• Sunday 9 March, 2025 11:53 PM
  • Advertize
  • Aarudhal FM

நான் ஒரு கிறிஸ்தவன் என்று அரசாங்கத்தில் ஏன் பதிவு செய்ய வேண்டும்?

இன்று இந்திய மக்கள் தொகை 136.64 கோடிகள் 2019 வருட நிலவரப்படி, இதில் இந்திய கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை வெறும் 2.3 சதவிகிதம் கிறிஸ்தவர்கள் தான் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று அரசாங்க கணக்கு சொல்கிறது, 2.3 சதவிகிதம் என்பது 136.64 கோடி இந்தியர்களில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை வெறும் 2.78 கோடிகள் தான்.

இவ்வளவு குறைவாக தான் கிறிஸ்தவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்களா? இதற்கு என்ன காரணம்?

இதில் நம்முடைய கடமை என்ன என்பதை ஆராய்வோம்.இந்தியாவில் மூன்றாவது பெரிய மதமாக கிறிஸ்தவ மதம் உள்ளது, இதில் முதலாவதாக இந்து மதமும் இரண்டாவதாக இஸ்லாமிய மதம் உள்ளது.இதில் கிறிஸ்தவம் இந்தியாவில் வந்த பிறகு சுமார் 650 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இஸ்லாம் இன்று 19 சதவிகிதமாக இருக்கிறார்கள் இதற்கு என்ன காரணம்?அதற்கான காரணம் என்னவென்றால், வேற்று மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கும் ஒருவர் வருகிறார் என்றால், அவரை உடனே அம்மதத்தின் தலைவர்கள் அரசாங்கத்தில் தான் ஒரு இஸ்லாமியர் என்று பதிவு செய்ய சொல்கிறார்கள், அதற்கான ஆலோசனைகளையும் தருகிறார்கள்.

ஆனால் கிறிஸ்தவத்தில் அப்படி இல்லை, வேற்று மதத்திலிருந்து ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு வந்தாலே போதும் என்று நினைக்கிறார்கள்.இது ஒரு விஷயமா அதனாலென்ன என்று நீங்கள் சாதாரணமாக நினைக்கலாம், இதனால் நமக்கு லாபம் என்ன என்று நாம் நினைக்கிறோம், ஆனால் அவர்களோ சட்டப்படி வேற்று மதத்திலிருந்து வருகிறவர்களை அரசாங்கத்தில் தான் ஒரு இஸ்லாமியர் என்று பதிவு செய்கிறார்கள், இங்கு நான் ஒரு மதத்தினரை ஏற்றியோ இறக்கியோ பேச வரவில்லை, நம்முடைய கடமை என்னவென்று சொல்லவே ஆசைப்படுகிறேன்.

ஒரு சிறிய உண்மை சம்பவத்தின் மூலமாக இதை விவரிக்க விரும்புகிறேன், மேற்கு இந்தியாவில் ஒரு மலையின் மேல் அழகான ஒரு சபை இருந்தது, அந்த சபையில் சுற்றிலும் வேற்று மதத்தினர் இருந்தார்கள், அவர்கள் இந்த சபையை எப்படியாகிலும் இல்லாமல் செய்துவிட வேண்டும் என்று அதற்கான வழிவகைகளை தேடிக் கொண்டிருந்தார்கள்.அதற்கு அவர்கள் அந்த சபையை இல்லாமல் செய்வதற்கான எடுத்த முயற்சி என்னவென்றால், அவர்கள் அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சென்று இந்த சபை முறையான இடத்தில் கட்டப்படவில்லை, அதுமட்டுமில்லாமல் இந்த சபையில் இருக்கிறவர்கள் யாருமே கிறிஸ்தவர்கள் இல்லை என்று புகார் செய்தார்கள்.

