• Monday 10 March, 2025 05:13 AM
  • Advertize
  • Aarudhal FM

நாம் செய்யும் பிரசங்கம் எப்படி இருக்கிறது

இளம் தலைமுறை ஊழியர்களின் பிரசங்கங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன… தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்த்தால் அது துக்கத்தையே ஏற்படுத்துகிறது…..

ஆ…….. ஐ……….. ஊ…… ன்னு கத்துராய்ங்க…. மைக்கை உதட்டில் வைத்து கொண்டு ரிசீவ் பவர்…. ன்னு ஓயாமல் சொல்லி…. சொல்லி கழுதை போல கனைக்கிறார்கள்…. அதிலும் ஒரு பக்கம் ஒன் டு ரிதம் போட்டு காட்டு கத்தம் கத்தி…. ஹார்ட் அட்டாக் வராதவனுக்கெல்லாம் வந்திரும் போல…… டேய் என்னடா பண்றீங்க ன்னு உலகத்தாரின் பரியாசத்திற்கும் கேலி கிண்டலுக்கும் உரியதாக மாறுகிறது.

பிரசங்கம் செய்யும் போது மேடையில் அங்கும் இங்கும் வெறி பிடித்த நாயை போல அலைகிறார்கள்…. ஏன் என்று தெரியவில்லை. ஒரு இடத்தில் நின்று கொண்டு நிதானமாக பேசினால் என்ன…. இதை எங்கிருந்து கற்றுக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.நிதானமாக அழகாக தெளிவாக பேசலாமே… ரொம்பவே வேகம் வேகமாக பேசுகிறார்கள்…. அது மக்கள் மனதில் எப்படி நிற்கும். நிதானமாக பேசினால் தான் எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்கள் மனதில் இருக்கும். அது கிரியை செய்யும்.

எடுக்கிற வசனத்திற்கும் பிரசங்கத்திற்கும் சம்பந்தம் இல்லை… ஏதோ ஒரு வசனத்தை வைத்து பேசுகிறார்கள்…தேவ சமூகத்தில் கிடைக்கும் மன்னா இன்று மண்ணாகி போனது.

மற்ற ஊழியர்களுக்கு கீழ் உட்கார்ந்து கற்றுக் கொள்ள ஆசை இல்லை… மற்றவர்களின் பிரசங்கத்தை கேட்பதும் இல்லை மதிப்பதும் இல்லை…

மொத்தத்தில் வசனத்தை தெளிவாக பேசும் ஊழியர்கள் தேசத்தில் குறைந்து விட்டார்கள்.காரணம் வேதம் வாசிக்கும் தியானிக்கும் பழக்கம் ஊழியர்களிடம் இப்போது குறைந்து விட்டது.

அவரவர்களுக்கு ஏற்றப்படி வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். அதை குறித்து அவர்கள் எவருக்கும் பயப்படுவதில்லை.

நாம் செய்யும் பிரசங்கத்தில்…

இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப்பட வேண்டும்.
இரட்சிப்பு
மனந்திரும்புதல்
உயிர்மீட்சி
புதுப்பிப்பு
சுத்திகரிப்பு
இயேசு கிறிஸ்துவின் வருகை
ஆத்தும ஆதாயம்
ஞானஸ்நானம்
பரிசுத்தத்தின் அவசியம்.
சபையின் நோக்கங்கள்
பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம்.. அதன் முக்கியத்துவம்.
பரலோகம்
தூதர்களின் பணிகள்
சாத்தானின் பொய்களும் அவனது தந்திரங்கள் என்னென்ன…
அவனின் முடிவு எப்படி இருக்கும்.
நரகம் பாதாளம்… யாருக்கு
கடைசி காலம் எப்படி இருக்கும்.

