கிறிஸ்தவ மத போதகரை அறையில் வைத்து பூட்டிய ஸ்ரீராம் சேனா: கட்டாய மதமாற்றம், நடந்தது என்ன??

Share this page with friends

கிறிஸ்தவ மத போதகரை அறையில் வைத்து பூட்டிய ஸ்ரீராம் சேனா: கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக வழக்கு பதிவுகர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள மராத்தாகாலனியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ மத போதகர் லேமா செரியன் தலைமையில் ஜெப‌க் கூட்டம் நடைபெற்றது. மராத்த சமூக கூடத்தில் நடந்த இந்த கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது அங்குவந்த ஸ்ரீராம் சேனா அமைப்பினர் போதகர் லேமா செரியன் இந்துக்களை கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மதத்துக்கு ம‌தமாற்றம் செய்வதாகக் கூறி முற்றுகை போராட்ட‌த்தில் ஈடுபட்ட‌னர்.

ஸ்ரீராம் சேனா அமைப்பின் நிர்வாகி ரவிகுமார் கோடிகர் சமூக கூடத்துக்குள் நுழைந்து போதகர் லேமா செரியனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சில ஸ்ரீராம் சேனா அமைப்பினர் கிறிஸ்தவர்களை தாக்க முயன்றதால் அங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தப்பியோடினர். இதனால் கோபமடைந்த ஸ்ரீராம் சேனா அமைப்பினர் போதகர் செரியன் மற்றும் 50-க்கும் மேற்பட்டோரை சமூக கூடத்தில் வைத்து பூட்டினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ஸ்ரீராம் சேனா அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போதகர் செரியன் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்த பின்னர் சமூக கூடத்தை திறந்துவிட்டனர். இதையடுத்து வெளியே வந்த கிறிஸ்தவர்கள், ஸ்ரீராம் சேனா அமைப்பினரைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

இதையடுத்து போலீஸார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில் நேற்று சந்திரப்பா என்ற இந்து இளைஞர் போதகர் லேமா செரியன் தன்னை மதமாற்ற முயற்சித்ததாக போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் செரியன் மீது மதமாற்றம் செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்து தமிழ் திசை
By இரா.வினோத்

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends