவன் அவரை அறியமுடியாது. எப்படி தமது அன்பை விளங்க செய்தார் என்று தொடர்ந்து பார்ப்போம்.
A. தம்மை தாமே வெறுமையாக்கி அன்பு கூர்ந்தார்.
தனது அந்தஸ்து, தனது அபிசேகம், தனது வல்லமை, தனது அதிகாரம் எல்லாவற்றையும் இற்க்கி வைத்து தன்னை வெருமையாக்கி தேவ சித்தத்திற்கு ஒப்பு கொடுத்தார். இது கெத்சமனே தோட்டத்தில் இருந்தே வெளிப்பட்டது.
விளைவு: எல்லா நாமத்திற்கு மேலான நாமம் அவருக்கு கொடுக்கப்பட்டது. எனவே பெயர் பிரஸ்தாபம் வேண்டுமெனில் முதலில் நான் என்கிற அகம்பாவம் ஒன்றுமில்லை என்கிற வெறுமையாக மாற வேண்டும்.
B. பகையை சிலுவையில் ஆணி அடித்து அன்பு கூர்ந்தார்
கர்த்தர் பரிசுத்தர், அவர் தீமை செய்கிறவர் அல்ல. அதினால் தான் பகையினால் அவரை விரோதித்தவர்களுக்கு பகையினால் பரிகாரம் செய்யாமல், தீமையை நண்மையினால் வென்றார். அவர்களை போல நில்லாமல் தமது அன்பை விளங்க செய்தார்.
விளைவு:தீமையை நன்மையால் வென்று வெற்றி சிறந்தார். வாழ்வில் எல்லா காரியத்திலும் முடிவு பரியந்தம் வெற்றி கிடைக்க வேண்டுமெனில், ஜெயம் கிடைக்க, தீமைக்கு பதிலாக நன்மை செய்து தீமையை நன்மையால் முறியடிக்க வேண்டும்.
C. பாவிகளால் விபரீதங்களை சகித்து தமது அன்பை வெளிப்படுத்தினார்.
தனக்கு விரோதமாக பிறரால் செய்த தீமைகளை, அநியாயங்களை, பறியாசங்களை, நிந்தைகளை சகித்தார். எதிர்வினையாற்றி தமது வல்லமையை நீரூபிக்க போக வில்லை. விட்டு கொடுத்தார்
விளைவு: சிங்காசனத்தில் உயர்த்தி வைக்கப்பட்டார். பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்தார். வாழ்வில் உயர்ந்த சிகரங்களை அடைய சிலதை சகித்து விட்டுக்கொடுக்க வேண்டும். பிறரது தீதான காரியங்களுக்கு எதிர்வினையாற்றாமல் சகித்து விட்டுக் கொடுத்தால் சிங்காசனம் நமக்கு காத்து இருக்கிறது.
D. பலவீனமாகி பிறது பெலவீனங்களை ஏற்றுக் கொண்டார்
வல்லமை படைத்தவர் என்ற நிலையில் இருந்து, பலசாலி என்கிற நிலையில் இருந்து, பிறரது இயலாமைகளை, ஏற்றுக் கொண்டார். தன்னை பலவான் என்று நீருபிக்க முயல வில்லை. பெலவீனன் போன்றே தோற்றமளித்தார். அசட்டைப் பண்ணப்பட்டார். அழகு இழந்தார். காயப்பட்டார்.
விளைவு: சுகம் கிடைக்கிறது. அவரது காயங்கள் தழும்புகள் ஆனது. அதினால் நாம் சுகம் அடைகிறோம். பிறருக்கு சுகம் கிடைக்க அவர்களது பெலவீனங்களை கிறிஸ்து ஏற்றுக்கொண்டது நாம் ஏற்றுக்கொண்டால் நம்மால் பிறருக்கு சுகம் உண்டாகும்.
E. பாடுகளை சுமந்தார். சிலுவை சுமந்து தமது அன்பை விளங்கப் பண்ணினார்
பாடுகளுக்கு அவர் பயந்து ஓட வில்லை, அதை பிறரிடம் தள்ளி விடவில்லை. அவற்றை சுமந்தார். சிலுவையில் தன்னை அறைய விட்டுக்கொடுத்தார். சிலுவையில் அத்தனை வலிகளை தாங்கினார். தன்னை கீழ்த்தரமாக நடத்த அதிகாரிகள் கையில் தம்மை ஒப்பு கொடுத்தார்.
