- 4
- 20250122
அக்கினி அபிஷேகம்
ஆசிரியர்: சாம் ராமலிங்கம்
கிறிஸ்தவ பிரசங்கியார்கள் மற்றும் ஆராதனை வீரர்கள் பெரும்பாலும் “Fire! Fire!” என்று பிரசங்கிக்கும்போதும், ஜெபிக்கும் போதும், பாடும்போதும் சொல்கிறார்கள். கிறிஸ்தவ பாடகர்களும் Fire என்பதைக் குறித்து “Let the fire fall”, “Set fire to rain”, “Fight fire with Fire” போன்ற நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளனர். தமிழிலும் “அக்கினி அபிஷேகம் ஈந்திடும், தேவ ஆவியால் நிரப்பிடும்”. என்ற சொற்றொடரில் ஒரு பாடல் உள்ளது. அக்கினி என்பதன் சரியான பொருள் நமக்கு தெரியுமா? இந்த சொற்றொடரின் பொருள் நமக்குத் தெரிந்தால், அதை இனி பயன்படுத்தலாமா? ‘Fire’ என்ற சொல்லுக்கு சரியான அர்த்தம் என்ன? இதைப் புரிந்து கொள்ள, புதிய ஏறபாட்டில் ‘Fire’ என்ற வார்த்தையை முதலில் உச்சரித்த யோவான் ஸ்நானகனிடமே செல்வோம்.
யோர்தான் நதியில்
யோவான் யோர்தான் நதியில் தன்னிடம் கூடியிருந்த மக்களை ஞானஸ்நானம் செய்துகொண்டிருந்தபோது, “மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார்¸ அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.” (மத்.3: 11) என்றார்.
ஞானஸ்நானம் என்றால் என்ன?
‘ஞானஸ்நானம்’ என்ற சொல் கிரேக்க வார்த்தையான ‘முழுக்கு’ (βαπτιζειν) என்ற பதத்திலிருந்து வந்தது, அதாவது “மூழ்குதல்”. யோவான் ‘யோர்தான் நதியில்’ மக்களை முழுக்கி ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தார். தண்ணீர் ஞானஸ்நானம் என்பது உண்மையில் “பாவங்களிலிருந்து மனம் திரும்பியதற்கான” அடையாமாக கொடுக்கப்படுகிறது. ஒருவரை தண்ணீரில் முழுக்காட்டுவது (மாற்கு 1: 4) “பழைய மனிதனை” அடக்கம் செய்வதற்கும், கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்பட்டதையும் குறிக்கிறது.
ஞானஸ்நானத்தின் வகைகள்:
“எனக்குப் பின் வருபவர்” என்ற சொற்றொடர் இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. ஆகவே, யோவான் தண்ணீரில் ஞானஸ்நானம் கொடுக்கிறார் என்றும் இயேசு பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் தருவார் என்று பொருள்படக் கூறினார். தண்ணீர் ஞானஸ்நானத்தை இயேசு ஒழித்து மாற்றுவார் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. யோவான் ஸ்நானகன் தண்ணீர் ஞானஸ்நானத்திற்கு கூடுதலாக, கடவுளிடமிருந்து மட்டுமே வரக்கூடிய இரண்டு விளைவுகளான பரிசுத்த ஆவி, மற்றும் அக்கினி ஆகியவற்றை இயேசு கூடுதலாகக் கொடுப்பார் என அர்த்தப்படுகிறது. எனவே, யோவான் ஸ்நானகன் மூன்று வகையான ஞானஸ்நானங்களைப் பற்றி தெளிவாகப் பின்வருமாறு கூறுவதை இங்கே காணலாம்:
- தண்ணீர் ஞானஸ்நானம் – இது பாவமன்னிப்பிற்கென்று மனந்திரும்பி யதை உறுதிப்படுத்துகிறது. மத் 3: 11
- பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் – எருசலேம் மற்றும் யூதேயா முழுவதிலும், மற்றும் சமாரியாவிலும் பூமியின் கடைசி பரியந்தமும் இயேசுவுக்கு சாட்சியம் அளிக்க ஒவ்வொரு நபரையும் ஆற்றல்படுத்துகிறது. – அப். 1: 8
- அக்கினி அபிஷேகம் என்றால் என்ன? பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் தருவார் என்று இயேசு சொன்னபோது யோவான் சரியாக என்ன சொன்னார்? ‘பரிசுத்த ஆவியின் அபிஷேகம்’ மற்றும் ‘அக்கினி அபிஷேகம்’ ஆகியவற்றுக்கு என்ன வித்தியாசம்?
பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்?
அவருடைய உயிர்த்தெழுதலுக்கு சுமார் 40 நாட்களுக்குப் பிறகு, இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களுக்குத் தோன்றி, அவர்கள் விரைவில் “பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறுவார்கள்” என்று சொன்னார் (அப். 1: 5). சில நாட்களுக்குப் பிறகு பெந்தெகொஸ்தே நாளில் அவர்கள் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றபோது இயேசுவின் கூற்று நிறைவேறியது: “அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள்” (அப்போஸ்தலர் 2: 4). இந்த சம்பவமானது, நடக்கும் என்று யோவான் ஸ்நானகனும் இயேசுவும் கூறியதன் நிறைவேற்றமாகும். இதுவே ‘பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்’.
பெந்தெகொஸ்தே நாளில் அக்கினி அபிஷேகம் நடைபெற்றதா?
பெந்தெகொஸ்தே நாளில், அக்கினி அபிஷேகம் நடந்தது என்று சிலர் நம்புகிறார்கள். இது “அக்கினிமயமான நாவுகள் போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு¸ அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது.” என்று அப்போஸ்தலர் 2:3ல் கூறப்பட்டதன் தவறான புரிதலாகும். வசனத்தை உற்று கவனித்தால் இவை அக்கினி போன்று இருந்தன, ஆனால் அக்கினியல்ல என்பதைக் கவனிக்கமுடியும்.
அப்போஸ்தலர் நடபடிகளை எழுதிய லூக்கா, இந்த அதிசயத்தை தனது வாசகர்களுக்கு விவரிக்க அக்கினியை ஒரு உருவமாகப் பயன்படுத்தி இருந்தார். இதற்குப் பிறகு பரிசுத்த ஆவி அபிஷேகம் பெற்ற கிறிஸ்தவர்கள் மீது “அக்கினிமயமான நாவுகள் போல” தோன்றியதாக வேதம் விவரிக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் நடந்த இந்த காரியம் ஒரு தனித்துவமான அதிசயம் ஆகும். கடவுள் மனிதரின் கவனத்தை ஈர்க்க ஒரு வியத்தகு அற்புதத்தை செய்தார் என்றே சொல்லவேண்டும். பெந்தெகொஸ்தே நாளில் அங்கே கூடியிருந்த இந்த விசுவாசிகளுக்கு இதுதான் நடந்தது.
இது நம்மை ஒரு முக்கியமான கட்டத்திற்கு இட்டுச் செல்கிறது: இயேசு ‘பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலுமான ஒரு ஞானஸ்நானத்தை அறிமுகப்படுத்தவில்லை. அவர் இரண்டு தனித்துவமான மற்றும் தனித்தனி ஞானஸ்நானங்களை அறிமுகப்படுத்தினார் என்று வேதம் காட்டுகிறது: ‘பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்’ மற்றும் ‘அக்கினியின் ஞானஸ்நானம்’. ‘அக்கினியின் ஞானஸ்நானம்’ என்பது தண்ணீர் ஞானஸ்நானம் மற்றும் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும்.
இதைப் பற்றிய குழப்பத்தால் சிலர் தங்கள் ஞானஸ்நானத்தின் இன்னொரு பகுதியாக அக்கினி அபிஷேகத்தை பெற விரும்புகிறார்கள். சிலர், “ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் பெற நான் விரும்புகிறேன்!” என்கின்றனர். அக்கினியினால் ஞானஸ்நானம் பெறுவதன் அர்த்தம் என்ன என்பதை இப்போது கண்டுணர்வோம். நாம் பார்ப்பது போல், அக்கினி ஞானஸ்நானம் என்பது யாரும் அனுபவிக்க விரும்பாத ஒன்றாகும்! அக்கினியால் ஞானஸ்நானம் பெறுவது என்றால் என்ன?
“அக்கினி ஞானஸ்நானம்” என்ற சொற்றொடரை நன்கு புரிந்துகொள்ள யோவான் ஸ்நானகனின் சூழலை சுவிசேஷங்கள் மற்றும் பழைய ஏற்பட்டுக் குறிப்புகளைப் படிப்பதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
யோவான் ஸ்நானகன் இயேசுவின் முன்னோடி.
