அவனும் தெய்வமானான்

சிறுகதை – அவனும் தெய்வமானான்

Share this page with friends

சிறுகதை : அவனும் தெய்வமானான்

சுரேஷ் ஏழைச்சிறுவனாய் இருந்தபடியால், அறிவை நிரப்ப புத்தகம் சுமந்து பள்ளிக்குச் செல்லும் வயதில், காட்டிற்கு சென்று விறகு சுமந்து வயிறை நிரப்புவதே அவன் வாழ்வாகிவிட்டது.

தாயும் மகனுமாய் காட்டிற்கு செல்லுதலும், வீட்டிற்கு வருதலும் அன்றாட நிலை, தந்தை இறக்காவிடில் சுரேஷின் வாழ்க்கை இந்நிலை அல்ல. சுரேஷ் இப்போது தனியாய் காட்டிற்கு போவது,அவன் சற்று வளர்ந்து விட்டான் என்பதின் அடையாளம். வளர்த்தி என்பது தனியாய் காட்டிற்கு போவது அல்ல, தன் தாயை பார்த்து, நீ வீட்டிலிரு, இனி நான் உன்னை கவனிக்கிறேன் என்று சொன்னானே அதுதான் வளர்த்தி. படித்தவர்கள் பலர் இன்னும் வளரவில்லை, தாயையும் பாரமாய் காண்கிறது அவர்களது அறிவு

காட்டிற்கு சென்று திரும்பியவனுக்கு வழக்கத்திற்கு மாறான பசி, வீட்டை அடையும் நேரமும் தாண்டியது, பெரு மழை பெய்து ஓய்ந்தும் காட்டின் குறுக்கே பாயும் ஆற்றின் தண்ணீர் குறைய நேரமாகியதால் கடந்து வர தாமதமாயிற்று, தாண்டும் நேரத்தில் வெள்ளப்பெருக்கினால் கையிலிருந்த உணவும் , பொறுக்கிய விறகும் ஆறே சாப்பிட்டு திருப்தியடைந்தது. ஆறுதல் சுரேஷ் கரை சேர்ந்தது

சுரேஷ் பசி பொறுக்காதவன் அல்ல, ஏழைகளுக்கு அது கைவந்த கலை அல்லவா! ஆனாலும் ஆற்றை கடக்க அவன் எடுத்த முயற்சிக்கு , அவன் சரீரத்தின் எல்லா அவயங்களும் ஒத்துழைத்ததால், எல்லாம் இவன் மூளைக்கு பசி பசி என்னும் செய்தியை அனுப்பின. தண்ணீர் இன்னும் குறையும் வரை இன்னும் பொறுமை காத்திருக்கலாம், ஆனால் இரவு நேரத்தில் ஆற்றின் அக்கரையில் வன விலங்குகள் பொறுமை காப்பதில்லையே?. மயங்கி விழ போனவனின் கையை , ஒரு முதிர்ந்த கரம் பிடித்தது, உணவும் தண்ணீரும் கொடுத்தது. பலம் பெற்ற உடன் நடக்க தொடங்காமல் தன் கையை உயர்த்தி அம்முதியவர்க்கு நன்றி சொல்ல தலையை உயர்த்துகையில் அவ்வுருவம் மறைந்தது.

ஆம் தெய்வங்கள் எப்போதுமே நன்றிக்காக நிற்பதில்லையே மறுநாள் காலையிலே வழக்கத்திற்கு மாறாக நான்கு பொதி உணவுகள் எடுத்தான் , இரண்டு பொதி அதிகமானாதால், ஏன்? என்று கேட்டாள் அம்மா. ஒன்று எனக்கு, இன்னொன்று,நான் வரும் வழியில் நேற்று எனக்கு நடந்ததை போல் வேறு யாருக்கும் நடந்தால் அதற்கு…. அம்மா தன் மகனை ஆனந்த கண்ணீரால் அரவணைத்து முத்தமிட்டு அனுப்பினாள்

ஏன் என்றால் அன்று முதல்
அவனும் தெய்வத்தின் குணமுடையவனானான்

பகிர்தல் தெய்வத்தின் அடையாளம்

ஆக்கியோன்.
Bro Merlin @ நல்ல நிலமாகு நண்பா
நன்றி


Share this page with friends