இப்படி அனைத்து சாரம்சமும் ஒரு பிரசங்கத்தில் இருக்க வேண்டும். ஒரு பிரசங்கி என்பவன் ஒரு துப்பாக்கி வைத்து இருப்பவனை போல அல்ல.. யாரையாவது குறிவைத்து சுட…. மாறாக அவன் ஒரு பெரிய அணுகுண்டை கையில் வைத்திருக்கிறவனுக்கு சமானம். ஒரு அணுகுண்டுக்கு இருக்கும் வல்லமையை விட பிரசங்கத்திற்கு அதிகம் வல்லமை உண்டு. காரணம் எந்த அணுகுண்டும் சரீரத்தை உடைக்க முடியும் ஆனால் இருதயத்தை உடைக்க முடியாது. பிரசங்கம் மட்டுமே மனிதர்களின் இருதயத்தை உடைக்கும் வல்லமை படைத்தது. பிரசங்கிகள் தேவனின் வாயாக இருக்கிறார்கள். தேவனுடைய ஆவியானவரே அந்த பாத்திரத்தில் இருந்து பேசுகிறார். ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் பிரசங்கிகள்.

அது மட்டுமல்ல இப்போது உள்ள கால சூழ்நிலையில் எல்லாருடைய கையிலும் மொபைல் கேமாராவோடு உள்ளது. எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டும் என்றாலும் பதிவு செய்யலாம் ஆகவே மிகவும் கவனத்துடன் பிரசங்கம் செய்ய வேண்டும். இந்த கவனம் இல்லை என்று சொன்னால் கேலிக்கூத்தாக மாறி விடும்.

மொத்தத்தில் பிரசங்க மேடையில் தேவ பிரசன்னம் இல்லை…. தேவனுக்கு பயப்படும் பயம் இல்லை. ஏதோ ஒரு பட்டிமன்ற பேச்சாளர்களை போல பேசும் இவர்களை கொண்டு பரலோக ராஜ்ஜியத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை….

கர்த்தரை துதிப்பது

1) இன்பமானது – சங் 147:1
2) நல்லது – சங் 147:1
3) ஏற்றது – சங் 147:1
4) நலமானது – சங் 92:1,3
5) தகும் – சங் 33:1
6) கர்த்தருக்கு பிரியமானது – சங் 69:30,31
7) கர்த்தர் மகிமைபடுகிறார் – சங் 50:23

அப்பாவின் அன்பை விட ஐபோன் பெரிதா..?

அப்பாவின் அன்பை விட ஐபோன் பெரிதாகிபோன மகாராஷ்ட்ராவில் 10ஆம் வகுப்பு பயிலும் சிறுவன் ஒருவன், தனது தந்தையிடம் ஐபோன் வாங்கி தருமாறு கேட்டுள்ளான். ஏழை விவசாயியான அவனது தந்தையோ, தனது வறுமை நிலையை எடுத்துக் கூறி, அதை வாங்கி தர மறுத்துவிட்டார். இந்த ஆத்திரத்தில் அங்குள்ள மரத்தில் சிறுவன் தூக்கிட்டுக் கொள்ள, அதே மரத்தில் தந்தையும் தூக்கிட்டு உயிரை மாய்த்துவிட்டார். வறுமையிலும் தன்னை படிக்க வைத்த அப்பாவின் அன்பை விட, ஐபோன் பெரிதாகிவிட்டதா?

விசுவாசம் நமது வாழ்க்கையில் எப்போது எல்லாம் காணப்பட வேண்டும்

1) துன்பங்களில் – 2 தெச 1:4
2) உபத்திரவங்களில் – 2 தெச 1:4
3) பொல்லாங்கன் (பிசாசு) உடன் போராடும் போது – எபேசி 6:16
4) வியாதி நேரத்தில் – யாக் 5:15
5) ஜெபிக்கும் போது – மத் 21:21
6) இருதயம் கலங்கும் போது – யோ 14:1

பரிசுத்த வேதாகமத்தில் சிறுவரின் பங்கு

1.‌சிறுவனாகிய சாமுவேல்

தரிசனத்தை அறிவிக்க கர்த்தர் சிறுவனாகிய சாமுவேலைப் பயன்படுத்தினார்
1சாமுவேல் 3:4,6,8,10,21

2.‌சிறுவனாகிய சாலொமோன்

நியாயத்தை விசாரிக்க கர்த்தர் சிறுவனாகிய சாலொமோனைப் பயன்படுத்தினார்
1இராஜாக்கள் 3:5-15