- யோவான் ஸ்நானகன் வரவிருக்கும் மேசியாவுக்கு வழியைத் ஆயத்தப்படுத்தும்படி வனாந்தரத்தில் கூப்பிடும் சத்தமாக இருந்தார் (ஏசா 40: 3; மத் 3: 3; மாற்கு 1: 2-3; லூக்கா 3: 3-6).
- யோவானுடைய ஊழியத்தின் மையக் கருப்பொருள், “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபமாய் இருக்கிறது” (மத் 3: 2).
- “அவர்” ஸ்நானகன் “என்று அழைக்கப்பட்டார், ஏனென்றால் அவர் அறிவித்த செய்திக்கு பதிலளித்தவர்களை ஞானஸ்நானப்படுத்துவதும், அவர்கள் செய்த பாவங்களிலிருந்து அவர்களை மனதார மனந்திரும்பச் செய்வதும் அவருடைய பணியாக இருந்தது (மத் 3: 1; மாற்கு 6:14; லூக்கா 7:20).
- யோவான் ஒரு கடைசிக் காலக் தீர்க்கதரிசி. அவர் தனது ஊழியத்தை ஒரு இறுதிக்கால அதிகாரத்துடன் செய்தார். அது உடனடியாக பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பலவந்தபடுத்தியது. தீர்ப்பு நெருங்கிவிட்டது என்று அவர் கற்பித்தார். கோடாரியானது மரத்தின் வேரருகில் வைக்கப்பட்டுள்ளது, கடவுள் தனது களத்தை நன்றாய் விளக்கி முழுமையாக தூய்மைப்படுத்துவார் (மத் 3: 10-12; லூக்கா 3: 9, 3:17). மனந்திரும்புதலின் நம்பகத்தன்மையானது தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், இடுக்கண் செய்யாமல் இருத்தல், மிரட்டி பணம் பறித்தலை தடை செய்தல் போன்ற மிகவும் நடைமுறை அடிப்படையிலான சாட்சியமளிக்கக் கோரப்பட்டது: (லூக்கா 3: 11-14).
- யோவானின் வாழ்க்கை முறை அவரது செய்தியைப் போலவே கடுமையானது. அவர் வனாந்தரத்தில் வாழ்ந்த ஒரு சந்நியாசி, ஒட்டக முடி உடையணிந்து வெட்டுக்கிளிகள் மற்றும் காட்டுத்தேன் ஆகியவற்றை உணவாக உண்டு வாழ்ந்தார் (மத் 3: 4; மாற்கு 1: 6).
- இயேசுவைப் போலல்லாமல், மக்களிடம் தாம் செல்வதை விட, மக்கள் தன்னிடம் வருவதையே அவர் எதிர்பார்த்தார் (மத் 3: 5).
- யோவான் “கூட்டத்தை மகிழ்விப்பவர்” அல்ல. மதக்கட்டமைப்பின் போலித்தனத்தை அவர் விருப்பத்துடன் எதிர்த்தார். (மத் 3: 7; லூக்கா 3: 7).
- ஏரோதுவின் ஒழுக்கக்கேட்டை அம்பலப்படுத்தவும் அவர் தயங்க வில்லை, மேலும் அவரது நம்பிக்கைகளை சமரசம் செய்து கொள்வதை விட இரத்த சாட்சியாக மரிப்பதையே தேர்வு செய்தார் (மத் 14: 3-12; மாற்கு 6: 17-29).
- இந்த குணாதிசயங்கள் அனைத்தும் யோவானை கடவுளின் செய்தியை தீப்பிளம்பாக உமிழ்ந்து வெளிப்படுத்தும் தீர்க்கதரிசியாக சித்தரிக்கின்றன. உண்மையில், யோவான் “எலியாவின் ஆவி உடையவராகவும் வல்லமை உடையவர்ரகவும்” வந்தார் என்று லூக்கா கூறுகிறார் (லூக்கா 1: 17). ராஜாவின் படைத்தலைவர்களை பட்சிக்க எலியா பல முறை அக்கினியை இறக்கியதை நினைவில் கொள்க (II இராஜ. 1: 10-12).
- மல்கியா 4: 5 கூறுகிறது, “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.” உண்மையில், யோவானின் சில சமகாலத்தவர்கள் அவர் எலியா என்றுதான் ஊகித்தனர். (யோவான் 1:21).
