பழைய வருட தேவ செய்தி:


ஆண்டு இறுதியில் நாம் செய்ய வேண்டியவைகள்:


1) நினைவு கூறுங்கள்:

அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும் அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூறுங்கள். (1 நாளாகமம் 16:13)

மூன்று காரியங்களை நினைவு கூறுங்கள்:

  • அதிசயங்களை நினைவு கூறுங்கள்
    (இயற்கைக்கு அப்பாற்பட்டு தேவன் செய்த காரியங்கள்)
  • அற்புதங்களை நினைவு கூறுங்கள்
    (வேண்டிக்கொண்ட காரியங்களில் தேவன் செய்த காரியங்கள்)
  • வாக்கின் நியாயத்தீர்ப்புகளை நினைவுகூறுங்கள்
    (தேவன் கொடுத்த வாக்குதத்தங்களும், அவைகளின் நிறைவேறுதல்கள்)

உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிலெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்; இந்தப் பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்துவருகிறதை அறிவார்; இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார்; உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்று சொல் என்றார். (உபாகமம் 2:7)

  • கையின் கிரிகைகளை ஆசீர்வதித்தார்
  • வனாந்திர வழியாய் நாம் வந்ததை அறிந்திருந்தார்
  • எல்லா சூழ்நிலையிலும் தேவன் நம்மோடிருந்தார்
  • ஒரு குறைவின்றி நடத்தினார்

2) நன்றி கூறுங்கள்

  • நினைவு கூர்ந்து அவைகளுக்காக நன்றி கூறுங்கள்

தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.
(கொலோசெயர் 3:15)

(சங்கீதம் 103:1-5) என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது.

மேற்கண்ட வசனங்கள் கூறும் தேவக்கிரிகைகள்:

  • அக்கிரமங்களை மன்னித்தார்
  • நோய்களை குணமாக்கினார்
  • ஜீவனை மரணத்திற்கு விலக்கி காத்தார்
  • கிருபையினாலும் இரக்கத்தினாலும் முடிசூட்டினார்
  • நன்மையினால் வாயை திருப்தியாக்கினார்
  • நீடிய ஆயுளை தந்திருக்கிறார்.

3) ஆராய்ந்து பாருங்கள்:

ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; (1 கொரிந்தியர் 2:15)

  • தினமும் ஜெபித்தோமா?
  • தினமும் வேதம் வாசித்தோமா?
  • 52 வாரமும் ஆராதனைகளில் பங்கு பெற்றோமா?
  • உண்மையாய் தேவனுக்கு கொடுத்தோமா?
  • நம்மால் இயன்ற ஊழியம் செய்தோமா?
  • தீர்மானங்களை / பொருத்தனைகளை நிறைவேற்றினோமா?
  • பெற்றோர், கணவன், மனைவி, பிள்ளைகள், எஜமான், ஆசிரியர் இவர்களிடம் நாம் உண்மையாக இருந்தோமா?
  • யார் மீதாவது கசப்பு, வெறுப்பு உண்டா?
  • யாரையாவது என் வார்த்தையால் காயப்படுத்தியிருக்கிறோமா?
  • நான் யாருக்காவது இடறுதலாக இருந்தேனா?
  • ஆவிக்குரிய வாழ்வில் சிறிதேனும் நான் வளர்ந்துள்ளேனா?
  • அதிக நேரம் நான் யாரோடு, எதற்காக செலவிட்டேன்? அதன் விளைவு என்ன?
  • எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை உண்மையாய் செய்தேனா?
  • செய்ய வேண்டியதை செய்ய வேண்டிய நேரத்தில் செய்தோமா?

நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.
(1 கொரிந்தியர் 11:31)

4) அறிக்கையிட்டு மனம்திரும்புங்கள்:

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
(நீதிமொழிகள் 28:13)

யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்.
(யோசுவா 3:5)

இந்த ஆண்டு நாம் அறிந்தோ அறியாமலோ செய்த குற்றங்களை தேவனுக்கு தெரியப்படுத்தி, தேவ இரக்கம் பெறுவோமாக.

  • தப்பிதங்களுக்காக மனம் வருந்துங்கள்
  • தப்பிதங்களை தேவனிடம் அறிக்கை செய்யுங்கள்
  • விட்டு விட தீர்மானிங்கள்
  • மன்னிப்பை பெற்றுக்கொள்ளுங்கள்

5) தீர்மானம் பண்ணுங்கள்:

தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.
(தானியேல் 1:8)

புதிய ஆண்டில் தேவனுக்கு பிரியமானதை செய்ய இன்றே ஒரு தீர்மானத்தை உங்கள் இருதயத்தில் செய்துகொள்ளுங்கள்.

வருகிற புதிய ஆண்டில் தீர்மானத்தில் உண்மையாயிருந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

திருமதி. பிளசி பெவிஸ்டன் (மதுரை)