3.‌சிறுவனாகிய எரேமியா

ஜாதிகளுக்கு தீர்க்கத்தரிசியாக கர்த்தர் சிறுவனாகிய எரேமியாவைப் பயன்படுத்தினார்
எரேமியா 1:1-7

4.‌சிறுமியாகிய அடிமைப் பெண்

நாகமான் குஷ்டரோகம் நீங்கி சுகமடைய கர்த்தர் சிறுமியாகிய அடிமைப்பெண்ணைப் பயன்படுத்தினார்
2இராஜாக்கள் 5:1-16

5.‌சிறுவனாகிய பையன்

ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் கொடுக்க கர்த்தர் சிறு பையனைப் பயன்படுத்தினார் யோவான் 6:1-14

அருட்கவி ஆயர்
முனைவர் மு. அருள்தாஸ்

யாரை நேசிக்கின்றீர்கள்

நீங்கள் வாழ்க்கையில் யாரை அதிகமாய் நேசிக்கின்றீர்கள் என்ற கேள்வியை நான் கேட்டால். ஒருவரது அல்லது இருவரது பதிலை கூறுவீர்கள். உண்மைத்தான். நாம் யாரையும் நேசிக்காமல் இருக்க முடியாது.

  1. ஒன்று எம்மை நேசிக்காத நபர்களை நாம் நேசிப்போம். அவர்கள் மீது நம்பிக்கை வைப்போம்.
  2. இரண்டு எம்மை நேசிக்கும் நபர்களின் நேசத்தை புரிந்துகொள்ளாதவர்களாக அவர்களை தள்ளி வைப்போம். பொதுவாக இவ்விரண்டிலும் தான் முழு மனித வர்க்கமே தடுமாறுகின்றது.

உன்னை நேசிக்காத நபர்களை நீ நேசிக்கின்றாயா? அல்லது உன்னை நேசிக்கும் நபர்களின் உண்மையான அன்பை புரிந்துகொள்ளாத நபராக இருக்கின்றாயா? என்பதை நிச்சயமாக நீ சிந்திக்க வேண்டும்.

ஆமாம். விளங்க வைக்கிறேன். நான் திருமண வயதை அடைந்தபோது நான் சிந்தித்த இரு பெண்கள் ஒரு கிறிஸ்தவ நிறுவனத்தில் ஊழியம் செய்து வந்தனர். அதில் ஒரு பெண் என்னை விரும்பினாள். ஆனால் அவளது அன்பை நான் புரிந்துகொள்ள இயலவில்லை. காரணம் – நான் அதே இடத்திலிருந்த இன்னொரு பெண்ணை நேசித்ததே. சில காலம் சென்ற போதுதான் இரண்டாமவள் – நான் நேசித்தவள் – எனது நேசத்திற்கு உகந்தவள் அல்ல என்பதை உணர்ந்தேன். அதற்கிடையில் என்னை நேசித்தவள் என்னை விட்டு விலகி சென்றுவிட்டாள்.


தற்பொழுது எனக்கு இரு பிள்ளைகள் இருக்கின்றார்கள். மகனை நான் அதிகமாக நேசிப்பதினால் – அவனுக்கு செலவு செய்யும்போது எவ்வித கணக்கும் பார்ப்பதில்லை. ஆனால் மகளுக்கு செலவு செய்யும்போது கணக்கு பார்கிறேனே… ஏன்? உண்மையில் மகனை விட மகளே அதிகமாக என்மீது அன்பு காட்டுகின்றாள் என்பதை நான் நன்கு அறிந்திருந்தும் ஒரவஞ்சனை எனக்குள் தலைதுாக்குவதை உணர்ந்திருக்கிறேன்.

நான் பணிபுரியும் கிறிஸ்தவ அலுவலகத்தில் எனது உயர் அதிகாரி தான் விரும்பும் நபர்களுக்கு பதவி உயர்வு கொடுப்பதை அதிகமாக நேரங்களில் கண்டிருக்கிறேன். தான் விரும்பாத நபர்களுக்கு எவ்வித உயர்வையோ உரிய கனத்தையோ கொடுப்பதில்லை. காலப்போக்கில் அவர் யாரை நேசித்து பதவி உயர்வு கொடுத்தாரோ அவர்களே இவரோடு வேலை செய்ய முடியாது அல்லது சம்பளம் போதாது என விலகி சென்றதை கண்டிருக்கிறேன். அதேநேரம் அவர் யாரை நேசிக்காமல் ஒதுக்கினாரோ அவர்களே அவருக்கு அதிக நன்மை செய்துள்ளார்கள்.

இப்ப சொல்லுங்கள்… நாம் யாரை நேசிக்கிறோம், உங்களை நேசிப்பவர்களை அவர்களின் நேசத்தை அசட்டை செய்கின்றீர்களா அல்லது உங்களை உண்மையாக நேசிக்காதவர்களின் மாயைக்குள் அகப்பட்டுள்ளீர்களா

நீதிமொழிகள் 7 ம் அதிகாரத்தின் 22ம் 23ம் வசனம் கூறுகிறது

உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவது போலும், ஒரு குருவி தன் பிராணணை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது

நன்மையைத் தேடுங்கள்…

நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்..ஆமோஸ் 5:14

தீமையை அநுபவிப்பவர்கள் யாரால் தீமை நடந்ததோ அவர்களை ஆசீர்வதிக்கமாட்டார்கள். நம்பியவர்களுக்கு துரோகம் செய்வது தீமை.. மனச்சாட்சிக்கு விரோதமாக செயல்படுவது தீமையை சார்ந்தது. தீமையின் பலனை சந்ததிகள் அநுபவிப்பவர்கள்.

நீங்கள் நன்மையை தேடவேண்டும்.. தீமைக்கு விலகி இருங்கள். உங்களால் எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ செய்யுங்கள்.. நன்மையை தேடுங்கள்.. நன்மைக்கு நிச்சயம் ஆண்டவர் உங்களுக்கு நல்ல பலன் தருவார். வாழ்ந்திருக்கச் செய்வார்..

நீங்கள் செய்கிற நன்மை ஒரு நாளும் வீணாகாது.. மனிதர்கள் நீங்கள் செய்த நன்மையை மறந்துப்போகலாம். உங்களுக்கே தீமை செய்து இருக்கலாம். கவலைப்படாதீங்கள்.. நீங்கள் செய்த நன்மையை ஆண்டவர் மறக்க மாட்டார்..

நீங்கள் நன்மையை தேடும்போது நீங்கள் சொல்லுகிறபடி ஆண்டவர் உங்களோடு இருப்பார். உங்கள் சொல் கேட்கப்படும்.. ஆண்டவர் உங்களோடு இருந்து உங்கள் காரியங்களை வெற்றி அடையச்செய்வார். ஆண்டவரை நம்புங்கள்..!!!

இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவ விசுவாசி எப்படிபட்டவராக இருக்கவேண்டும்

  1. 👉 நற்போதகத்தில் தேறினவனாயிருக்க வேண்டும். — 1Tim 4:6
  2. 👉🏾 நற்கந்தமாய் ஜீவிக்க வேண்டும். — Luk 1:19
  3. 👉 நற்சாட்சியாக இருக்கவேண்டும். — Act 6:3 / Act 16:2 / Luk 4:22
  4. 👉🏾 நற்குணமுள்ளவர்களாயிருக்க வேண்டும். — Act 17:11 / Rom 15:14 / Gal 5:22 / Eph 5:9
  5. 👉 நற்கனி கொடுக்கிறவர்களாயிருக்க வேண்டும். — Jas 3:17 / John 15:8
  6. 👉🏾 நற்கிரியை செய்கிறவர்களாயிருக்க வேண்டும். — _Matt 5:16 / Matt 26:10 / Col 1:10 / 1Tim 2:10 / 1Tim 5:10
  7. 👉 நற்செய்தி அறிவிக்கிறவர்களாயிருக்க வேண்டும். — Luk 1:19 / Luk 2:10 / Luk 8:1 / 1Thess 3:6 / 2King 7:9 / Rom 10:14- 15 / Rom 1:14-16
  8. 👉🏾 உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவனாக இருக்க வேண்டும். — Ps 15:2
  9. 👉 கீழ்ப்படிதல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். — Rom 16:19
  10. 👉🏾 கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாக இருக்க வேண்டும். — Phil 2:15
  11. 👉 மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல் இருக்க வேண்டும். — 2Cor 1:12
  12. 👉🏾 தேவபக்தியுள்ளவனாக இருக்க வேண்டும். — Acts 10:2
  13. 👉 தன்வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்கிறவராக இருக்க வேண்டும். — Acts 10:2
  14. 👉🏾 சகல யூதராலும் நல்லவனென்று சாட்சிபெற்றவர்களாவும் இருக்க வேண்டும். — Acts 22:12
  15. 👉 தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறவர்களாக இருக்கவேண்டும். — 2Cor 2:17
  16. 👉🏾 அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திரவர்களாக இருக்க வேண்டும். — Acts 2:42
  17. 👉 நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். — Tit 2:14 / Tit 3:8
  18. 👉🏾 எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் இருக்க வேண்டும். — Luk 12:37
  19. 👉 இருதயத்தில் சுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். — Matt 5:8
  20. 👉🏾 கிறிஸ்துவின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, கிறிஸ்துக்கு பின்செல்லுகிறவராக இருக்க வேண்டும். — John 10:27