உடனே அரசாங்க அதிகாரிகள் அனைவரும் அந்த சபைக்கு வந்து அவர்களை விசாரிக்க தொடங்கினார்கள், இந்த சபையில் உள்ள போதகர் மற்றும் விசுவாசிகள் ஐயா நாங்கள் கிறிஸ்தவர்கள் தான் அதனால் தான் இந்த சபையை கட்டி ஆண்டவரை இங்கு ஆராதனை செய்கிறோம் என்றார்கள்.

ஆனால் அந்த அரசாங்க அதிகாரிகளோ அதை நம்பவில்லை, அந்த அரசாங்க அதிகாரிகள் அந்த சபையிலுள்ள விசுவாசிகளை அழைத்து, நீங்கள் அனைவரும் உங்கள் வீடுகளுக்கு சென்று உங்கள் வீட்டில் உள்ள உங்கள் கல்வி சான்றிதழ்களை எடுத்து வாருங்கள் என்று சொன்னார்கள்.அவர்களும் வீட்டிற்கு சென்று தங்களுடைய கல்வி சான்றிதழ்களை எடுத்து வந்தார்கள். அதை அந்த அரசாங்க அதிகாரிகள் பரிசோதனை செய்து பார்த்தார்கள் ,

அதில் ஒவ்வொருவருடைய கல்வி சான்றிதழிலும் அவர்கள் முன்பு தொழுது வந்த அந்த மதத்தின் பெயரும் அந்த சாதியின் பெயரும் அந்த சான்றிதழில் இருந்தது.அரசாங்க அதிகாரிகள் அந்த சபையின் போதகரை பார்த்து, என்னங்க நீங்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் என்று சொன்னீர்கள், ஆனால் உங்கள் அனைவரின் சான்றிதழ்களிலும் வேற்று மதத்தின் பெயர் போட்டிருக்கிறதே என்று கேட்டார்கள், உடனே போதகர் என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்.அரசாங்க அதிகாரிகள் அந்த சபையின் போதகரை பார்த்து சரி அதெல்லாம் விடுங்க, நீங்க போய் உங்கள் சான்றிதழை எடுத்து வாருங்கள் என்று சொன்னார்கள், இதில் என்ன வேடிக்கை என்றால் போதகரின் சான்றிதழிலும் வேற்று மதத்தின் பெயர் இருந்தது, அவரும் அரசாங்கத்தில் தான் ஒரு கிறிஸ்தவன் என்று பதியவில்லை என்பது தான் வேடிக்கை.உடனே அரசாங்க அதிகாரிகள் இவர்கள் யாரும் கிறிஸ்தவர்கள் இல்லை என்று சொல்லி, அந்த சபையை இழுத்து மூடி சீல் வைத்து விட்டு சென்று விட்டார்கள். இன்றும் அந்த சபையை திறக்கவேண்டும் என்று வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலை பிற்காலங்களில் நமக்கும் வராது என்று சொல்ல முடியுமா? அரசாங்கம் பின்வரும் காலங்களில் இந்தியாவில் உள்ள அனைத்து ஆலயங்களுக்கும் சென்று அந்த ஆலயத்தில் உள்ள ஒவ்வொருவருடைய சான்றிதழும் வாங்கி விசாரித்துப் பாருங்கள் என்று சொல்லும் காலம் வந்தால் எத்தனை கிறிஸ்தவர்கள் மிஞ்சுவார்கள் என்பது சந்தேகமே.இன்று நாம் ஏன் இந்திய அரசாங்கத்தில் கிறிஸ்தவர் என்று பதிவு செய்ய தயங்குகிறோம்? நம்முடைய சுயலாபத்திற்காக மற்றும் எப்படி அரசாங்கத்தில் கிறிஸ்தவர் என்று பதிவு செய்வது என்ற அறியாமையும் கூட.