சில விளக்கவுரைகளின்படி யோவான் ஸ்நானகன் பயன்படுத்திய ‘அக்கினி’ என்ற வார்த்தையின் அர்த்தமும் சூழலும் பின்வருமாறு:
Life Application Study Bible of NIV, published by Tyndale House Publishers, Inc, and the Zondervan Publishing House, Michigan:“…… இயேசு பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார் என்று யோவான் கூறினார். இது பெந்தெகொஸ்தேயை (அப்போஸ்தலர் 2) எதிர்நோக்கியது, பரிசுத்த ஆவியானவர் இயேசுவால் அக்கினிமயமான நாவுகள் வடிவத்தில் அனுப்பப்படுவார், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அவருடைய சீஷர்களுக்கு அதிகாரம் அளித்தார். மனந்திரும்ப மறுத்தவர்கள் மீது கடவுளின் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவதில் பரிசுத்த ஆவியின் பணியையும் யோவானின் அறிக்கை குறிக்கிறது. எல்லோரும் ஒரு நாள் முழுக்காட்டுதல் பெறுவார்கள் – இப்போது கடவுளின் பரிசுத்த ஆவியால் அல்லது பின்னர் அவருடைய தீர்ப்பின் அக்கினியால்”
SABC Commentary, published by Open Door Publication Pvt Ltd, Udaipur, Rajasthan, India: “ …. வெறும் தண்ணீரால் மட்டுமே ஞானஸ்நானம் தருகிறார் என்பதில் யோவானின் பணிவு தெளிவாகிறது, அதேசமயம் மேசியா பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் தருவார் (3: 11b). மேசியாவின் செய்திக்கு மறுமொழி தருபவர்கள் ஏற்றுக்கொள்ளப் படுவார்கள், ஆவியின் வரத்தைப் பெறுவார்கள் என்று இந்த சித்திரம் அர்த்தப்படுத்தலாம், அதேசமயம் அதை நிராகரிப்பவர்கள் தங்களுக்கு தீர்ப்பைப் (“அக்கினி”) பெற்றுகொள்வார்கள். இருப்பினும், யோவான் இரண்டு வெவ்வேறு விதிகளைக் குறிக்கிறார் என்பதற்கான எந்தக் குறிப்பும் இல்லை, மேலும் ஒரு ஞானஸ்நானம் ‘பரிசுத்த ஆவி’ மற்றது ‘அக்கினி’ இரண்டிலும் உள்ளது என்று தெரிகிறது. அக்கினி அழிவை மட்டுமல்ல, ‘சுத்திகரிப்பு’ மற்றும் ‘தூய்மைபடுத்துதல்’ என்பதையும் குறிக்கிறது என்பதை நினைவில் கொண்டால் பொருள் தெளிவாகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், விசுவாசிகளை தூய்மைப்படுத்தும் மற்றும் சுத்திகரிக்கும் ஆவியின் நம்பிக்கையின் வேலையை அக்கினி குறிக்கிறது, அதே போல் அவிசுவாசிகளை தீர்ப்புச் செய்வது மற்றும் கண்டனம் செய்வது. இது வசனத்தின் சரியான புரிதல் என்பது மேசியா கோதுமையிலிருந்து பதரைப் பிரிக்கும் (3:12) தூற்றுகூடை பற்றிய யோவானின் குறிப்பால் உறுதிப்படுத்தப்படுகிறது. “அறுவடை நேரம் நெருங்கியதற்கு மனந்திரும்புதலுக்கான அழைப்பு அவசரம்” என்பது யோவானின் அறிவிப்பிலிருந்து தெரிகிறது.