இளையோரும், இணைய தளங்களும்

விண்ணரசு, கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். அந்த வலையானது நல்ல மீன்களையும், கெட்ட மீன்களையும் இழுத்து வருகிறது. நல்லவை கூடையில் சேர்க்கப்படும், கெட்டவை வெளியே கொட்டப்படும் என இயேசு ஒரு முறை விண்ணரசைக் குறித்து உவமை ஒன்றைச் சொன்னார். அதை இன்றைய இணைய வலையோடும் ஒப்பிடலாம்.

இணைய வலையானது டிஜிடல் தகவல்களை சகட்டு மேனிக்கு அள்ளிக் கொண்டு வந்து கொட்டுகிறது. அவற்றிலிருந்து நல்லவற்றைப் பொறுக்கி கூடையில் வைக்க வேண்டும், கெட்டவற்றை வெளியிலே கொட்ட வேண்டும். அப்போது அந்த வலை பயனுள்ளதாய் இருக்கும். அதை விட்டு விட்டு, நல்லவற்றை நிராகரித்து விட்டு தீயவற்றைத் தேர்ந்தெடுக்கும் போது வலையானது நமது கழுத்தை இறுக்கும் சுருக்காக மாறிவிடுகிறது.

சிறு வயதுக் கதைகளில் வேடன் வலையை விரித்து, அதில் தானியத்தை பரப்பி வைப்பான். அந்தத் தானியத்தின் வசீகரத்தைக் கண்டு பறவைகள் அதில் வந்து அமரும் போது அவை வலையில் சிக்கிக் கொள்ளும். அவற்றை அவன் வந்து சாவாகாசமாகப் பிடித்துச் செல்வான். இன்றைக்கு இணையமும் அப்படித் தான், பல வசீகரத் தானியங்களை வலைத் தளங்களில் விரித்து வைத்து இளைஞர்களின் ஆர்வத்தை தவறான வழியில் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.

குறிப்பாக சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் எந்த ஒரு தனிநபர் தகவலையும் கொடுக்காமல் இருப்பது மிக மிக முக்கியம். குறிப்பாக இளம் பெண்கள் இந்த வலையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நிம்மதியான வாழ்க்கைக்கு அவசியம். ஒரு தேவையற்ற புகைப்படமோ, ஒரு தேவையற்ற மின்னஞ்சலோ, ஒரு தேவையற்ற வாட்சப் உரையாடலோ போதும் காலமெல்லாம் நமது நிம்மதியைக் குழி தோண்டிப் புதைக்க.

காலங்கள் கடந்தாலும் சோதனைகள் தீர்வதில்லை. ஒவ்வொரு காலத்திலும் சாத்தான் தனது சோதனையை வேறு வேறு விதமாகத் தந்து கொண்டே இருப்பான். ஆதியில் பழத்தைக் காட்டி ஏவாளை வசீகரித்த சாத்தான், இன்றைக்கு தளத்தைக் காட்டி இளைஞர்களை இழுக்கப் பார்க்கிறான்.

