ஆவிக்குரியவர்களாய் வாழ விரும்புபவர்களுக்கு புதிய ஆண்டில் சில ஆலோசனைகள்

Share this page with friends

புதிய ஆண்டில் சில ஆலோசனைகள்

தினமும் அதிகாலை எழுந்து ஓரிரு மணி நேர தனி ஜெபித்துடன் உங்களின் அன்றாட பணிகளை ஆரம்பியுங்கள். அந்த நாளில் உங்களை சந்திக்க்கூடிய பாவச் சோதனைகளையும், நீங்கள் எதிர் கொள்ளக்கூடிய காரியங்களையும், பணிகளையும் ஆண்டவரிடம் மனம் திறந்து சொல்லுங்கள். இதில் விசுவாச வீரர் யெப்தா நமக்கு சிறந்த முன்மாதிரி “யெப்தா தன் காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியில் சொன்னான்” (நியா 11:11) என்று பார்க்கின்றோம்.

ஒரு மனிதனை ஆண்டவரின் இருதயத்திற்கு உகந்தவானாக்கிய கூடிய மாபெரும் வலிமை ஜெபத்தினற்குண்டு. அதிகமாக ஜெபிக்கும் ஒரு ஆத்துமா அத்தனை எளிதில் பாவத்தில் ஒருக்காலும் விழவே விழாது. அந்த ஆத்துமா எந்த சிக்கலான சூழ்நிலைகளின் மத்தியிலும் ஆண்டவர் இயேசுவுக்குள் மிகுந்த சமாதானத்துடன் கடந்து செல்லும்.

உங்களால் கூடுமானால் ஒரு நாட் குறிப்பு புத்தகத்தை கையாளுங்கள். அதில் ஒவ்வொரு நாளும் நீங்கள் அதிகாலை எழும்பி ஆண்டவருடன் தனித்து உறவாடி மகிழ்ந்த மணி நேரங்களையும், ஆண்டவர் உங்களுடன் விசேஷமாக இடைப்பட்ட தேவ வசனங்களையும், நீங்கள் உபவாசித்த நாட்களையும் கருத்தாய் அதில் குறித்து வாருங்கள். உங்கள் வாழ்வின் தேவைகளை அதில் ஜெபமாக எழுதி அதற்கான விடை கிடைத்த நாளையும் அதற்கு கீழே குறிப்பிடுங்கள். மாத்திரமல்ல நீங்கள் சந்தித்து இயேசுவை பற்றிக் கூறின ஆத்துமாக்களின் பெயர்களையும் அதில் பதிவு பண்ணுங்கள். அவர்களின் மீட்புக்காக ஜெபிக்க அது அனுகூலமாயிருக்கும். நாளுக்கு நாள் ஆவிக்குள் வளர இவ்வித ஏதுக்கள் மிகவும் உதவியாயிருக்கும்.

தேவ பிள்ளைகள் அனுதினமும் கர்த்தரை நன்கு ஸ்தோத்தரித்து (சங் 84:4) தேவ பெலத்தால் நிரப்பபட வேண்டும். உம்மிலே பெலன் கொள்ளுகிற மனுஷன் பாக்கியவான் (சங் 84:5). அவர்கள் பலத்தின் மேல் பலம் அடைந்து சீயோனிலே தேவ சந்நிதியில் வந்து காணப்படுவார்கள் ( சங் 84:7)

இந்த புதிய ஆண்டில் அநேக நாட்களை உபவாசத்தில் செலவிடுங்கள். உபவாசம் ஆவிக்குரிய பரிசுத்த வாழ்வின் கண்களில் ஒன்றாகும். அந்த கண் இருளடைந்து விடாதபடி பாதுகாத்து கொள்ளுங்கள்.

ஆண்டவரின் வேதம் உங்களின் மனமகிழ்ச்சியாயிருக்கட்டும். அதிலுள்ள வாக்குத்தத்தம் கையெல்லாம் உங்களின் சொந்தமாக்குங்கள்.

நமக்கு முன்பாக உள்ள இன்றைய மக்கட் சமுதாயத்திற்கு தேவையானதெல்லாம் நம்முடைய பரிசுத்தமான வாழ்க்கை மாத்திரமே என்பதை மறந்து விட வேண்டாம். நம்முடைய வாயின் வார்த்தைகளக் கொண்டல்ல, நம்முடைய பரிசுத்தமும், பழுதற்றுதுமான வாழ்க்கையைக் கொண்டே மக்கள் நம்மை கணக்கிடுகின்றனர். கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாளில் அவருடைய ஆலய ஆராதனையில் ஆவியில் நிறைந்து அனல் பறக்க பாடல்களை பாடி, அன்னிய பாஷைகளில் பேசி மகிழ்ந்து, தீர்க்க தரிசனங்களை அள்ளி வழங்கி விட்டு வாரத்தின் மற்ற ஆறு நாட்களிலும் நம்மை சுற்றியுள்ள உலக மக்களைப் போல சூதும், வாதும், கபடமும் நிறைந்தவர்களாய் பேசி சிரித்து மாய்மாலம் பண்ணி நமது நாட்களை நாம் செலவிட்டால் அதின் பயன் ஒன்றுமில்லை. “உன் வாய் பேசும் வாயின் வார்த்தைகளை விட, உன் வாழ்க்கை அதிகமாக பேசுகின்றது (You talk more with your life than with your lips) என்ற ஒரு பழமொழி உண்டு.

நம்முடைய தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கை பரிசுத்தமுடையதாயிருக்கட்டும். நம்முடைய பரிசுத்தமுள்ள வாழ்க்கை மாத்திரமே அநேகருக்கு ஆசிர்வாதத்தை கொண்டு வரும்.


Share this page with friends