மோரியா ஊழியங்கள் வெளியிட்டுள்ள விசுவாசிகளின் வேத விளக்கவுரை – சென்னை: “…. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் அக்கினி ஞானஸ்நானத்திலிருந்து வேறுபட்டது. முந்தையது ஒரு ஆசீர்வாதம் மற்றும் பிந்தையது தீர்ப்பு. முந்தையது பெந்தெகொஸ்தே நாளில் நிறைவேற்றப்பட்டது, பிந்தையது இன்னும் நடைபெறவில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை அனுபவித்தார்கள், அதேசமயம் அக்கினி ஞானஸ்நானம் அவிசுவாசிகளுக்கென்று வைக்கப்பட்டுள்ளது. ”
The Expositor’s Bible Commentary: “பரிசுத்த ஆவியானவர் ஞானஸ்நானம்” என்பது புதிய ஏற்பாட்டில் ஒரு சிறப்புச் சொல் அல்ல (காண்க எசே 36: 25-27; 39:29; யோவேல் 2:28); மத்தேயுவும் மற்றும் லூக்காவும் “அக்கினியைச்” சேர்க்கிறார்கள். இது பரிசுத்த ஆவியுடன் சேர்ந்து ஒரு சுத்திகரிப்பு முகவரின் பணியைக் குறிக்கிறது (cf. ஏசா 1:25; செக் 13: 9; மல் 3: 2-3). “உடன்” என்ற முன்மொழிவு மீண்டும் செய்யப்படவில்லை; இது “பரிசுத்த ஆவியானவர்” மற்றும் “அக்கினி” இரண்டையும் நிர்வகிக்கிறது, இது ஒரு ஒருங்கிணைந்த கருத்தை பரிந்துரைக்கிறது. யோவானின் தண்ணீர் ஞானஸ்நானம் மனந்திரும்புதலுடன் தொடர்புடையது; ஆனால் அவர் யாருடைய வழியைத் ஆயத்தம் செய்கிறாரோ அவர் ஒரு ஆவி – அக்கினி ஞானஸ்நானத்தை நிர்வகிப்பார், அது சுத்திகரிக்கப்பட்டு தூய்மைபடுத்தப்படும். மேசியாவின் காலம் வரை பரிசுத்த ஆவியானவர் திரும்பப் பெறப்பட்டதாக பல யூதர்கள் உணர்ந்த காலத்தில், இந்த அறிவிப்பை உற்சாகமான எதிர்பார்ப்புடன் மட்டுமே வரவேற்க முடியும். “
Global Study Bible – ESV: அவிசுவாசிகள் நித்திய அக்கினியின் தீர்ப்பைப் பெறுவார்கள். மனந்திரும்புகிறவர்கள் கூட சுத்திகரிக்கும் அக்கினியைத் தாங்கக்கூடும். ”
எனவே, இந்த ஆய்வுகள் யோவான் மனந்திரும்புதலுக்கான சான்றாக மாற்றுவதற்கான உறுதிப்பாட்டைப் பற்றிப் பேசினார் என்பதை வெளிப்படுத்துகின்றன. உண்மையான மனந்திரும்புதல் என்பது பரிசுத்த ஆவியானவரால் விளைந்த நீதியுள்ள தன்மையை வளர்ப்பதற்கான அவசியமான தொடக்கமாகும்.
கனி கொடுக்காதவர்கள் பற்றி யோவான் சொன்னதையும் நாம் கவனிக்கலாம்: “இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால்¸ நல்ல கனிகொடாதமரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்” (மத்தேயு 3:10). சில வசனங்களை பின்னர் அவர் சொன்னார், “பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” (மத்தேயு 3:12). மனந்திரும்ப மறுத்து, “நல்ல கனிகளை கொடாதவர்களின்” நிலை தான் இந்த ‘அக்கினி’ என்று யோவான் எச்சரித்தார்.
இது இயேசு கிறிஸ்துவின் வருகை மற்றும் பூமியில் 1,000 ஆண்டு ஆட்சிக்குப் பிறகு மனந்திரும்பாத மக்களுக்கு இறுதி தண்டனையை குறிக்கிறது. மனந்திரும்பாத மக்கள் “அக்கினி கடலுக்குள் தள்ளப்படுவார்கள்” என்று வெளி 20: 15 சொல்கிறது.
நித்திய ஆக்கினை பற்றி வேதம் என்ன சொல்கிறது?
வெளி. 21: 8: “பயப்படுகிறவர்களும்¸ அவிசுவாசிகளும்¸ அருவருப்பானவர் களும்¸ கொலைபாதகரும்¸ விபசாரக்காரரும்¸ சூனியக்காரரும்¸ விக்கிரகாராதனைக்காரரும்¸ பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.” தேவனுடைய ராஜ்யத்தில் ஒரு நபர் நித்திய ஜீவனைப் பெற அனுமதிக்காத பாவ குணாதிசயங்களின் அடிப்படை பட்டியலை இந்த வேதப்பகுதி நமக்கு வழங்குகிறது. அந்த விஷயங்களைப் பற்றி மனந்திரும்ப மறுப்பவர்கள் அக்கினி ஞானஸ்நானத்தை அனுபவிப்பார்கள், அல்லது இரண்டாவது மரணமாகிய அக்கினி கடலில் நித்திய மரணத்தை அடைவார்கள்..
