வேதாகம கல்லூரியில் படித்து தான் ஊழியம் செய்யனுமா?

Share this page with friends

வேதாகம கல்லூரி தேவை.
அதில் படித்து தான் ஊழியம் செய்ய வேண்டும். இதில் மாற்று கருத்து இல்லை.

நேற்று ஒரு பதிவு போட்டிருந்தேன் அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் சொன்னார்கள் ஆனால் சிலரின் பதில் கொஞ்சம் குதர்க்கம் மற்றும் எதிர்காலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்தது ஆகவே நான் சொல்ல கூடியதை கொஞ்சம் பொறுமையோடு கற்றுக் கொள்ளும் இருதயத்தோடு படியுங்கள்..

ஒரு ஊழியக்காரர் எப்போதும் பிரசங்கத்திலே பைபிள் காலேஜ் படித்த போதகர்களை குறை சொல்லியே பிரசங்கம் செய்வார் காரணம் அவர் பைபிள் காலேஜ் படிக்கவில்லை அவருக்கு அதற்கான வயதும் இல்லை வாய்ப்பும் இல்லை. ஆனால் ஆத்துமாக்கள் 500 க்கு மேல் இருக்கிறார்கள். அவருடன் இருந்த அவரது உதவி ஊழியரும் இதே மனநிலை கொண்டவர் தான். அவரும் பைபிள் காலேஜ் படித்த போதகர்களை குறை சொல்வதும் அற்பமாக எண்ணுவதும் தாங்கள் பைபிள் காலேஜ் படிக்காமலே கர்த்தர் எங்களை எவ்வளவாய் பயன்படுத்துகிறார் எங்கள் சபை பெரிய சபை எங்கள் ஊழியம் பெரிய ஊழியம் என்று அடிக்கடி பெருமை பிடித்து பேசிகொண்டு இருப்பார்கள்.

ஒரு நாள் இப்படி பேசினார் என் முழங்கால் தான் எனக்கு பைபிள் காலேஜ் ஆவியானவர் தான் எனக்கு ஆசிரியர் என்று… எனக்கு நியாயமான கோபம் வந்தது நான் கேட்டேன் முழங்கால் தான் உங்கள் பைபிள் காலேஜ் ஆவியானவர் தான் ஆசிரியர் என்று சொல்கிறீர்களே நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா முடியவில்லை என்றால் ஆவியானவரிடம் கேட்டு சொல்லுங்கள்… அவரும் சரி என்றார்.
நான் கேட்டேன்..
1.பைபிள் எத்தனை ஆசிரியர்களால் எழுதப்பட்டது….
2.அப்போஸ்தலனாகிய பவுல் எந்த வருடத்தில் சிரசேதம் செய்யப்பட்டார் ….
இந்த இரண்டு கேள்விகளை கேட்டேன் அவருக்கு பதில் தெரியவில்லை திரு திரு ன்னு முழிச்சுகிட்டு இருந்தார். நான் திரும்ப சொன்னேன் முழங்காலில் நின்று ஆவியானவரிடம் கேட்டு சொல்லுங்கள் என்று.. அவரோ பேசாமல் அமைதியாக நின்றார். அப்புறமாக நான் சொன்னேன் இதற்கு தான் பைபிள் காலேஜ் படிக்கனும் என்று…

ஒரு டாக்டர் மருத்துவ கல்லூரியில் படிக்க வேண்டும்.

ஒரு வக்கில் சட்ட கல்லூரி படிக்க வேண்டும்.

ஒரு ஆசிரியர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிக்க வேண்டும்.

