வழுக்கு மரத்தில் வாழும் குருவிகள்!

Share this page with friends


ஆபத்து நிறைந்த மின்கம்பிகள் மேலே வாழும் குருவிகள்!

வாழ்க்கை வாழ்வதற்கே
நீ இப்போது வாழ்கிற வாழ்க்கை
உனக்கு மகிழ்ச்சியையும்  
மனநிறைவையும்  தருகிறதா?

வாழ்க்கை இன்பமானதாக  
அமைய வேண்டுமானால்,
ஒரு நம்பிக்கை, ஒரு பிடிப்பு (Hold),
நம்மில் இருக்க வேண்டும்

என்று கூறுகிறார்கள்.

அநேகர் வாழ்க்கையில்
எந்தவிதப்  பிடிப்பும் இல்லாதபடி
சுவையற்ற வாழ்க்கை
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 


கர்த்தர் தங்களுக்குத் தந்த
வாக்குத்தத்தங்களையெல்லாம்
வெறும் வாக்குகளாக மட்டுமே
வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  
அவற்றை தங்கள் வாழ்க்கையாக மாற்ற
தங்களைக்  கிறிஸ்துவுக்கு
ஒப்புக்கொடுக்கிறதில்லை.

வானத்தில் பறக்கும் பறவைகள்
நமக்கு சுட்டிக் காட்டுகிற
அனுபவம் சுவையான கருத்துக்களை
நம் கவனத்திற்கு கொண்டு வருகிறது.

அநேகப் பறவைகளுக்கு  
மரங்கள் அடைக்கலமாக
காணப்படுகின்றன.

பறவைகளுக்கு குளிர்தருக்கள் (Air-condition)
அதிகம்.  நல்ல மரங்கள், பெரிய மரங்கள்,
செழிப்பானவை உயரமானவையும்கூட .
வலிமை வாய்ந்த கிளைகள் உள்ளவை.
குளிர்ச்சியும் நிழலும் தரும் நெருங்கி
அடர்ந்த இலைகள் உள்ள மரங்கள் அவை.

சுருக்கமாக சொன்னால் பறவைகளின்
ஏர்கண்டிஷன் பங்களாக்கள்
என்று
அந்த மரங்களை அழைக்கலாம்.
நமக்கெல்லாம் BLUE STAR, VOLTAS  மாதிரி
என்று வைத்துக் கொள்ளுங்கள்.

பறவைகளுக்கு குளுகுளு சூழ்நிலை.
குளிர்ந்த உள்ளங்கள்.
கின்னர ஒலி எழுப்பி
கீதம் பாடும் பறவைகள் கூட்டம்.

நாமும் கண்டு ரசிக்கிறோம்.
இன்பமான வாழ்க்கைதான்
ஆனால் திடீரென
அவற்றுக்கும் ஒரு சோகம் வந்து விடுகிறது.

பெரும் புயல் காற்று, இடி,
மின்னல் பெருமழை கடினமான வெப்பம்,
சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றங்கள்,
இயற்கையின் சீற்றங்கள்,
மற்ற பறவைகளின் எதிர்ப்புகள்
இது போதாதென்று
வேட்டைக்காரர்களின் கிளர்ச்சிகள்
எல்லாவற்றையும் அவைகள்
சந்திக்கத்தான் செய்கின்றன.
தப்பியும் பிழைக்கின்றன.
பாராட்டத்தான் வேண்டும்.

எத்தனையோ பறவையினங்கள் இருக்க,
தகைவிலான் குருவியைப் பற்றி
வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.
அதைப்பற்றி கொஞ்சம் சிந்திக்க
நம் கவனத்தை திருப்புவோமா?

அரசியல் தலைவர்கள்
ஆன்மீக தலைவர்கள்
என நாசியில் சுவாசமுள்ள,
அடிக்கடி மாறுகிற மக்களை பற்றி
சிந்திப்பதினால் நமது நேரமும் வீணாகிறது
வேலையும்  கெடுகிறது.

