இன்றைய பிரசங்கியார்களை விழ தள்ளும் ஏழு விதமான பிரசங்க வஞ்சனைகள்

Share this page with friends

இன்றைய பிரசங்கியார்களை விழ தள்ளும் ஏழு விதமான பிரசங்க வஞ்சனைகள் . இன்று பிரசங்கம் பலவிதங்களில் பிரபலம் அடைந்து வருகிறது.அதுவும் குறும் செய்தி இன்று மிகவும் பிரபலம் அடைந்து விட்டது. இந்த பிரசங்க கலை மற்றும் திறமை உள்ளவர்கள் பெரும்பாலும் பிரபலியம் அடைந்து விடுகின்றனர். இது ஒரு கலை என்றும், இதை கற்க வேண்டும் என்று பெரும்பாலும் முயற்ச்சி எடுத்து கற்று கொள்கின்றனர். எனவே தான் பிரசங்க சாஸ்திரம் என்ற ஒரு பாடமே இறையியல் கல்லூரிகளில் கற்று கொடுக்க படுகிறது.

வியாக்கியான பிரசங்கம், மறை விளக்க பிரசங்கம், ஒப்பீட்டு பிரசங்கம், அகராதி பிரசங்கம், கருத்துரை பிரசங்கம், உவமை பிரசங்கம், உருவக பிரசங்கம், தோன்றல் பிரசங்கம், கதை பிரசங்கம், சரித்திர பிரசங்கம், அரசியல் பிரசங்கம், தத்துவ பிரசங்கம் மற்றும் மத மார்க்க நெறி பிரசங்கம் என்று அடுக்கி கொண்டே போகலாம்.

??ஆனால் கிறிஸ்து வெளிப்படுத்திய பிரசங்கம் அவரது பரலோக அல்லது நித்திய வாழ்வியல் முறையை தான் அதிகாரத்தோடு போதித்தார், உபதேசித்தார், பிரசங்கித்தார், உரையாடினார் என்று வேதத்தில் பார்க்கிறோம். எனவே கிறிஸ்துவில் அழைக்கப் பட்ட நாம் அவரது வழியில் தான் நடந்து கொள்ள வேண்டும்! வேறு வழியில்லை ஆனால் அப்படி நடக்கிறதா! அதுவும் இல்லை! எனவே நம்மை விழ வைக்கும் சில வஞ்சனைகளை தொடர்ந்து கவனிப்போம்.

A. பிரமிப்பு அடைய அல்லது ஆச்சரியமூட்டும் பிரசங்கங்கள்.

வேதத்தில் ஒரு அற்புதத்தை எடுத்து, அல்லது தங்கள் வாழ்வில் நடந்த ஒரு அற்புதத்தை எடுத்து, அற்புதம் செய்தவரை பொற்றாமல் அந்த அற்புதத்தை மட்டும் முன்னிறுத்தி அதை பெரிதாக வைத்து வேடிக்கை வித்தை காட்டுவதே இந்த பிரசங்கத்தின் நோக்கம். இவர்கள் அடிக்கடி சொல்லும் பதம் “அற்புதத்தை பாருங்கள்”.

பேதிருவுக்கும் இந்த சோதனை வந்தது. அந்த முடவன் குதித்து நடந்த உடனே எல்லாரும் ஆச்சரியப்பட்டு, பிரமித்து, ஆ என்று வாயை பிளந்து நின்ற போது, பேதுரு சொன்னார், நீங்கள் ஆச்சரியப் படுவது என்ன? இவனை சுகம் ஆக்கியது நாங்கள் அல்ல! இயேசு கிறிஸ்துவின் நாமமும், இவனுக்குள் இருந்த விசுவாசம் தான். எனவே மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை ஏற்று கொள்ளுங்கள் என்றார்.

பிரசங்கத்த்தில் அற்புதம் வேண்டும் ஆனால் அற்புத காரணர் இல்லையெனில் அது வீணானது. எனவே வித்தை காட்டும் வித்தகற்களாக அல்ல, கிறிஸ்துவை வெளிப்படுத்தும் பிரசங்கியார்களாக மாற கர்த்தர் விரும்புகிறார்.

