• Sunday 9 March, 2025 11:53 PM
  • Advertize
  • Aarudhal FM

கல்வி அலுவலகத்தில் தீ விபத்து ஆவணங்கள் எரிந்ததால் பரபரப்பு

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டையில் வட்டார கல்வி அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இயங்கி வருகிறது. இங்கு தா.பேட்டை ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் பதிவேடுகள், பள்ளி மாணவ, மாணவிகள் குறித்தான அனைத்து பதிவேடுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த வட்டார கல்வி அலுவலகத்தின் அருகே காலியாக இருந்த இடத்தில் சருகுகள், காய்ந்த கட்டைகள் கிடந்துள்ளது. இதில் எதிர்பாராத விதமாக பற்றிய நெருப்பு வட்டார கல்வி அலுவலகத்தின் உள்ளே தீப்பொறி பரவி உள்ளது. இதில் வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து புகை வருவதை அப்பகுதியினர் பார்த்து முசிறி தீயணைப்பு நிலையத்திற்கும், ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து முசிறி தீத்தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் கர்ணன் தலைமையில் மீட்பு படையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து பீரோ கணினிகள் உள்ளிட்டவைகளை உடனடியாக வெளியே கொண்டு வந்தனர். இதில் பழைய பதிவேடுகள் அனைத்தும் தீயில் எரிந்து போனது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

துருக்கி ஓட்டல் தீ விபத்து பலி எண்ணிக்கை அதிகரிப்பு

அங்காரா,துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள போலு மாகாணத்தில், சுமார் 12 மாடிகளைக் கொண்ட ஓட்டல் மற்றும் பனிச்சறுக்கு விடுதி அமைந்துள்ளது. தற்போது துருக்கியில் 2 வாரம் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால், இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.இந்த ஓட்டலில் நேற்று எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 66 பேர் உயிரிழந்ததாகவும், 51 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் ஓட்டலில் சுமார் 238 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், இந்த தீ விபத்தில் சிகிச்சை பலனின்றி மேலும் சிலர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 45 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.