வேதம் வசனங்கள், யோவான் ஸ்நானகனின் ஊழியத்தின் பின்னணியம் மற்றும் வேத விளக்கங்கள் ஆகியவற்றின் வெளிச்சத்தில், ‘அக்கினி அபிஷேகம்’ அல்லது ‘அக்கினி ஞானஸ்நானம்’ என்ற சொற்றொடர் பின்வருமாறு திட்டவட்டமாக விளக்கப்படலாம்:
- மனம் திரும்பாதவர்களை பொருத்தவரை, தண்ணீர் ஞானஸ்நானத்தைப் போலல்லாமல், அது அக்கினி கடலில் மூழ்குவதைப்போன்றது. தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுவது “புதிய வாழ்க்கை” (ரோமர் 6: 4), அக்கினி ஞானஸ்நானம் என்பது தீயில் மூழ்கி நித்திய மரணத்தை பெறுவதைக் குறிக்கிறது (ரோமர் 6: 23). இது இயேசு பின்னர் குறிப்பிட்ட “நித்திய ஆக்கினை” (மத்தேயு 25:46). அக்கினி ஞானஸ்நானம் என்பது மனந்திரும்ப மறுப்பவர்களின் அழிவாகும். இவர்கள் எபிரேயர் நிருபத்தில் விவரிக்கப்பட்டுள்ளனர் (எபிரெயர் 6: 4-6 மற்றும் 10: 26-27). உண்மையில், அக்கினி கடலில் மனம் திரும்பாத பொல்லாதவர்களை அழிப்பதற்கு இயேசு மட்டுமே அதிகாரம் பெற்றவர். இந்தக் குறிப்பு மத் .13: 40-42ல் களைககளைப் பற்றிய உவமையில் விளக்கப்பட்டுள்ளது. பாவிகள் அக்கினிக் கடலில் மூழ்கடிக்கப்படுவார்கள் அல்லது மூழ்கி விடுவார்கள்.
- மனந்திரும்பியவர்களைப் பொருத்தவரை, ‘அக்கினி ஞானஸ்நானம்’ என்பது சுத்திகரிக்கும் முகவரான பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது (cf. ஏசா 1:25; சக. 13: 9; மல். 3: 2-3).
- கிறிஸ்து இயேசுவில் தேவபக்தியுள்ள வாழ்க்கையை வாழ விரும்பும் மக்களின் விஷயத்தில் ‘அக்கினி ஞானஸ்நானம்’, ‘உபத்திரவம்’, மற்றும் ‘துன்பப்படுதலைக்’ குறிக்கிறது. (II தீமோ .3: 12; வெளி 1: 9)
‘அக்கினி ஞானஸ்நானம்’ என்பதில் நாம் உண்மையில் ஆர்வமாக உள்ளோமா? நம்முடைய பாவங்களுக்காக மனந்திரும்பி கடவுளிடம் திரும்பினால், “நித்திய ஆக்கினை” என்ற முதல் வகையை நாம் தவிர்க்கலாம்.
இரண்டாவது வகை, “சுத்திகரிப்பு” நாம் உண்மையிலேயே மனந்திரும்பி மனந்திரும்புதலின் பலனைக் கொடுத்தால் தானாகவே இது நிகழ்கிறது (மத் 3: 8).
மூன்றாவது வகை, உபத்திரவம்’, மற்றும் ‘துன்பம்’ – இது நமக்கு வழங்கப்பட்ட சிலாக்கியம். நாம் நம்முடைய விருப்பங்களுக்கும், கற்பனைகளுக்கும் ஏற்ப வாழ தேர்வு செய்யலாம் அல்லது உண்மையாகவே கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என விரும்பலாம்.
அக்கினி ஞானஸ்நானம் பெறுவதில் நம் யாருக்கும் விருப்பம் இருக்காது. ஆனால் வேதம் இதன் வழியாக போக வேண்டுமா என நமக்கு சவால் விடுகிறது. இந்த ‘அக்கினி ஞானஸ்நானம்’ நமக்கு வேண்டுமா? முடிவு நமது கையில்.