இயேசு உயிர்தேளுந்த பிற்பாடு ஆச்சரியமும், பிரமிப்பும் அடைந்த சீடர்களில் அநேகர் அவரை விசுவாசியாமல் போனதின் நிமித்தம் அவர் அவர்களை கடிந்து கொண்டாராம். எனவே அற்புதங்கள் கிறிஸ்துவின் நாமத்தில் நடப்பது எதற்கு! அவரை விசுவாசிக்க! அந்த நோக்கத்தை நிறைவேற்ற வில்லை எனில்! நாம் பண்ணும் பிரசங்கம் விருதாவாகும்.

B. சுயபச்சாதாப பிரசங்கம்.

தங்களது தேவைகள் மட்டும், தாங்கள் ஊழியத்தில் பட்ட பாடுகள் இவைகளை முன்னிறுத்தி தங்கள் மேல் பரிவை ஏற்படுத்த முயற்ச்சி செய்யும் ஒரு பரிதாப பிரசங்கம் ஆகும்.

நாங்கள் என்ன பாடு பட்டோம் தெரியுமா? எப்படி நிந்திக்க பட்டோம் தெரியுமா? அதினால் தான் நாங்கள் ஆசீர்வதிக்க பட்டோம் என்று தங்களை சுற்றியே வந்து தங்களை ஒரு பொருட்டாக எண்ணி அதினால் சில நன்மைகளை அடைய விரும்பும் ஒரு பிரசங்கம்.

நாம் தான் பாடு படுகிறோம் என்கிற ஒரு தோற்றத்தை வரவழைத்து அல்லது, எங்களது இந்த தேவை நிறைவேற வில்லயெனில் என்று எப்படியாவது தங்களுக்கு நேராக ஒருவித தயவை பெற எடுக்கும் தந்திர பிரசங்கம் தான் இது.

கிறிஸ்து பட்ட பாடுகளை விடவா? நாம் பாடுபடுகிரோம், அப்போஸ்தலர்கள் பட்ட பாடுகளை விடவா நாம் பாடுபடுகிரோம்! கிறிஸ்துவின் பாடுகளை, சிலுவையை மட்டும் உயர்த்த அழைக்க பட்ட நாம் அதில் தவறினால் சிலுவையின் உபதேசத்திர்க்கு நாம் எதிராளிகளே! எனவே கிறிஸ்துவின் மரணத்தில், பாடுகளின் மேன்மையை எடுத்து சொல்லி, அதினால் உண்டாகும் நித்திய ஜீவனை பிரசங்கம் செய்ய அழைக்க பட்டு உள்ளோம் என்று அறிய வேண்டும்.

ஆனால் கிறிஸ்துவின் மகிமைக்காக பட்ட பாடுகள், அனைத்தையும் அவரது மேன்மைக்காகவும் பிறரது ஆருதலுக்காகவும் நாம் சொல்வதில் தவறில்லை. ஆனால் அதுவே வாழ்நாள் முழுவதும் சாட்ச்சி என்று போய் கொண்டு இருந்தால் அது நிலைப்பதும் இல்லை. மேகம் போன்ற திரளான சாட்ச்சிகள் நமக்கு முன்பாக இருக்கிறதே! நாம் செய்ய வேண்டியது என்ன! பாரமான யாவற்றையும் நெருங்கி நிற்கிற பாவத்தையும் உதறி தள்ளி விட்டு இலக்கை நோக்கி, கிறிஸ்துவை நோக்கி ஓட அழைக்க பட்டு இருக்கிறோம். அதை பிரசங்கம் செய்யவும் அழைக்கப்பட்டே இருக்கிறோம்.

C. உணர்ச்சி வசப்படுத்தும் பிரசங்கம்.

வேதத்தில் இருக்கும் உணர்ச்சிபூர்வமான சம்பவங்களை தேடி கண்டு பிடித்து, இல்லையெனில் வாழ்வில் நடந்த உணர்ச்சிபூர்வமான சம்பவங்களை முன் வைத்து, சிரிக்க வைத்தல், அழ வைத்தல், ஆசைகளை தூண்டுதல்.