ஒன்று மட்டும் மனதில் கொள்ள வேண்டும். சாத்தானால் சோதனைகளைத் தர மட்டுமே முடியும், அதில் விழுவதா இல்லையா எனும் முடிவு நம்மிடமே இருக்கிறது. பழத்தைச் சாப்பிடும் ஆசையை சாத்தான் தூண்டினான், ஏவாள் விழுந்தாள். பாவத்தை அரவணைத்தாள். கல்லை அப்பமாய் மாற்றிச் சாப்பிட இயேசுவின் ஆசையைத் தூண்டினான். இயேசு நிமிர்ந்தார், புனிதத்தை தேர்ந்தெடுத்தார். அது தான் வித்தியாசம். சோதனைகளின் வசீகரத்தில் வழுக்கிவிட்டால், ஆன்மிக முதுகெலும்பு உடைந்து போகும் என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய தொழில்நுட்ப உலகில் அனைத்துமே இணைய இழைகளால் இறுக்கிக் கட்டப்பட்டிருக்கின்றன. எனவே இணையத்தைத் தவிர்த்துவிட்டு வாழ்ந்தல் என்பது ஏறக்குறைய சாத்தியமற்ற நிலை என்று கூடச் சொல்லலாம். இந்த சூழலில் கவனமாக வாழவேண்டியது நமது தேவை. எப்படி இயேசு அழைத்தபோது, “வலைகளை விட்டு விட்டு” இயேசுவை சீடர்கள் பிந்தொடர்ந்தார்களோ, அது போல நாம் ‘இணைய வலையை’ விட்டுவிட்டு இயேசுவைப் பின்செல்லத் தயாராய் இருக்க வேண்டும்.

எல்லாவற்றிலும் நன்மையும் தீமையும் இரண்டறக் கலந்தே இருக்கின்றன. நன்மையைப் பற்றிக் கொள்வதும், தீமையை விட்டுச் செல்வதும் நமது கையில் தான் இருக்கிறது. இயேசு “வலப்பக்கமாக வலைகளை வீசுங்கள்” என்றார். வலப்பக்கம் என்பது விண்ணகத்தின் பக்கம். வலப்பக்கமாய் வீசும் வலை என்பது நல்ல விஷயங்களைப் பெற்றுக் கொள்ள இணையத்தைப் பயன்படுத்துதல் என்றும் புரிந்து கொள்ளலாம்.

இணைய தளத்தைத் தவிர்த்தல் சாத்தியமற்ற இன்றைய சூழலில் எப்படியெல்லாம் இணையத்தை நல்லமுறையில் பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்து கொள்வது பயனளிக்கும்.

1. கலைகளை வளர்க்கலாம்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நமது கலைகளை வளர்த்தெடுக்க இணையம் நமக்கு வாய்ப்புகளைத் தருகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு இசைக்கலைஞன் எந்த ஒரு இசைக்கருவியையும் வாங்காமலேயே பாடல்களுக்கு இசையமைக்க முடியும். செலவில்லாமலேயே பாடி ஒரு பாடலை தரமான முறையில் உருவாக்கவும் முடியும். எந்த கலை நமக்குப் பிடித்திருக்கிறதோ, அந்தக் கலையைக் குறித்த அதிக தகவல்களை இணையம் இலவசமாகவே அள்ளித் தருகிறது.

எழுத்தாளர்கள் தளங்களை ஆரம்பித்து தங்கள் சிந்தனைகளை எழுதி வைக்கலாம். ஓவியர்கள் டிஜிடல் ஓவியங்களை அழகாக உருவாக்கலாம். பாடகர்கள் தங்களுடைய குரலை பதிவேற்றி அங்கீகாரம் பெறலாம். இப்படி எந்த ஒரு கலையையும் வளர்க்கலாம். இந்த கலைகளையெல்லாம் இறைவனுடைய மகிமைக்காகச் செய்யும் போது அவை அர்த்தம் பெறும்.

2. சிந்தனைகளைப் பகிரலாம்.