ஆண்டவர் சொன்னதுபோல
ஆகாயத்துப் பட்சிகளைக்
கவனித்துப் பார்ப்போம்
.
அவைகளால் நமக்குப்
பிரயோஜனமுண்டு (மத்தேயு 6:26).

அடிக்கடி நிறம் மாறும் மனிதர்களால்
நமக்கு என்ன பிரயோஜனம்?

மிக மிகச் சிறிய குருவிகள்.
தன் இரு இறக்கைகளினாலே
தன் உடல் முழுவதையும்
மூடிக்கொள்ளும் சின்னஞ்சிறிய
பறவை தகைவிலான் குருவி.  

அது அங்கே மின்சார கம்பிகளில்
அமர்ந்திருக்கும்போது பார்த்தால்
நீண்ட கருப்பு கோட்
அணிந்தது போல
காணப்படும்.

இந்த வகை குருவிகள்
மனிதர் கண்களுக்கு காணும்படியாக
வாழும் இடம் எது தெரியுமா?

வழுக்கு மரங்களுக்கு இடையே – அதுதான்
மின்கம்பங்களுக்கு இடையே
தொங்கிக்கொண்டிருக்கும்
ஆபத்து நிறைந்த மின்கம்பிகள் மேலே!

ஆபத்தான இடத்தில் அவைகள்
வாழ்ந்துகொண்டிருந்தாலும்
ஒருபோதும் துக்க முகமாய் காணப்படாது.

இரயிலில் பயணம் செய்கிறவர்கள் யாரும்,
இந்த குருவிகள் தந்தி கம்பங்களிலும்
மின்கம்பங்களிலும்  ஒய்யாரமாய்
உட்கார்ந்திருப்பதை பார்க்காமல்
பயணித்திருக்க  வாய்ப்பில்லை.

ஆகாயத்தில் ஒர்
ஆனந்தமான வாழ்க்கை

இந்த மரங்களுக்கு  கிளைகள் ஏதுமில்லை.
இலைகளும் இல்லை.
எந்தவிதமான பிடிப்பும்
அந்த குருவிகளுக்கு இல்லை.

அந்தரத்தில் தொங்கும் கம்பியில்
ஒரு ஆனந்தமான வாழ்க்கை!
வரிசை வரிசையாக, கூட்டம் கூட்டமாக
விண்ணில் பறக்கும்.
விரைந்து வந்து கம்பியில் அமரும்.
அங்கிருந்து கொண்டே
தமக்கு வேண்டிய இறையையும் பிடித்துவிடும்

அர்த்தமில்லாமல் அங்குமிங்கும்
பறந்து திரியும் சிறிய பூச்சிகளே
அவற்றுக்கு உணவு.

ஒருபோதும் உயிரற்றதை அல்லது
செத்ததை உணவாகக் கொள்வதுமில்லை.

அடிக்கடி தரையில் வந்து
அமர்வதும் இல்லை.


எல்லாமே ஆகாயம்தான்.
ஓர் உன்னதமான வாழ்க்கை.  
ஆனால் வேதம் சொல்லுகிறது;
பிதாவின் சித்தம் இல்லாமல் அவைகளில்
ஒன்றாகிலும் தரையிலே விழாது
(மத்தேயு 10 29).

இப்படிப்பட்ட குருவிகளுக்கு
என் தேவன் எந்த பறவைகளுக்கும்
கொடுக்காத இடத்தை,
தம்முடைய வீட்டின் பீடத்தை கூடாக
மாற்றி கொடுத்திருக்கிறார்

சங்கீதக்காரன் 84:3-ல்
கூறுவதைப் பாருங்கள்;
பிதாவே உம்முடைய பீடங்களில்
இடையில் தகைவிலான் குருவி
தன் குஞ்சுகளை வைக்கும்
கூடு கிடைத்ததே

எத்தனை ஆச்சரியம்!

ஆதரவற்ற உள்ளத்தோடு,
எல்லாம் இருந்தும்
எதுவும் இல்லாதது போல,
உன் உள்ளம் அனாதை உணர்வு
கொண்டு அலைகிறதா?


