வெற்றியும் தோல்வியும் உன் கையில் தான் உண்டு.
மூச்சு விட மிகவும் சிரமமானால்
இரண்டு கைகளையும்
மேலே தூக்கிக்கொண்டால்
நன்றாக மூச்சுவிட முடியும்
என்கிறது மருத்துவம் .
வெற்றிபெற சிரமமானால்
இரண்டு கைகளையும்
மேலே தூக்கிக்கொண்டால்
அமலேக்கை வெற்றிகொள்ளலாம்
என்கிறது பரிசுத்த வேதம்.
இஸ்ரவேலர் எகிப்தை விட்டு
வெளியேறி வந்தவுடன்
விவகாரம் பண்ண
விரைந்து வந்தவன் அமலேக்
பள்ளத்தாக்கில் குடியிருப்பவன்
என்று அர்த்தம் கொண்ட
அமலேக் என்பவன், ஏசாவின் பேரன்
தாத்தாவின் தாக்கம்
பேரனிடம் வெளிப்படுகிறது
வனாந்தரத்தில் அலைந்து
திரிந்த ஒரு நாடோடி கூட்டம்
மலை நிறைய மந்தை இருந்தாலும்
இவர்களின் சிந்தை நிறைய
சீமை கருவேலி
மரங்களின் ஆக்கிரமிப்பு
அதிகமாய் இருந்தது .
இதனால் என்ன பயன்
புசிக்க கனிகள் தருமா?
முட்கள் தரும் இந்த மரத்திற்கு
சுட்டெரிக்கப்படுவதே முடிவு.
முதன் முதல் இஸ்ரவேலரை
எதிர்த்து நின்று கானானுக்குள்
கால் வைத்துவிடாதபடி
தடுத்து நிறுத்தியவன்
இந்த ஏசாவின் பேரன்.
இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது,
அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த
செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்
என்று சேனைகளின் கர்த்தர் சொன்னது
உங்கள் மனதிலும் இருக்கும் என்று நம்புகிறேன்
உனது ஆவிக்குரிய பயணத்தை,
வேதம் சார்ந்த விசுவாசப் பயணத்தை
தடுப்பதும், தடுப்புச் சுவர் எழுப்புவதும்
ஏசாவின் வம்சாவழிகளே!
ரெவி தீமில் இவனையும், இவனது கூட்டத்தையும் அடக்கிப் போட, முடக்கிப் போட மோசே தன் கைகளை உயர்த்தினான் .
எண்பது வயதைத்
தாண்டியதொரு மனிதனால்
எவ்வளவு நேரம் உயர்த்தமுடியும்?
விரைவில் தளர்ந்தது ,
வெற்றி வாய்ப்பும் தளர்ந்தது
ஆரோனின் கைகளும் ஊர் என்பவர்களின்
கைகளும் விரைந்துவந்தது
தாக்குவதற்கல்ல, தாங்குவதற்கு!
முந்தினவன் அண்ணன்
பிந்தினவன் மைத்துனன்
மீரியாமின் புருஷனாக இருக்கலாம்
இது ஒரு குடும்ப ஊழியம்
என்று நினைத்துவிடாதீர்கள்!
மலையேறினாலும் மைத்துனனின்
உதவி தேவை என்று
ஊரில் சொல்லுவார்கள்
மோசேக்கு அந்த உதவி
ஊர் மூலம் கிடைத்துவிட்டது
மோசேயின் கைகள்
உயர்த்தப்பட்டிருந்தபோது
இஸ்ரவேலர் வெற்றிபெற்றார்கள்
கைகள் தளர்ந்து தாழ விழுந்த போது
அமலேக்கு வெற்றிபெற்றான்
ஊர் மற்றும் ஆரோன் ஆகிய
இருவரின் உதவியால்
உயர்த்தியே வைக்கப்பட்ட
மோசேயின் கைகள்
இறுதி வெற்றியை பெற்றது
யோசுவா அமலேக்கையும்
அவன் ஜனங்களையும்
பட்டயக்கறுக்கினாலே முறிய அடித்தான்
உன் இரண்டு கைகளும்
வானத்தையும் வானவரையும்
நோக்கி உயர்த்தியே இருக்கட்டும்
உனக்கும் உன்னைச் சார்ந்தவர்களுக்கும்
வெற்றியைப் பெற்றுத் தருவது
ஒத்தாசை வரும் பர்வதத்திற்கு நேராக
உயர்த்தப்பட்ட
உன் கையில்தான் இருக்கிறது
சொல்லிக்கொள்ள பெரிதாய்
கைகளில் ஒன்றும் இல்லையென்றாலும்
அடிக்கடி பிலாத்து போல
கைகளைக் கழுவ நேரிட்டாலும்
உயர்த்திப் பிடித்து ஜெபிக்க
ஒருபோதும் மறந்து போகாதே
புருஷர்களுக்கு
ஒரு கனிவான வேண்டுகோள்;
அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன் – பவுல்
உன் கையை எதிர்பார்த்து
ஆண்டவர் அற்புதம் செய்கிறவர் அல்ல
கோபமும் தர்க்கமுமில்லாமல் உயர்த்தி ஜெபிக்கிற
உன் பரிசுத்தமான கைகளை
பார்த்து அற்புதம் செய்கிறவர்
வெற்றியும் தோல்வியும் உன் கையில் தான் உண்டு.
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் ஜீவதண்ணீர் ஊழியங்கள்-மதுரை-14