சிறுகதை: நஷ்டம் உதவிக்கு வரவேண்டாம்
சிறுகதை : நஷ்டம் உதவிக்கு வரவேண்டாம்
பயணிகள் கப்பல் ஒன்று நடுக்கடலில் புயலில் சிக்கியது, எதிர்த்துப் போராடியும் முடியாமல் இறுதியில் புயலுக்கு சரணடைந்து அது அழைத்து சென்ற பாதையில் பயணம் செய்து முகவரி அறியாத தீவில் கரை தட்டி தரை சாய்ந்தது. கடவுள் அருளால் சின்ன சின்ன காயத்தோடு தீவில் மக்கள் தஞ்சம் புகுந்தனர்.
குழந்தைகள், பெரியவர்கள், பணியாட்கள் என 500 க்கு அதிகமான மக்கள், செய்வதறியாது, பயத்தோடு, நடுக்கத்தோடு மூன்று நாட்களை அத்தீவில் கடந்தனர். இன்றைய காலம் எனில் எளிதில் உதவிக்கு தொலைதொடர்பு கொள்ள முடியும், ஆனால் அன்று வசதி அப்படி இல்லை, இயற்கை முறைகளில் எப்படி உதவியின் தேவையை வெளிப்படுத்த முடியுமோ. அப்படியே வெளிப்படுத்தினார்கள்.
தீவில் எழும் கரும் புகையைக் கண்டு, சரக்குகளை ஏற்றி செல்லும் கப்பல் ஒன்று அருகில் வந்தது, பயணிகளின் கப்பல் கேப்டன் உதவிக்காக கெஞ்சினான். எப்படியாவது எங்களை காப்பாற்றுங்கள். மூன்று நாட்களாய் மழையிலும் குளிரிலும் சாகிறோம், தயவு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று காலை பிடிக்காத குறையாய் கெஞ்சினான்.
இம்மக்களை விட்டுச் சென்றால் குற்ற உணர்ச்சியாலேயே இறந்துவிடுவோமே, எப்படி உதவாமல் செல்வது என்று யோசித்தவாறே, தன் கப்பலில் எங்கெல்லாம் ஏறி அமர முடியுமோ ஏறி அமர்ந்து கொள்ளுங்கள் என்றான் சரக்கு கப்பலின் கேப்டன், மக்களுக்கு இடம் போதவில்லை என்பதால், தனக்கு பிரச்சனை வரும் என்று அறிந்தும் விலையுயர்ந்த சரக்குகளை கடலில் தள்ளினான். பயணிகள் கப்பலின் கேப்டன் வாக்கு கொடுத்தான் உங்களுக்கான நஷ்ட ஈட்டை நாங்கள் பெற்றுத்தருவோம் என்று. கப்பல் எல்லா மக்களையும் ஏற்றி பயணித்தது
எப்படியோ பாதுகாப்பாய் தங்கள் நாட்டை அடைந்தார்கள். சரக்கு கப்பல் கேப்டனின் மனிதாபிமானத்தை பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளின, சரக்கு கப்பலின் நஷ்டத்தையும், பயணிகள் கப்பல் கம்பெனி திரும்ப செலுத்தியது. மக்களுடைய நன்றி கண்ணீர்கள் சரக்கு கப்பல் கேப்டனை சுற்றி நதியாய் பாய்ந்தது. அனைவரும் பத்திரமாய் இல்லம் திரும்பினர்.
ஒரு வாரம் கடந்தது, சரக்கு கப்பல் கேப்டனை அக்கம்பெனி பணியிலிருந்து வெளியேற்றியது, காரணம் மக்களை காப்பாற்ற சில சரக்கு பெட்டிகளை கடலுக்குள் தள்ளியதில், முதலாளிக்கு வேண்டிய முக்கியமான சரக்கு பெட்டகத்தையும் கடலுக்குள் தள்ளியிருந்தார்கள், முதலாளியின் அக் கோபமே அவன் பணிநீக்கத்திற்கு காரணம்.
நல்லது செய்ய போய், இப்படி கெட்டது ஆகிவிட்டதே என்ற குழப்பத்தோடும், மன வேதனையோடும், குடும்பத்தை இனி எப்படி நடத்துவேன் என்ற கவலையோடும் வீட்டில் சில நாட்களாய் சிறகிழந்த பறவை போல் உட்கார்ந்தான்.
ஒரு நாள் ஓடோடி வந்த மனைவி, அவனிடம், நீங்கள் நன்மை செய்ததை பத்திரிகைகள் பக்க பக்கமாய் எழுதி புகழ்ந்தன. ஏன் நாம் ஒன்று செய்யக்கூடாது?, உங்கள் பதவி பறிக்கப்பட்டதை அப்பத்திரிகைகளிடம் தெரிவிப்போம். நிச்சயம் நமக்கு ஒரு நல்ல நீதி கிடைக்கும், அரசாங்கமும் இதை அறிந்து உங்களுக்கு உதவி செய்யும், அந்நிறுவனத்தையும் கண்டிக்கும் என்றாள்.
கோபத்தோடு மனைவியை கண்டித்தவாறே, எக்காரணத்தைக் கொண்டும் என் பதவி பறிக்கப்பட்ட செய்தி வெளியில் தெரியக் கூடாது.
நாளை இதைப்போல் நடுக்கடலில் ஏதாவது ஒரு கப்பல் ஆபத்துக்குள்ளாகும் போது, உதவி செய்ய ஒருவன் நினைத்தும், அவன் இந்த செய்தியை படித்திருப்பானானால், தன்னையும் பதவி நீக்கிவிடுவார்கள் என பயந்து, உதவாமல் திரும்பி விடுவானால். அந்த நஷ்டம் என் பதவியின் நஷ்டத்தை விட பெருமடங்கு நஷ்டமில்லவா என்றான் பெருந்தன்மையோடு….
ஆம், அன்பானவர்களே….
உதவி செய்வதால் நஷ்டம் வரலாம், ஆனால் உதவி என்ற குணத்திற்கு ஒரு போதும் நஷ்டம் வரக்கூடாது.
அன்புடன்:
Bro. மெர்லின் @ நல்ல நிலமாகு நண்பா