இன்றைக்கு இணையதளத்தை மிகவும் பாசிட்டிவாகப் பயன்படுத்தும் ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக யூடியூப் சேனலை எடுத்துக் கொண்டால், நிறைய கிறிஸ்தவ படைப்புகள் சார்ந்த தளங்கள் இருக்கின்றன. நம்முடைய சிந்தனைகளை வீடியோவாகப் பதிவுசெய்து வைக்கும்போது அவை சர்வதேச அளவில் மக்களுக்குப் பயனளிக்கின்றன. தொலைக்காட்சியைப் போல, ‘ஆன்லைன் தொலைக்காட்சிகள்’ உருவாக்குவதும் எளிதாகியிருக்கிறது. இவையெல்லாம் இளைஞர்கள் தங்களுடைய சிந்தனையை நல்ல முறையில் காட்சிப்படுத்த உதவும்.

தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள், தன்னம்பிக்கை சார்ந்த விஷயங்கள், கிறிஸ்தவம் சார்ந்தவ விஷயங்கள் என சமூகத்துக்குத் தேவையான, பலருக்கும் பயனளிக்கக் கூடிய விஷயங்களை இத்தகைய இணைய தளங்களில் பதிவிடலாம். கிறிஸ்தவ மதிப்பீடுகளுக்கு எதிரான எதையும் பதிவிடக் கூடாது என்பது மட்டுமே சிந்தையில் கொள்ள வேண்டிய விஷயம்.

3. தொடர்பில் இருக்கலாம்.

நண்பர்களோடும், உறவினர்களோடும், ஆசிரியர்களோடும், ஆன்மிக வழிகாட்டிகளோடும் எப்போதும் தொடர்பில் இருப்பதற்கு இன்றைக்கு இணையம் உதவுகிறது. முன்பு இத்தகைய வசதிகள் இல்லை. நேரடியாகவோ, கடிதம் மூலமாகவோ தான் தொடர்பு கொள்ள முடியும் எனும் நிலை இருந்தது. இந்த தொடர்பு விஷயத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை வைத்தே நன்மையும் தீமையும் முடிவு செய்யப்படுகிறது. தேவையற்ற அரட்டைகளில் மூழ்கி, டிஜிடல் வெளிச்சத்தில் நாளெல்லாம் புதைந்து கிடந்தால் நமது வாழ்க்கையும், ஆரோக்கியமும் பாழாகிவிடும்.

தேவையான அன்பையும், நட்பையும் இணையத்தின் மூலம் பகிரவும், பெறவும் செய்தால் நாட்கள் இனிமையாகும். எந்த வகையிலும் நேரடியான மனித உறவுகளை, சந்திப்புகளை, அரவணைப்பை இந்த டிஜிடல் பரிவர்த்தனை இடமாற்றம் செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

4. தொழில்கள் செய்யலாம்.

இன்றைக்கு ஃபிரீலேன்சர்கள், அதாவது சுதந்திரமாக தொழிலைச் செய்பவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களுக்கு இணைய தளங்கள் களம் அமைத்துக் கொடுக்கின்றன. வீட்டில் இருந்தபடியே வேலைகளைச் செய்யவும், அவற்றை இணையத்திலேயே பதிவேற்றி பணம் பெற்றுக் கொள்வதுமான கிரவுட் சோர்சிங் முறையிலான வேலைகள் அதிகம் காணப்படுகின்றன. நாணயமான, நல்ல வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய பணிகளை இளைஞர்கள் தேடிக் கண்டுபிடிக்கலாம்.

அதே நேரம், இணையத்தில் ஏமாற்றுபவர்களும் ஏராளம் உண்டு என்பதால் விழிப்புடன் இருக்க வேண்டியதும் அவசியம். தவறான செயல்களில் ஈடுபடுவது நமது அமைதியான வாழ்க்கையையே மிக எளிதில் அழித்து விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

5. நேரத்தை மிச்சப்படுத்தலாம்

இணையமும், இணையதளங்களும் நமக்கு நிறைய நேரத்தை மிச்சப்படுத்தித் தருகின்றன. ஒரு ரிக்கார்ட் எழுதவே லைப்ரரிகளில் மாதக் கணக்கில் நூல்களைப் புரட்டிய காலங்கள் மலையேறிவிட்டன. இன்றைக்கு இருக்கும் இடத்திலிருந்து கொண்டே தகவல்களை உலகில் எந்த மூலையிலிருந்தும் இழுத்து எடுக்கலாம். மிக எளிதாகக் கிடைக்கின்ற தகவல்கள் நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தித் தருகின்றன. இருந்த இடத்திலிருந்தே செய்து முடிக்கின்ற வங்கி வேலைகள் நமக்கு நேரத்தை சேமித்துத் தருகின்றன.

