கடந்த வாரம் எனது நண்பர் (இந்து மதத்தவர்) வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அடியேன் வீட்டிற்குள் சென்றவுடன் என்னை ஒவ்வொரு அறைக்கும் அழைத்து சென்று அறையில் உள்ள வேலைப்பாடுகளை காண்பித்து தனது வீட்டை குறித்து மேன்மையாக பேசினார்.

உலக மக்கள் தங்கள் அழகு, அந்தஸ்து, செல்வம், வஸ்திரம், வீடு, கார் போன்றவற்றை மற்றவர்களுக்கு காண்பிக்க பிரயாசபடுகின்றனர். ஆனால் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் இயேசுவை மற்றவர்களுக்கு காண்பிப்பதே நமது வாழ்க்கையில் இலட்சியமாக இருக்க வேண்டும்.

இயேசு கிறிஸ்துவை காண்பித்த(வர்கள்)வைகள்

1) நட்சத்திரம் (மத் 2:9): நட்சத்திரம் இயேசு கிறிஸ்துவை சாஸ்திரிகளுக்கு காண்பித்து. இயேசு நமது உள்ளத்தில் பிறந்திருப்பதை நாம் உலகமக்களுக்கு காண்பிக்க வேண்டும்.
மத் 2:9 “முன் சென்றது” முன் மாதிரியான ஜீவியம். நமது செயல்கள், நடத்தை, வார்த்தைகளில் பரிசுத்தம் காணப்பட வேண்டும். மற்றவர்கள் நம்மை பின்பற்றும் போது அவர்களை கிறிஸ்துவிடம் நாம் கொண்டு போய்விட முடியும். (மத் 2:10) ல் நட்சத்திரத்தை கண்ட போது சந்தோஷம் அடைந்தார்கள். அது போல நமது ஜீவியத்தை பார்த்து மற்றவர்கள் சந்தோஷம் அடைய வேண்டும்.

2) ஒரு பாவியாகிய ஸ்திரி (யோ 4:29) ல் அவரை வந்து பாருங்கள் என்கிறாள். நமது தனிப்பட்ட ஜீவியத்தில் இயேசு நமக்கு செய்த நன்மைகளை, அற்புதங்களை நாம் அநேகருக்கு சொல்லி இயேசுவை வந்து பாருங்கள் என்று சொல்ல வேண்டும். இந்த ஸ்திரி தன்னுடைய சாட்சியை மற்றவர்களுக்கு அறிவித்தாள். இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் சாட்சியில் உண்மை இல்லாததினால் அநேகரின் இரட்சிப்புக்கு இடறலாக இருக்கிறார்கள். தேவ ஐனமே உனது சாட்சி எவ்வாறு உள்ளது ?

3) யோவான்ஸ்தானகன் (யோ 1:29) ல் “இதோ தேவ ஆட்டுக்குட்டி” என்கிறார். யோவான்ஸ்தானகனும் இயேசுவை காண்பித்தார்.

4) தூதன்(மாற்கு 16:6) தூதன் “இதோ அவரை வைத்த இடம்” என்று இயேசுவின் உயிர்த்தெழுதலை அறிவித்தான். நாமும் இயேசு உயிரோடு இருப்பதை நமது ஜீவியத்தின் மூலம் மற்றவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

தேவ ஜனமே உனது ஜீவியத்தின் மூலம் இயேசு வெளிப்படுகிறாரா ? எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
(2 கொரிந்தியர் 2:14)