பயப்படாதே, கலங்காதே
வேதனைப்படாதே,

தகைவிலான் குருவியைப்  பார்க்கிலும்
என் தேவனுடைய பார்வையில்
நீ எவ்வளவோ விசேஷித்த
கர்த்தருடைய பிள்ளை.


அவருடைய சமூகத்தில்
எப்போதும் தங்கியிருக்கும்
சிலாக்கியம் உனக்கு உண்டு என்பதை
மறந்துவிடாதே. கர்த்தருடைய பீடத்தை
நீ சுற்றிச் சுற்றி வரலாம்.

மண்ணைச் சார்ந்த மரத்தின் மேலல்ல .
விண்ணைச் சார்ந்த தேவனுடைய
வாக்குத்தத்தத்தின் நிறைவில்
உன் வாழ்க்கை இருக்கிறது.

இந்தப் புதிய ஆண்டின் துவக்கத்தில்,
அந்த நள்ளிரவில் நீ பெற்ற வாக்குத்தத்தம்
உனக்கு நினைவிருக்கிறதா?

உயிரற்ற மரத்தில் உயிருள்ள இயேசு
உனக்காக வானத்துக்கும் பூமிக்கும்
நடுவே ஆறு மணி நேரம் தொங்கினார்.  

எதற்க்காக?
உன்னை இரட்சிக்க.
உன்னை மறுபடியும்
ஏதேன் தோட்ட உறவுக்குள் கொண்டுவர
.
இதை மறந்து போகாதே.

உயிரற்ற வழுக்கு மரத்தின் மேல்
நீ வாழ்வதாக நினைத்தாலும்
உயிருள்ள இயேசு உன்னோடு வாழ்கிறார்
என்பதை நினைத்துக்கொள். 

சிறகடித்து பறந்து
உன்னத தேவனை
உயிருள்ளவரை மகிமைப்படுத்து.

உன் ஜீவனுள்ள வாழ்க்கை
மண்ணைச் நம்பியல்ல.
விண்ணை நோக்கியிருக்கட்டும்.

என் தேவன் தம்முடைய பீடத்தண்டையில்
உனக்கென்று ஒரு கூட்டை
ஆயத்தப்படுத்துகின்றார்.

நீ தனியாக வாழ்வதற்கல்ல.
உன் மூலமாக கிறிஸ்துவுக்குள்
மீட்கப்பட்ட ஒரு கூட்டத்தோடு
பாடி மகிழ்ந்து வாழ்வதற்காக
ஆயத்தப்படுத்துகிறார்.

தகைவிலான் குருவிகளுக்கு  
ஆபத்துக் காலத்தில்
விண்ணை நோக்கிக் கூப்பிட்டுக்
கூவும் பழக்கமுண்டாம்.


பறவைகளை பற்றிய
ஆராய்ச்சியாளர்களைக்
கேட்டால் இன்னும்
இந்த ஆலய குருவி பற்றி
ஆயிரம் தகவல்களை
சொல்லுவார்கள்.

வேதம் சொல்வதைக் கவனியுங்கள்.
நீயும் கூப்பிடு;
நமுட்டைப்போலும், தகைவிலான்
குருவியைப் போலும் கூவினேன்,
புறாவைப்போல் புலம்பினேன்;
என் கண்கள் உயரப் பார்க்கிறதினால்
பூத்துப்போயின;
கர்த்தாவே, ஒடுங்கிப்போகிறேன்;
என் காரியத்தை
மேற்போட்டுக்கொள்ளும் என்றேன்.
(ஏசாயா 38:14).
கர்த்தர் உனக்கு இரங்குவார்.

நீ வாழ்வது வழுக்குமரத்தில் அல்ல.  
சிலுவை மரத்தில் தொங்கி
உனக்கு வாழ்வளித்த
கிறிஸ்துவில் என்பதை மீண்டும்
ஒரு விசை நினைப்பூட்டுகிறேன்.

“ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது”(மத்தேயு 10:29).

பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்
போதகர்/ ஆசிரியர்
(வழிப்போக்கனின் வார்த்தைகள்)

தொகுப்பு:
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை -14Share this page with friends