இன்று கிறிஸ்தவத்தில் அநேக வேற்று மதத்தினர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் யாருமே நான் ஒரு கிறிஸ்தவன் என்று அரசாங்கத்தில் பதிவு செய்யவில்லை, மற்றும் அதற்கான ஆலோசனைகளை போதகர்களும் மற்ற யாருமே தருவதில்லை மற்றும் அதை குறித்து அறிந்து கொள்ளவும் விரும்பவில்லை, ஒரு சிலரை தவிர.அநேகர் பழைய மதத்தின் பெயர் மற்றும் சாதி பெயரை சொல்லி அரசாங்க வேலை மற்றும் நல்ல பதவியில் இருக்கிறார்கள்,

இப்படிப்பட்டவர்கள், நான் ஒரு கிறிஸ்தவன் என்று அரசாங்கத்தில் பதிவு செய்தால் இப்பொழுது இருக்கும் வேலைக்கு ஆபத்து வந்துவிடும் என்ற ஒரு சுயநலத்தில் இருப்பவர்கள் எப்படி அரசாங்கத்தில் நான் ஒரு கிறிஸ்தவன் என்று பதிவு செய்வார்கள்?மத்தேயு 10 : 32 – 33 – ம் வசனம் சொல்கிறது, மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன். என்று.ஒவ்வோரு கிறிஸ்தவரும் தான் ஒரு கிறிஸ்தவன் என்று அரசாங்கத்தில் பதிவு செய்யும்போது, உலகத்திற்க்கு முன்பாக நாம் ஆண்டவரை அறிக்கையிடுகிறோம்.ஒரு நண்பர் என்னிடம் கேட்டார்,

சகோ நான் தற்சமயம் பழைய மதத்தின் பெயர் மற்றும் சாதியின் பெயரைச் சொல்லி வேலையில் இருக்கிறேன், இன்னும் சிறிது காலம் எனக்கு பணிகள் உண்டு, நான் இப்பொழுது போய் அரசாங்கத்தில் ஒரு கிறிஸ்தவன் என்று பதிவு செய்தால் என்னுடைய வேலைக்கு ஆபத்தாக முடியுமே என்ன செய்வது சகோ ஆலோசனை சொல்லுங்கள் என்றார்.

அதற்கு நான் அவருக்கு சொன்ன ஆலோசனை என்னவென்றால், சகோ அது உங்களுக்கும் ஆண்டவருக்கும் உள்ள அன்பை பொறுத்திருக்கிறது, நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்று அரசாங்கத்தில் பதிவு செய்வது என்றேன்.நான் இம்மட்டும் நடத்தின என் ஆண்டவர் இனிமேலும் நடத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்றேன்.மேற்குறிப்பிட்ட காரணங்களே இன்று அரசாங்கத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.3 சதவீதமாக இருப்பதற்கு காரணம்.

அதற்கு நாம் ஒரு சில உலகப்பிரகாரமான நன்மைகளை இழக்க நேரிடும் என்பதே நிதர்சனமான உண்மை. இது உங்களுக்கும் ஆண்டவருக்கும் உள்ள அன்பை பொருத்தே இருக்கிறது.

அரசாங்கத்தில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை 2.3 ஆக இருக்கிறது என்பதற்காக இந்த பதிவு இல்லை, ஒவ்வொரு கிறிஸ்தவரும் அரசாங்கத்தில் தன்னை ஒரு கிறிஸ்தவன் என்று பதிவு செய்யும்போது, நாம் உலகிற்கு முன்பாக ஆண்டவரை மறுதலியாமல் அவரை அறிக்கை செய்கிறோம் என்பதற்காக மட்டுமே இந்த பதிவு. *இதன் மூலம் ஆண்டவரின் நாமம் நம் மூலமாக இந்த உலகிற்கு முன்பாக புகழ்ச்சி அடையும் என்பதில் எந்தவித சந்தேகம் இல்லை.

நன்றி

பாஸ்டர்எஸ். எஸ் .இன்பராஜ்

கிறிஸ்துவ சாதி மறுப்பாளர்

வீரணாமூர் செஞ்சிக்கோட்டை விழுப்புரம் மாவட்டம்