போலிஸும் அப்படி தான்

இவர்கள் இதை படிக்காமல் தங்கள் திறமைகளை வைத்து பணிகளை செய்யலாம் ஆனால் போலிகளே…
போலி டாக்டர்
போலி வக்கில்
போலி ஆசிரியர்
போலி போலிஸ்

இந்த வரிசையில் போலி போதகர்கள் தான் வேதாகம கல்லூரியில் படிக்காமல் ஊழியம் செய்கிறவர்கள். பைபிள் காலேஜ் படிக்க வாய்ப்பு இல்லை வயது ஒத்து வரவில்லை என்றால் தொலைதூர வேதாகம கல்லூரியில் படிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சுவிசேஷம் அறிவிக்க ஊழியம் செய்ய பைபிள் காலேஜ் தேவை இல்லை ஆனால் அரசு பதிவு செய்து ஊழியங்கள் செய்யும் ஐந்து விதமான அழைப்பு பெற்ற ஊழியர்களும் பைபிள் காலேஜூம் படிக்க வேண்டும் ஒரு நல்ல பாரமுள்ள பைபிள் காலேஜ் படித்த ஊழியருக்கு கீழ் குறைந்தது மூன்று வருடமாவது உதவி ஊழியராக இருக்க வேண்டும். இப்படி இருந்தால் அந்த ஊழியம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தாலும் ஆழமாக வேரூன்றி வளரும். ஊழியர் தனக்கு இருக்கிற வேத அறிவு மற்றும் அனுபவங்களை வைத்து வெற்றிகரமான ஊழியம் செய்யலாம்.

இதை விட்டுட்டு விதண்டாவாதம் பேசினால் அது நல்லது அல்ல
இயேசுவின் சீடர்கள் படித்தார்களா?

அவர்கள் எல்லாரும் முன்பு நியாயப்பிரமாணத்தை கரைத்து குடித்தவர்கள் பின்னர் இயேசுவோடு மூன்றரை ஆண்டுகள் இருந்தவர்கள் அவரோடேகூட தங்கி படுத்து உறங்கி ஜெபித்து அப்பம் பிட்டு அவர் பரமேறி சென்றதை கண்களால் பார்க்க கொடுத்து வைத்தவர்கள். இயேசு கிறிஸ்து அவர்களுக்கு எல்லா பயிற்சியும் கொடுத்தார் அதற்கு பின்பு வேற ஒரு தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவரையும் கொடுத்தார். இத விட வேற என்ன வேணும்.

ஆகவே அந்த ஊழியர் படித்தாரா இந்த ஊழியர் படித்தாரா என்று குதர்க்கம் பேசாமல் நீங்கள் நல்ல தகுதியான ஊழியராக மாற வேதாகம கல்லூரியில் படியுங்கள் மற்றவர்களையும் படிக்க ஊக்குவியுங்கள். பைபிள் காலேஜ் படித்த எத்தனையோ பேர் வேலை செய்கிறார்கள் பாவத்தில் இருக்கிறார்கள் பின்மாற்றமாய் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்..எல்லா துறைகளிலும் கெட்டவர்கள் உண்டு ஆகவே இந்த துறையும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த பூமியில் ஊழியம் செய்ய தேவனுடைய அங்கிகாரம் மாத்திரம் போதாது மனிதர்களுடைய அங்கிகாரமும் தேவை அப்போது தான் நல்ல ஒரு நேர்மறையான ஊழியம் செய்ய முடியும்.

சி எஸ் ஐ, சால்வேஷன் ஆர்மி, லுத்தரன் சர்ச், மெத்தடிஸ்ட், மார்த்தோமா ஆர். சி, அசெம்பிளி ஆப் காட் இது போன்ற ஊழியங்களிலும் பல மிஷனரி ஸ்தாபனங்களிலிலும் வேதாகம கல்லூரியில் படிக்காமல் ஊழியராக முடியாது அவர்களை சேர்த்து கொள்ளவும் மாட்டார்கள். ஆனால் ஒரு சபையில் இருந்து ஆத்துமாக்களை பிரித்து புதிய சபை மற்றும் ஊழியம் ஆரம்பிக்கிறவர்கள் மற்றும் ஒரு ஸ்தாபனத்தின் நிழலில் இல்லாமல் சுயாதீனமாக ஊழியம் செய்யும் பலரும் மற்றும் ஊழியத்தின் பெயரில் தரிசனம் இல்லாமல் ஊர் சுற்றும் ஊழியர்களும் கற்றுக் கொள்ள மனம் இல்லாதவர்களும் தான் வேதாகம கல்லூரிக்கு எதிராகவும் அதில் படித்த போதகர்களுக்கு விரோதமாகவும் பேச தீவிரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். நன்றி வணக்கம்.

David Livingstone


Share this page with friends