சிறுகதைகள் : எது பெரிய உதவி

Share this page with friends

சிறுகதை : எது பெரிய உதவி

தென்மலை கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது, தங்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று, இன்று தன் சொந்த கிராமத்திற்கு வெற்றியோடு திரும்பி வருவதே விழாக்கோலத்திற்கான காரணம்.

சண்முகம் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவன். காலையில் தகப்பனோடு கூட தோட்டத்திற்கு சென்று பயிர்களுக்கு நீர் பாய்ச்சி விட்டுதான் அரசாங்க பாடசாலைக்கு செல்வான். மாலை ஆடு மாடுகளுக்கு தேவையான இலை தழைகளைப் சேகரிக்க வேண்டும், தன் தங்கைகளை தன்னோடு உதவிக்கு அழைக்கமாட்டான், ஆம்பளை நான் இருக்கும் போது நீங்கள் வெளியில் வந்து கஷ்டப்படக்கூடாது என்பது அவன் வாசி. இப்படிப்பட்ட சண்முகத்திற்கு ஒட்டப் போட்டியில் ஆசை வந்தது ஆச்சர்யமே.

நன்றாக படிப்பது, போட்டிகளில் பங்கெடுப்பது, வெற்றி பெறுவது எல்லாம் பணக்கார வீட்டு பிள்ளைகளின் வேலை என்ற எண்ணத்தை அன்று நடந்த பள்ளி ஆண்டு விழா அவனுக்கு முற்றுபுள்ளி வைத்தது. அன்று பல போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்த கலெக்டர் நான் ஒரு ஆடு மேய்க்கும் குடும்பத்தில் பிறந்தவன் என்று சொன்னதே அதன் காரணம். “உங்களுக்குள் ஒரு திறமை இருக்கும் அத்திறமையை மட்டும் வளர்ப்பீர்களானால் நீங்களும் சிகரத்தை தொடுவீர்கள்” என்று கலெக்டர் சொன்ன வரிகள் அன்று தூங்கும்போதும் அவன் நினைவுகளை விட்டு மாறவில்லை.

அன்று காலையில் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சி விட்டு பள்ளிக்கூடத்திற்கு நேரமானதால் சாலையில் வேகமாக ஓடும்போது அவன் உடற்கல்வி ஆசிரியரின் பார்வை பட்டதால், அவர் அவனை தடுத்தி நிறுத்தி இவ்வளவு வேகமாய் ஓடுகிற நீ ஏன் ஒட்டப் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை என்று கேட்ட கேள்வியே, தனக்குள் இருக்கும் திறமை ‘ஓடுவது’ என்பதை கலெக்டரின் பொன் மொழிகளோடு இணைத்தான். அன்றைய ஆரம்பமே, இன்றைய ஒலிம்பிக் பதக்கம்.

சண்முகத்திற்கான வரவேற்கும் விழா அவன் படித்த அரசு பள்ளியிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிராமம் முழுவதும் அங்கு திரண்டிருந்தது, ஊர் முழுவதும் சண்முகத்தின் புகைப்படம் அச்சடிக்கப்பட்ட பேனர்கள். மேடையை பல்வேறு தலைவர்கள், உயர்ந்தவர்கள் அலங்கரித்தனர்.

மேடையேறிய சண்முகம் எல்லாரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி சொல்லி, தான் போட்டியில் பங்கு பெற்ற அனுபவத்தைக் கூறி, இறுதியில் இந்த ஒலிம்பிக் பரிசை நான் ஒருவருக்கு அர்ப்பணிக்கு விரும்புகிறேன் என்று சொல்லி அப்பெயரை அறிவிக்க ஆயத்தமானான்.

அதற்குள் கூட்டத்திற்குள் சலசலப்பு……. யாருக்கு கொடுப்பான், அவன் தந்தைக்குத்தான், தன் மகனை வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டார், மகன் ஒடி என்ன சம்பாதிக்கவா போகிறான் என்று ஊர் மக்கள் கிண்டலாய் பேசியதை எல்லாம் பொருட்படுத்தாமல் வெளியூர்களுக்கு போட்டிக்கு அனுப்பி வைத்த தகப்பனை தவிர யார் பெரிய தியாகம் பண்ணினர், அவருக்குதான் நிச்சயமாக கொடுப்பான் என்றனர் சிலர்.

இல்லை, இல்லை, அவன் திறமையை அவனுக்கே வெளிப்படுத்தின உடற்கல்வி ஆசிரியருக்காயிருக்கும் என்றனர் சிலர்.

மாநில அளவில் போட்டிகளுக்கு எல்லாம் கலந்து கொள்ள பண உதவி அளித்த நம்ம ஊர் பண்ணையாருடைய பெயரைத்தான் சொல்லப்போகிறான் என்ற சத்தமும் அங்கு கேட்டது.

