சிகிச்சைக்கு வந்த சிறுமியிடம் சில்மிஷம்; பல் மருத்துவர் போக்சோவில் கைது – புதுக்கோட்டையில் பரபரப்பு
Jul 29, 2024, 11:49 PM
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல் மஜித் (வயது 37), பல் மரு்துவரான இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக திருவப்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி நேற்று மாலை சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கிய நிலையில், சிறுமியிடம் மருத்துவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக சிறுமியின் மீது சபலம் ஏற்பட்டு சிறுமியின் பெற்றோரிடம் குறிப்பிட்ட மருந்தை எழுதி கொடுத்து அதனை வெளியில் வாங்கி வருமாறு அனுப்பி உள்ளார்.
மருத்துவரின் பரிந்துரைப்படி குறிப்பிட்ட மருந்தை வாங்குவதற்காக சிறுமியின் பெற்றோர் சிறுமியை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளனர். இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட மருத்துவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி மருத்துவரிடம் இருந்து தப்பி வெளியே ஓடி வந்துள்ளார்.
அதே நேரத்தில் மருந்து வாங்கச் சென்ற சிறுமியின் பெற்றோரும் மருத்துவமனைக்கு வரவே சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மருத்துவர் பாலியல் தொல்லை அளித்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி மருத்துவர் அப்துல் மஜீத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
thanks to asianet news tamil