சிறுகதைகள் : நன்மை செய்யும் வாய்ப்பை தவறவிடாதே

Share this page with friends

சிறுகதைகள் : நன்மை செய்யும் வாய்ப்பை தவறவிடாதே

சாவதைத் தவிர வேறு வழியில்லை மாலதிக்கு , எத்தனை நாள்தான் குடிகார கணவனின் வேதனைகளை பொறுத்துக் கொள்வது, இது மூன்றாம் முறை, கணவன் அடித்து மருத்துவமனையில் இருப்பது, இம்முறை கணவன் எட்டி உதைத்ததால் கீழே விழுந்ததில் இடது கையில் ஏற்பட்ட உடைவு அவளின் உள்ளத்தை மிகுதியாய் உடைத்தது.

திருந்துவான், திருந்துவான் என்று பல பேர் ஆறுதல் படுத்தினர். ஆனால் அதற்கும் ஒரு கால எல்லை உண்டல்லவா?. தகப்பன் குடிப்பதினால் தன் பிள்ளைகள் கெட்டுவிடுவார்கள் என மகள் கூட தற்போது வீட்டுக்கு வருவதில்லை, மாலதிதான் பேரபிள்ளைகளை போய் பார்த்து வருவாள். இதை விட வேதனை கணவர் குடித்து விட்டு வெளியில் செய்யும் சேட்டைகளை மறுநாள் மாலதியிடம் சொல்லி கணவரை பலர் குற்றப்படுத்தும்போது அவ்விடத்தில் தானும் ஒரு குற்றவாளியைப் போல கூனி குறுகி நிற்பது வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதே அவள் எண்ணம்.

மருத்துவமனையிலிருந்து வெளியே வரும் நாள் நெருங்கும் போதே தீர்மானித்து விட்டாள் வீட்டிற்கு போகும் போது பிணமாகத்தான் போக வேண்டும், நான் உயிரோடு இருந்தால்தானே என்னை மிதிப்பான், என்று சிந்தித்த வாறே சாவதற்கு திட்டம் தீட்டினாள்.

மகள் வந்து தன்னை அழைத்துச் செல்லும் முன் மருத்துவமனையை விட்டுக் கிளம்பினால்தான் தன் திட்டம் நிறைவேறுமென நினைத்தவள், தானே மருத்துவமனைக்குரிய பணத்தை கட்டிவிட்டு ஆட்டோவில் கிளம்பி சென்றவள் ஓர் மருந்து கடையில் ஆட்டோவை நிப்பாட்டினாள்.

மருத்துவரின் சீட்டைக் காட்டி எல்லா மருந்திலும் 30 நாட்களுக்கு கொடுங்கள் என்றாள் மாலதி, மருந்து கடை நடத்துபவர் அம்மா எல்லா மருந்திலும் 30 மாத்திரை தரலாம், ஆனால் தூக்க மாத்திரை 15 நாட்களுக்குதான் தர முடியும் என்றார், அதற்கு மேல் கொடுக்கக்கூடாது என்று எங்களை அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள் என்றார். மாலதி கூறினாள் ஐயா எனக்கு கணவர் பிள்ளைகள் யாரும் இல்லை, உதவிக்கு உறவினர்களை அழைத்தால் யார் தான் சரியான சமயத்தில் வருவார்கள் பிரதர், ப்ளீஸ் 30 நாட்களுக்கு அதையும் தாருங்கள் என்றாள். அவரும் மனதிரங்கி கடை பையனிடம் 30 மருந்துகள் கொடு என்றார். பையன் ஒவ்வொரு மருந்தையும் தனித்தனியே கவரில் எழுதி போட்டுக் கொடுத்தான், தூக்க மாத்திரைகளையும் தனியாக ஒரு சிறிய கவரில் போட்டு கொடுத்தான்.

ஆட்டோவில் ஏறியதுதான் தெரியும், வீட்டிற்கு முன் பிணமாகத்தான் போக வேண்டும் என சிந்தித்தவள், தூக்க மாத்திரை இருந்த கவரை எடுத்தவள் 30 மாத்திரைகளையும் விழுங்கி தண்ணீரை குடித்தாள், இந்த உலகத்தை விட்டு போகப் போகிறேன், அவ்வளவுதான் நம் வாழ்க்கை, இனி அவன் தனிமையில் குடித்து மகிழ்ந்திருக்கட்டும் என நினைத்ததும் ஆட்டோவும் வீட்டு வாசல் முன் நின்றது.

இப்போ தலை சுற்றும், இதில் விழப்போகிறேன் என்று நினைத்தவாறே இறங்கியவளுக்கு, ஒர் ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது, தன் வீட்டிலிருந்து வெளியே வந்த உறவினர் ஒருவர், இவளைப் பார்த்ததும், அக்கா நான் கூட நினைக்கவில்லை உன் கணவர் திருந்துவார் என்று, உன் வேண்டுதலை கடவுள் கேட்டுவிட்டார், கடந்த 15 நாட்களாக குடிக்காமல் காத்திருக்கிறார், உனக்கு ஒர் புது கணவராக இருக்க போகிறாரம், போ உள்ளே போ, அவரும் மன்னிப்பு கேட்க காத்திருக்கிறார் என்றார்.