தலைமை ஆசிரியருக்கு என்றான் ஒருவன், இல்லை அவன் நண்பனுக்கு என்றான் மற்றொருவன். இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு பெயராக சிந்தித்துக் கொண்டிருக்கையில்,

ஒரு நாள் தண்ணீர் குடிக்க தந்த நம் பள்ளியின் இரவுக் காவலர் தான் அதற்கு தகுதியானவர் என்று சண்முகம் சொன்னது அனைவருக்கும் அதிர்ச்சியாகவும், அதிசயமாகவும் இருந்தது.

வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்ட தகப்பன், பயற்சி கொடுத்த உடற்கல்வி ஆசிரியர், பண உதவி செய்த பண்ணையார் இவர்களை விட இவன் கொடுத்த தண்ணீர் பெரியதா? அவன் என்ன பலம் சேர்க்கும் மூலிகை தண்ணீரா கொடுத்தான்?. மக்களுக்குள் கேள்விகளும், கூட கோபங்களும்.

சண்முகம் பள்ளிக் காவலாளியை முன்னே அழைத்து கெளரவிக்கும் போது, முதன் முதலில் ஒரு உண்மையைச் சொன்னான். நான் என் ஓட்டத்திற்கான பயிற்சியை மாலையில் ஆடு மாடுகளுக்கு இலைதழைகள் எல்லாம் ஆயத்தம் பண்ணிவிட்டு, சூரியன் மறையும் நேரத்தில்தான் நம் ஊரிலிருந்து மலைப்பகுதிக்கு செல்லும் சாலைக்கு ஓட ஆரம்பிப்பேன்.

ஒரு நாள் பயிற்சி எடுக்கும் போது திடீரென ஒரு சிறுத்தை மலையிலிருந்து என்னை நோக்கி வருவதைக் கண்டேன், அதிர்ந்து போனேன், பயத்தினால் ஒரு நிமிடம் ஓட வேண்டும் என்பதையும் மறந்தேன். இறுதியில் என்னை அறியாமால் என் கால்கள் விரைய ஆரம்பித்தது, உயிருக்கு தப்பிக்கும் மானை போல ஓட ஆரம்பித்தேன், அது துரத்துவதை விடுவதாக இல்லை, பாதை தெரியாமல் திசை பாராமல் ஓடினேன், என் முழு பலமும் முடிந்து போகும் ஓர் இடத்தில். நான் மயங்கி விழுந்தேன். சிறுத்தை என்னவானது என்று எனக்கு தெரியவில்லை. அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

ஏதோ ஓர் கரம் தொடுவதை உணர்ந்தேன், அது தண்ணீர் கொடுத்தது, தண்ணீர் கொஞ்சம் உடல் அசைய பெலம் கொடுத்தது, கண் விழித்த பிறகுதான் அது நம் பள்ளிக் காவலர், பல மணி நேரம் நான் மயங்கி கிடந்தேன் என்பதை பிறகு தான் அறிந்தேன். அன்று இந்த கரம் அந்த தண்ணீர் கொடுத்து காப்பாற்றாவிடில், மறுநாள் நீங்கள் கண்ணீர் மட்டும்தான் விட்டுருப்பீர்கள் என்று சொல்லி பள்ளிக்காவலரின் பாதம் தொட்டு கண்ணீரோடு நன்றி சொன்னான்.

ஆம்,ஒருவன் நன்றாயிருக்கும் போது செய்யப்படும் பெரிய உதவிகள், விழிம்பு நிலையில் இருக்கும் போது செய்யப்படும் சிறிய உதவிகளிடம் தோற்றப்போகிறது.
___________________________________

பிரியமானவர்களே, Covid – 19 காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறிய உதவிகளும், ஏன் ஆறுதலும் பரலோகில் பெரிதாக இருக்கும் என்பதற்கே இப்பதிவு. ஏனென்றால் இது விழிம்பு நிலைக் காலம்.

அன்புடன்
Bro. மெர்லின்@ நல்ல நிலமாகு நண்பா

மக்கள் அதிகம் வாசித்தவை:

பிரசங்க குறிப்பு: வேதாகம சிங்காசனங்கள்
ஜெருசலேம் பகுதியை புனிதத்தன்மை உடையதாக வைத்திருப்பது எது?
வேதபண்டிதர் மா. ஜான்ராஜ் அவர்களது வாழ்வு பற்றிய அரிய தகவல்கள்
வாய்ப்புகளை வீணாக்காதீர்கள்
பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு பிறந்தநாள் வாழ்த்தை நேரில் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
ஆவிக்குரிய உணவு மற்றும் உடை
ஆகா என்னா அருமை! மிகவும் அழகாக வாலை ஆட்டிக்கொண்டே பறந்த பட்டம் - சிறுகதை
யாரும் நினையாத நாழிகை - அந்த நாளை நினைத்ததுண்டா?
டி.சி.என் மீடியாவின் பல்வேறு சமூகப்பணிகளை அங்கீகரித்து சேவரத்னா விருது
இயேசுவின் அறிவியல் பூர்வமான மரணம் ! 60 விநாடிகள் ஒதுக்கி இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்

Share this page with friends