• Thursday 26 December, 2024 01:21 PM
  • Advertize
  • Aarudhal FM

பாகிஸ்தான் கிறிஸ்தவ மக்களுக்காக நிதி திரட்டும் மறைமாவட்டம்

பாகிஸ்தானின் தேசிய சட்டமன்ற முன்னாள் எதிர்கட்சித் தலைவரான ராஜா ரியாஸின் தந்தை 1960 ஆம் ஆண்டில் ஏழை கிறிஸ்தவர்களை அக்பராபாத்தில் இலவசமாகத் குடியேற அனுமதித்தார்

பாகிஸ்தானின் அக்பராபாத் பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேற நீதிமன்றம் அறிக்கைவிடுத்த நிலையில் பாதிக்கப்பட்ட அக்கிறிஸ்தவர்களின் வாழ்விற்காக நிதி திரட்டத் தொடங்கியுள்ளது மத்திய பாகிஸ்தானின் மறைமாவட்டம்.

அண்மையில் பைசலாபாத் மறைமாவட்டத்தில் உள்ள அக்பராபாத் பகுதியில் வாழ்ந்து வரும் 75 கிறிஸ்தவ குடும்பங்கள் தாங்கள் தங்கியிருந்த 57 ஏக்கர் நிலப்பகுதிகளிருந்து வெளியேற நீதித்துறையால் பணிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்யும் வகையில் 7 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு நிதி திரட்டப்பட்டு வருகின்றது.

இப்பகுதியில் வாழும் 50க்கும் மேற்பட்ட கிறிஸ்தவக் குடும்பங்களில் வாழ்பவர்கள் பெரும்பாலும் துப்புரவுப் பணியாளர்களாக உள்ளனர். இப்பகுதியில் வாழும் ஷாஜாத் மசிஹ் என்பவர் தனது ஐந்து சகோதரகள் மற்றும் நான்கு குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகின்றார். தனது நிலைபற்றி ஆசிய கத்தோலிக்க செய்திகளுக்குக் கூறுகையில், தங்களை மீட்க ஒரு மீட்பர் வருவார் என்றும் அவருக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறினார்.

தரிசாக இருந்த நிலத்தை மக்கள் வாழக்கூடிய இடமாக மாற்ற உழைத்தவர்களில் எனது தாத்தாவும் ஒருவர் என்று கூறிய மசிஹ் அவர்கள்,  1960 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் தேசிய சட்டமன்ற முன்னாள் எதிர்கட்சித் தலைவரான ராஜா ரியாஸின் தந்தை ஏழைக் கிறிஸ்தவர்களை அக்பராபாத்தில் இலவசமாகக் குடியேற அனுமதித்தார் என்றும் கூறினார்.