இதைக் கேட்ட மாத்திரத்தில் மாலதி மயங்கி விழுந்தவளாய், நான் கோபத்தில் தற்கொலை செய்ய 30 தூக்கமாத்திரை சாப்பிட்டுவிட்டேன், நான் இனி பிழைக்க மாட்டேன் என்றாள். அதிர்ச்சியடைந்த உறவினர், தன் காரில் தூக்கிப் போட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சேர்த்தார்.

மருத்துவர் பரிசோதித்து விட்டு, இது ஒரு சின்ன அதிர்ச்சிதான், வேறு ஒன்றும் இல்லை என்றார். இல்லை டாக்டர் 30 தூக்க மாத்திரை சாப்பிட்டிருக்கிறார்கள், அதனால்தான் பதறியடித்துக் கொண்டு இங்கே தூக்கி வந்தேன் என்றார். இங்கே பாருங்க டாக்டர் அந்த மாத்திரையினுடைய அட்டை (Cover), அவர்களுடைய கைப்பையிலிருந்து எடுத்தேன் என்று டாக்டரிடம் கொடுத்தார்.

டாக்டர் மருந்து அட்டையை பார்த்து சிரித்தவாறே, அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருந்திருக்கிறது, அவசரத்தில் அவர்கள் 30 விட்டமின் மாத்திரைகளை சாப்பிட்டிருக்கிறார்கள். உயிருக்கு ஒன்றும் அது ஆபத்தில்லை, கொஞ்சம் அதிக டோஸாக இருக்கும் நாங்கள் அதை பார்த்துக் கொள்கிறோம், கவலையை விட்டு விடுங்கள் என்றார்.

கடவுளின் அருளால் மாலதியின் புதிய வாழ்வு கணவரோடு துவங்கியது, மகள் பேரப்பிள்ளைகள் என சந்தோஷமாக வாழ்க்கை சென்றது.

ஆனால் கடைசி வரை யாரும் அறியாத உண்மை, மருந்து கடையில் தூக்கமாத்திரைக்கு பதிலாக விட்டமின் மாத்திரையை வைத்த பையனின் நற்செயலை. மருந்து கடையில் மாலதி மருந்து கேட்கும் போது கடையில் நின்ற பையன் மாலதியின் சோகத்தை முகத்தில் பார்த்திருக்கிறான். அதுவும் தூக்க மாத்திரை 15-க்கு மேல் கிடைக்காது எனும் போது மாலதி சற்று அதிகமாய் பதட்டமானதைக் கவனித்திருக்கிறான். இன்னும் அவன் உள்ளே மருந்து எடுக்க போகும்போது அங்கு உள்ள சசிடிவி வீடியோவைப் பார்க்கும் போது மாலதியின் கண்களில் கண்ணீர் நிறைந்திருப்பதையும் கவனித்தான். ஏதோ ஒரு சந்தேகத்தால் அவன் தூக்கமாத்திரை வைக்க வேண்டாம், நாளை திரும்ப வந்து கேட்டால் பார்க்கலாம், கூடிப்போனால் முதலாளி இரண்டு வார்த்தை திட்டுவார், இல்லை வேலைக்கு வரவேண்டாம் என சொல்வார். எதற்கும் தற்கொலை செய்து கொள்வார்கள் என்னும் சந்தேகம் வந்த பிறகு அதை வைப்பது சரியல்ல என்று எண்ணியவன் விட்டமின் மாத்திரையை மாற்றி வைத்தது மட்டுமில்லாமல், அவர்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகவே தனித்தனி கவரில் மாத்திரைகளை வைத்து ஒரு கவரில் தூக்கமாத்திரை என்று எழுதி அதற்குள் விட்டமின் மாத்திரையை வைத்தான்.

அந்த பையனுக்கு மாலதி தற்கொலைக்குத்தான் வாங்கினாள் என்ற உண்மையோ. மாலதிக்கு அப்பையன் வேண்டுமென்றே விட்டமின் மாத்திரையை வைத்தான் என்ற உண்மையோ ஓர் ஆண்டு கடந்தும் இன்றுவரை தெரியாது, ஆனால் அப்பையானால் ஓர் உயிர் காப்பற்றப்பட்டது என்பது அவனறியா உண்மை.

அன்புக்குரியவர்களே பல வேளைகளில் நாம் இன்று செய்யும் சிறு நற்செயல்களின் விளைவுகள் நம் கண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் அது எங்கேயோ, என்றோ, யாரோ ஒருவருக்காவது அது பெரிய உதவியாகி விட்டுதான் அது ஓயும் என்பதை யாரும் மறுக்க முடியாது. அது போல நாம் நன்மை செய்கிறோம் என்பதை பிறருக்கு தெரியாமலே செய்வது இன்னும் சிறப்பு.

அன்புடன்
Bro. மெர்லின்@ நல்ல நிலமாகு நண்பா


Share this page with friends