இப்படி மிச்சப்படுகின்ற நேரங்களை மனித நேயப் பணிகளுக்கும், இறைமகன் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் பணிக்கும் நாம் செலவிட வேண்டும். அப்போது நமக்கு விண்னகத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

இப்படி இணைய தளங்களை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு நமக்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. இணைய தளங்கள் இன்றைக்கு இறை தளங்களாகவும் இருக்கின்றன, சாத்தானின் தளங்களாகவும் இருக்கின்றன. எதை நாம் தெரிந்தெடுக்கிறோம் என்பதில் இருக்கிறது நமது பயணத்தின் வெற்றி.

இணைய தளங்களை நாம் பயன்படுத்தும்போது ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்போம். இந்த இணைய தளத்தை நானும் இயேசுவும் ஒன்றாக அமர்ந்து பார்க்க முடியுமா ? “முடியும்” என நீங்கள் தைரியமாகச் சொல்ல முடிந்தால் அந்தத் தளத்தைப் பாருங்கள். இல்லையேல் தவிர்த்து விடுங்கள். நீங்கள் பாவத்தில் விழ மாட்டீர்கள்.

thanks to Bro. சேவியர்

2020-ஐ நோக்கி . . . .

ஆசிரியர்: டேவின் தன்ராஜ் 

இரண்டாயிரத்து  இருபதை நோக்கி

இயேசுவின் அடிச்சுவடுகளில்

இடதுவலது என்று விலகாமல்

இனியப்பயணம் துவங்கிடுவோம்

சீர்திருத்த நாயகனாம் – இயேசுவின்

சீர்மிகுச்சீடர்களாய்

சேதாரம் சிறிதுமின்றி-இந்தியாவை

செதுக்குவோம் சத்தியத்தால்

மங்கியணையும் மனித நேயத்தை

மீண்டும் எரியச்செய்திட

மாறா கடவுளின் நற்செய்தியை

மானிடர்க்கு பகிர்ந்தளிப்போம்

அறிவியலை ஆய்வுச் செய்திட

ஆவிக்குரியவன் சளைத்தவனல்ல

அரியப் பலப்  படைப்புகளை

அள்ளித்தருவோம் மானிடருக்காய்

ஆண்டவரை அறிந்துக் கொண்ட

ஆவிக்குரியத் தலைவர்கள்

அரசியலை அழகு செய்திட

ஆர்வமுடன் உழைத்திடுவோம்

திரைப்படத் தயாரிப்பாளர் – பலர்

திருச்சபையைத் தேடி வரும்

திறமை மிகு கலைஞர்களை 

திருச்சபை வழங்கிடட்டும்

கால்டுவெல் போப்பைப் பின்பற்றிய

கலையாகிய இலக்கியத்தை

கர்த்தரின் பாதங்களுக்கு-கருத்தாய்

காணிக்கை ஆக்கிடுவோம்

பெண்களை முடக்கி வைக்கும்

பொய்களைச் சுட்டெரிப்போம்

பெண்களும் இறைச் சாயலென்று

பெருமையுடன் தோள்கொடுப்போம்

ஊடுருவிய ஊடகத்தால் – உள்ளம்

ஊனமாகியச் சிறுவர்களை 

உயிர்க் கொடுத்த இயேசுவிடம்

உண்மை வழி நடத்திடுவோம்

வாலிபர்களின் வளங்களை-சபை 

வளாகத்தில் முடக்கிடாமல்

வாழ்வுத்தரும் பல்துறைகளில்

வளர்ந்து வர உதவிடுவோம்

சாதி என்னும் பேய்களை

சபையை விட்டு துரத்திடுவோம்

சாட்சியுள்ள சமுதாயமாய்

சடுதியாய் எழும்பிடுவோம்

சூழலை கெடுக்கும் சங்கதிகளை

சபையில் சொல்லி எச்சரிப்போம்

சூழலை காப்பது கடமையென்று

சபையாருக்கு சொல்லித்தருவோம்