விளைவு: ஆளுகை கொடுக்கப்பட்டது. சகல அதிகாரம் அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆளுகை அதிகாரம் வேண்டுமெனில் பாடுபடவேண்டும். நன்மை செய்து பாடுபட வேண்டும். அது தான் நம்மை குறித்த தேவ சித்தமாக இருக்கிறது.
F. ஆக்கினைக்கு உட்படுத்தப்பட்டு அடிக்கப்பட்டு அன்பை விளங்க செய்தார்
பிறர், நாம் செய்த மீருதலுக்காக அடிக்கப்பட்டு நிந்திக்கப்பட்டார். பிறரது பழிச்சொல்லை ஏற்றுக்கொண்டார். முதுகில், கன்னத்தில், தலையில், கைகளில் அடிக்கப்பட்டார். கோலினால், சாட்டையால், கைகளால், ஆணிகளினால், முடமுடியால் அடிக்கப்பட்டார்.
விளைவு: புஸ்தகம் திறக்க அதிகாரம், முத்திரையை உடைக்க அதிகாரம். கனம் மகிமை கொடுக்கப்பட்டு, எல்லாரும் பணிந்து கொள்ளும் ஆராதனைக்கு உரியவராக மாற்றப்பட்டார். நமக்கு கனம் மரியாதை கிடைக்க ஒரே வழி பிறரது பழிச்சொல்லை ஏற்றுக்கொண்டு, அடிக்கப்பட விட்டு கொடுக்க வேண்டும்.
G. தன் சரீரத்தை கிழிக்க விட்டு கொடுத்து இரத்தம் சிந்தி தமது அன்பை விளங்கச் செய்தார்
தன் மாம்ச சரீரத்தில் கிழிக்க விட்டு கொடுத்தார். வலியை தாங்கி கொண்டு, இரத்தம் சிந்தினார். எந்த சரீரம் பிறருக்கு ஆசீர்வாதமாக இருந்ததோ அந்த சரீரத்தின் முழு பகுதியையும் விட்டு கொடுத்து, தன் ஜீவனை விட்டுக் கொடுத்தார். அவரது தியாக பலி விலையேரப்பெற்றது.
விளைவு: புதிய உடன்படிக்கை ஏற்படுத்தி, ஒப்புரவாக்கி, நீதிமான்களாக்கி, பாவத்தை சுத்திகரித்து, நம்மை மீட்டு ஒரு புதிய மார்க்கத்தை கொடுத்தார். அதுவே வழியும் சத்தியமுமாக இருக்கிறது. ஜென்ம சுபாவ சரீரத்தை சாக விட்டுக் கொடுக்க வில்லையேனில் அந்த பரலோக ராஜியம் போக முடியாது. நித்திய ஜீவன் அடைய முடியாது.
இப்படி தமது அன்பை விளங்கப் பண்ணி நமக்கு ஜீவனை கொடுத்து நமக்காக உதவி செய்யும், பரிந்து பேசும், ஸ்தலத்தை ஆயத்தம் செய்யும் இயேசு கிறிஸ்துவை போன்று தேவன் வேறு யாரேனும் உண்டோ? அவரே இரட்ச்சகர்! அவரே மோட்சத்திற்கு வழி மட்டுமன்றி வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திற்கும் அவரே வழி! இன்று அவரை விசுவாசித்து ஏற்று கொண்டால் அவரே இரட்ச்சகர் என்று அறிய முடியும். ஏனெனில் அவராலன்றி விடுதலை மற்றும் இரட்ச்சிப்பு இல்லை. இந்த உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்கு பைத்தியமாக தான் இருக்கும் ஆனால் விசுவசிப்பவர்களுக்கோ அது தேவப்பெலன். அந்த தேவ பெலனை பெற்றுக்கொள்ளுங்கள். கர்த்தர் தமது கிருபையை தருவாராக
செலின்