பெரும்பாலும் இவர்கள் உலகபிரமான மேன்மைகளை குறித்தும், அந்த உணர்வுகளை குறித்தும் பேசி, தேவ சத்தத்திற்கு மற்றும் சித்தத்திற்க்கு அடுத்த காரியங்களை விட்டு விடுவார்கள்.

உலகில் நாம் கம்பீரமாக வாழ வேண்டும். ஏனெனில் நாம் ராஜாக்களின் பிள்ளைகள் என்று உணர்ச்சிகளை கிளறி விடுவார்கள். அப்படி நடக்க வேண்டும் இப்படி நடக்க வேண்டும் என்று கற்பனை உலகில் மிதக்க வைப்பார்கள்.

மெய்யாகவே நாம் ராஜாவின் பிள்ளைகள் தான். உன்னத ஆசீர்வாதங்கள் நமக்கு இருக்கிறது தான் ஒரு சந்தேகம் வேண்டாம். ஆனால் அதை மட்டும் தேடுவது நமது நோக்கம் அல்ல, ராஜாவை தேடி அவரை நேசித்து, அவரை போல இருப்பது தான் நமக்கு கொடுக்க பட்ட கட்டளை. நமது ராஜ பூமியில் எப்படி இருந்தார்! அந்த சிந்தை இல்லாமல், அவரது அன்பு, பரிசுத்தம் மற்றும் தாழ்மை இல்லாமல் அவரது மேன்மையை மட்டும் விரும்பினால் அது எப்படி சாத்தியமாகும்! அவரது மேன்மையை யாருக்கு கொடுக்க சித்தம் உண்டோ அவர்களுக்கு கொடுப்பார்! அதை நாம் இச்சிக்கலாமா?

D. சுயமேன்மை படுத்தும், தம்பட்டம் அடிக்கும் பிரசங்கம்.

இந்த கூட்டம் எப்போதும் தங்களை ஒரு பொருட்டாக எண்ணி தங்கள் வாழ்வில் நடந்த உயர்வான சம்பவங்களை மட்டும் சொல்லி தங்களை மேன்மையாக காட்டும் ஒரு கூட்டம். தங்கள் மிஷன், தங்கள் ஸ்தாபனம், தங்கள் ஃபீல்டு என்று தங்களை மேன்மை படுத்தி சுவிசேஷம் அறிவிக்கும் இடத்தில் கூட தங்களை மேன்மை படுத்தி, பிறரை மட்டம் தட்டி கிறிஸ்துவை அறிவியாமல் விட்டு விடுவர்.

தங்களது அழைப்பு, தங்களது கிருபை, தங்களது வரங்கள், தங்களது வெளிநாட்டு பிர்யானங்கள் போன்றவற்றை எப்பொழுதும் selfdisplay செய்து கொண்டே இருப்பார்கள். தங்களுக்கு இருக்கும் அனுபவத்தில் இருந்து தொடங்குவார்கள்.

தங்களது தரிசனங்கள், வெளிப்பாடுகளை வைத்து தாங்கள் தேவனுடைய பக்கத்தில் எப்போதும் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை மக்களிடம் உருவாக்கி அதின் மூலம் தங்களை விசேஷமாக கருதுவார்கள். பெரும்பாலும் இவர்கள் யாராவது ஒரு பெரிய vip உடன் தங்களை எப்போதும் அடையாள படுத்தி கொண்டே இருப்பார்கள்.

