• Sunday 22 December, 2024 12:35 PM
  • Advertize
  • Aarudhal FM

அது ரொம்ப ஈசி

இறைவனுடைய கருணைக்கண் பார்வைக்காகவே மானிடர் ஏங்கித் தவிக்கின்றனர். எப்படியாவது கடவுளுடைய கவனத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவே அவர்கள் பிரம்ம பிரயர்த்தனம் செய்கின்றனர்.

சிலர் ஒறுத்தல் முயற்சிகளைச் செய்து இறைவனின் கவனத்தைப் பெற முயல்கின்றனர். சாப்பாட்டை தவிர்க்கின்றனர், நடை பயணங்கள் மேற்கொள்கின்றனர், பல மணிநேரம் இறைவனை நோக்கி வேண்டுகின்றனர், உடலைக் காயப்படுத்திக் கொள்கின்றனர் இப்படி ஏதேதோ செய்கின்றனர்.

சிலர், “ஆண்டவரே உம்மை விசுவசிக்கிறேன், நீரே கடவுள்” என தொடர்ந்து சொல்லி அவருடைய கவனத்துக்குள் வர முயல்கின்றனர். இன்னும் சிலர், “போதனைகள் செய்து இறைவனின் வளையத்துக்குள் நுழைய முயல்கின்றனர்”

கடவுள் மேல் அன்பு கூர்வது எப்படி என்பதைப் புரிந்துகொள்வதில் இருக்கிறது ஆன்மீகத்தின் தெளிவு.

இயேசு மிகத் தெளிவாகச் சொல்கிறார், “கண்ணில் காணும் சகோதரனை அன்பு செய்யாமல், கண்ணில் காணாத கடவுளை அன்பு செய்ய முடியாது”. சக மனித கரிசனை இல்லாமல் நாள் முழுவதும் பைபிளை எடுத்துக்கொண்டு, விசுவாசம், அன்பு, கிருபை, இரட்சிப்பு என பேசிக்கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை என்பதே இயேசு சொல்கின்ற எளிமையான சிந்தனையாகும்.

இதை உறுதிப்படுத்தும் விதமாகத் தான், இறுதித் தீர்வை நாளில் வலப்புறமும் இடப்புறமும் நிற்கும் மக்களிடம் இயேசு கேள்விகளைக் கேட்கிறார். அவருடைய கேள்விகளில் உன் விசுவாசத்தின் ஆழம் என்ன ? உனது பிரார்த்தனைகளின் நீளம் என்ன ? என்பது இடம்பெறவில்லை. உனது செயல்களில் தெரிந்த நேசம் என்ன என்பது மட்டுமே இடம்பெறுகின்றது.

இயேசுவின் மீது கொள்ளும் விசுவாசமும், நம்பிக்கையும், தேர்வுக்குள் நுழைவதற்காய் தரப்படும் “ஹால்டிக்கட்” போன்றது. மனிதர்கள் மீது பொழிகின்ற அன்பும், கரிசனையும் நாம் எழுதும் தேர்வைப் போன்றது.

வெறும் ஹால்டிக்கெட்டை மட்டுமே வாங்கி விட்டு தேர்வில் முதல் மதிப்பெண்ணைப் பெறலாம் எனக் காண்பது பகல்க்கனவு. அதே போலத் தான் வெறும் விசுவாசத்தை மட்டும் முழங்கிவிட்டு சகமனித கரிசனை இல்லாமல் விண்ணகம் நுழையலாம் எனக் கனவு காண்பதும்.

விவிலியம் சொல்கிறது, “செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம்” ! ஆண்டவர் மேல் அன்பு கூர்வது எப்படி என்பதைப் புரிந்து கொள்வோம், செயல்படுவோம்*

சேவியர்

வனாந்திர வாழ்வை வளமாக்கிய தேவனுடைய வார்த்தை

அன்றைய  ரோம சாம்ராஜ்ஜியத்தின் அரசியல் தலைவர்களும், யூத மதத் தலைவர்களும் அக்கால மக்களின் வாழ்வை வனாந்திரமாக்கியிருந்தனர்.  இந்நிலையில்தான், வனாந்திரத்தில் தேவனுடைய வார்த்தை யோவானுக்கு உண்டாயிற்று (லூக் 3:2), இவ்வாறு வனாந்திரத்தில் உண்டான வல்லமையுள்ள தேவ வார்த்தையை, யோவான் ஸ்நானகனிடத்தில் கேட்டறிந்த  திரள் கூட்ட ஜனங்கள்,  வறட்சியாக்கப்பட்ட வனாந்திர வாழ்க்கையை வளமாக்கினர்.

இதோ, வனாந்திர வாழ்வை வளமாக்கிய தேவனுடைய வார்த்தை

“லூக்கா எழுதின சுவிசேஷம்  மூன்றாம் அதிகாரம் “

1. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தினர். – 3:3 

( தேவன் தங்கள் அருகில் வர )

2. அவருக்கு பாதைகளை செவ்வை பண்ணினர். – 3:3 

( தேவனிடம் நெருங்கி செல்ல )

3. மனந்திரும்புதலுக்கேற்றக் கனிகளைக்  கொடுத்தனர். – 3:8 

( தமது தோட்டத்தில், பராமரித்து பாதுகாத்த தேவனுக்கு )

4. குலப்பெருமையை விட்டு விட்டனர். – 3:8 

( தேவனுக்கு பிள்ளைகளானதால் )

5. ஆடை ஆகாரத்தை, பகிர்ந்துகொண்டனர். – 3:12 

( ஆகாய பறவைகளை அன்றாடம் போஷிக்கும் ஆண்டவரை அறிந்துகொண்டதால் )

6. அநியாயமான  வருமானத்தை மறுத்துவிட்டனர். – 3:13 

( தேவன் நியாயமாய் தீர்ப்பு செய்பவராகையால் )

7. குற்றஞ்சாட்டுவதை நிறுத்தினர். – 3:14 

( தேவனுக்கு முன் தாங்களும் குற்றவாளிகள் எனும் உண்மையை அறிந்ததினால்  )

8. போதும் என்ற மன திருப்தி அடைந்தனர். – 3:14 

( தேவனே  எல்லாவற்றிற்கும் போதுமானவரானதால் )

9. தவறான யோசனையை தவிர்த்தனர். – 3:15-16 

( வரப்போகும் வல்ல தேவனின் வருகையின் உண்மையை  அறிந்துகொண்டதால் )

தேவ வார்த்தையை வாஞ்சையுடன் கேட்போரின் வனாந்திர வாழ்க்கையை வளமாக்கிய தேவனுடைய வார்த்தை இன்றும் மாறாமலிருக்கிறது. 

“கர்த்தர் வனாந்திரத்தை ஏதேனைப்போலவும், கர்த்தரின் தோட்டத்தைப் போலவும் ஆக்குவார்.” ஏசா 51:3

Thanks to K. ராம்குமார் ஓசூர்