கிறிஸ்துவை விட நம்மையோ, நமது உயர்வையோ, நமது தரிசனத்தையோ மேம்படுத்தி நமது பெலவீனத்தை கருத்தில் கொள்ள வில்லை எனில் நாம் விழுந்து போவோம். அதினால் தான் பவுல் தன் பெலவீனத்தில் மேன்மை பாராட்டுகிறார். எப்போது நமது பெலவீனத்தை நாம் தைரியமாக அறிக்கை செய்கின்றோமோ அப்போது கிறிஸ்து நம்மில் மகிமை அடைவார். அவரது கிருபை நம்மை தாங்கி விடுகிறது. நான் அதை செய்தேன், இதை செய்வேன், நான் அப்படிப்பட்டவன் இப்படிப்பட்டவன் என்று மேன்மையாக சொல்லும் போது கவனிக்க வேண்டும் Lucifer ம் அதை தான் செய்து விழுந்து போனான். பரிசுத்த ஆவியானவர் நம்மை கொண்டு என்ன செய்ய நினைக்கிறாரோ அதை செய்ய விட்டு கொடுக்க வேண்டும்.

E. அதிக எதிர்பார்ப்பை தூண்டி விட்டு ஏமாற்றம் அடைய செய்யும் பிரசங்கம்.

கிறிஸ்துவின் வசனத்தில் உள்ள விடுதலையை தவறாக நபர்களிடத்தில், தவறான இடத்தில் சொல்லி எதிர்பார்ப்பை தூண்டி விட்டு ஏமாற்றம் அடைய செய்வது ஆகும்.

தேவை இல்லாத ஆணியை பிடுங்குவது போன்றதாகும். உதாரணமாக சவாலுக்காக யாராவது வந்து தான் தண்ணீரில் நடக்கிறேன் என்று சொல்லி குளத்தில் நடக்க முயற்ச்சி செய்தால் எப்படி இருக்கும். அது போன்றே சத்தியத்தின் எதார்த்தம் தெரியாமல், சூழ்நிலை புரியாமல், ஏதாவது சொல்கிறேன் என்று ஊகித்து சொல்லி விழி பிதுங்குவது ஆகும்.

எல்லாம் உலகில் optimist பேசுகிறது போல நன்மையை மட்டும் பேசி தீமையை சரி செய்யாமல் விட்டு விடுவது தான் இங்கு பெரிய சிக்கலையே கொண்டு வருகிறது. நமது திராணி, அழைப்பு, யதார்த்தம் அறிந்து செயல்பட வேண்டும்.

கிறிஸ்துவின் மேல் விசுவாசமும், நம்பிக்கையும் வைக்கவே நமது பிரசங்கம் தூண்டுகோலாக இருக்க வேண்டும். நன்மையை மட்டும் பேசி நன்மை நடக்கும் என்று சொல்வதற்கு நாம் அழைக்க படவில்லை. கிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசத்தில் வரும் நன்மைகளை பேசவே கர்த்தர் நம்மை தெரிந்து கொண்டு இருக்கிறார் என்கிற சத்தியத்தை தெளிவு படுத்த வேண்டும். கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசம் இல்லாமல் எத்தனை வார்த்தைகளை கொண்டு நம்பிக்கை ஊட்டினாலும் அது முடிவில் ஏமாற்றமே தரும்.

F. மாய, மிகைப்படுத்தி பேசும் பிரசங்கம்.

உள்ளுக்குள் ஒன்று வைத்து விட்டு வெளியே நாசுக்காக பேசி தன்னை காப்பாற்றி கொள்ளும் விநோதமான ஒரு பிரசங்கம்.

வெளியரங்கமான காரியங்களுக்கு இவர்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். பிரசங்கம் செய்யும் போது வெள்ளை வஸ்திரம் போட வில்லையேணில் ஆவியானவர் அசைவாட மாட்டார் என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார்கள் ஆனால்..

இவர்கள் ஒன்றில் கூட்டி, இன்னோற்றில் குறைத்து பேசும் தகுதி படைத்த வல்லவர்கள், போட்டு வைத்து பூ வைத்து கற்பனை நயமாக பேசி, தங்களுக்கு தேவையானதை cut and paste செய்து சாதனை படைப்பார்கள். சத்தியத்தை சத்தியமாக பேச கர்த்தர் நம்மை அழைத்து இருக்கிறார். வசனத்தில் ஒன்றும் கூட்டவும் கூடாது குறைக்கவும் கூடாது என்று வேதம் நமக்கு கூறுகிறது.

G. கடைசியாக வசீகர கவர்ச்சிஊட்டும் பிரசங்கம்.

இவர்கள் ஒரு அல்லேலூயா சொன்னாலே பத்து வீடு கிடைக்கும் என்று ஏதாவது சொல்லி தங்கள் காரியத்தை செய்து விடுவார்கள்.

வேதத்தில் இருக்கும் வாக்குதத்தங்களை ஆசீர்வாதங்களை மட்டும் தேடி பிடித்தும் பெரும்பாலும் motivational பிரசங்கியர்கள் என்றே அறியப்படுகிறார் கள்.

நீ முழங்கால் இட்டால் ஆசீர்வாதம், நீ சோத்திரம் சொன்னால் அசீர்வாதம், நீ சபைக்கு வந்தால் ஆசீர்வாதம் என்று எல்லாவற்றுக்கும் ஏதாவது ஒரு ஆசீர்வாதத்தை முன் வைத்து பிரசங்கம் செய்வார்கள். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார் அதில் ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் பாடுகளின் வழியாகவும் நாம் கடந்து செல்ல வேண்டும். ஆசீர்வாதத்தை முன் வைக்கும் பிரசங்கம் அல்ல, கிறிஸ்துவை நேசிக்கும், சிலுவையை சுமக்கும் சீசராக்கும் பிரசங்கம் தான் சத்திய பிரசங்கம்.

எனவே

சத்தியத்தை சத்தியமாக உள்ளதை உள்ளபடி பிரசங்கிக்க வேண்டும். கூட்டவோ குறைக்காமல் அப்படியே ஆரோக்கியமாக பேச வேண்டும். நித்திய ஜீவனுக்கு உரிய, பரலோக ராஜ்யத்திர்க்கு உரிய ஜீவனுள்ள வார்த்தைகளை பக்திவிருத்திக்கு ஏதுவாக பிரசங்கிக்க வேண்டும். கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசம், நம்பிக்கை, அன்பு பெருகும் படியாக பிரசங்கிக்க வேண்டும். சீசத்துவம் பெருக பேச வேண்டும். நாம் சுயமாக தீர்மானிக்காமல் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலில் பிரசங்கிக்க வேண்டும். அவரே உள்ளந்திரியங்களை ஆராயிந்து பார்ப்பவர்.

நமது மரணம், மரணத்திற்கு பின்னர் கிறிஸ்துவின் வழியில் வரும் ஆசீர்வாதத்தை குறித்து பிரசங்கிக்க வேண்டும். அதுவே முக்கியமான ஒன்று. நீதியையும், பாவத்தையும், உலகத்தையும் குறித்து பிரசங்கிக்க வேண்டும். பரிசுத்தம் இல்லாமல் அவரை தரிசிக்க முடியாதே. எல்லாவற்றுக்கும் மேலாக சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவையும் அவரால் கிடைக்கும் இரட்ச்சிப்பையும் குறித்து பேச வேண்டும். அவரே வழியும் சத்தியமும் ஜீவணுமாக இருக்கிறாரே!

எதை முன்னிறுத்த வேண்டுமோ அதை மையப்படுத்தி பேசினால் நமக்கு கிடைக்க வேண்டிய எல்லாவற்றையும் பூமியிலும் நித்தியத்திலும் ஒன்றும் குறைவு இல்லாமல் தர அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார். ஏனெனில் அவரது சுவிசேஷத்தில் எல்லாம் நிறைவாக இருக்கிறது. அவரை போல அதிகாரம் உடையவர்களாக போதிப்போம். அவரை போல மாறுவோம். நம்மை உண்மை உள்ளவர்கள் என்று இந்த இரகசியத்தை நம்மிடம் ஒப்படைத்து இருக்கிறார். அதை கடைசி வரை காத்து கொண்டு நல்லது உண்மையும் உத்தமும்மும் உள்ள ஊழியன் என்று நம்மை பாரட்டுவாராக! அவர் சீக்கிரம் வருகிறார்.

செலின்


Share this page with friends