- 9
- 20250101
நீ கர்த்தரை ருசித்து பார் அவரில் வளருவீர்கள்
“கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” (சங் 34:8) என்று சங்கீதக்காரன் சொல்லும்போது, பேதுருவோ “கர்த்தரை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்” என்று எழுதுகிறார். அதாவது, சந்தேகத்தின் தொனியோடு அல்ல; “நீங்கள் கர்த்தரை ருசிபார்த்திருக்கின்றபடியால்” அவரிலே வளர வேண்டியதின் அவசியத்தை வற்புறுத்துகிறார்.
அப். பேதுரு தனது முதலாம் நிருபத்தில் விசுவாசிகளுக்கு சில “புத்திமதிகளை” (5:12) எழுதுகிறார். இந்த நிருபத்தின் முதலாம் அதிகாரத்தில் வேத வசனத்தின் மூலமாக மறுபடியும் ஜெநிப்பிக்கபடுதலை (1:3, 23) குறித்து சொல்லிவிட்டு, அதை தொடர்ந்துள்ள இரண்டாம் அதிகாரத்தில் “புதிதாய் பிறந்தவர்கள்” (“இப்படியிருக்க” 2:1) வளர வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகிறார் (2:3).
“இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்” (1 பேதுரு 2:1)
அவரில் வளரும்படி… (1 பேதுரு 2ஆம் அதிகாரத்திலிருந்து)
1. ஒழித்துவிடுங்கள் 2:2
கர்த்தரை ருசிபார்த்தவர்களாகிய நாம், வளரும்படி தடையாயிருகிற 5 விதமான காரியங்களை ஒழித்துவிடுங்கள்.
ஒழித்துவிட்டால் மட்டுமே ஓங்கி வளர முடியும்.
2. வாஞ்சையாயிருங்கள் 2:3
புதிதாய் பிறந்த குழந்தை பால் அறுந்த வாஞ்சையாயிருப்பதுபோல், களங்கமில்லாத ஞானப்பாலாம் வேத வசனங்களை வாசிக்க வாஞ்சையாயிருங்கள்.
வேதவசனத்தின் மீதுள்ள வாஞ்சையே நம்மை வளர வைக்கும்.
3. கிறிஸ்துவோடு சேர்ந்திருங்கள் 2:4
முன்னே தேவனை விட்டு தூரபோயிருந்த நாம், இயேசு கிறிஸ்து மூலமாக தேவனிடத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறோம். ஆகையால் அவரில் நாம் வளரும்படி, அவரோடுள்ள தனிப்பட்ட உறவில் (ஜெப வாழ்வு) சேர்ந்திருங்கள்.
கிறிஸ்துவோடுள்ள தனிப்பட்ட உறவில் வீழ்ச்சியடைந்தோமானால், வாழ்வின் எல்லா இடங்களிலும் நமக்கு வீழ்ச்சி உண்டாகும்.
ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவோடு சேர்ந்திருக்கும் உறவை விட்டுவிடாதிருங்கள்.
4. ஆவிக்கேற்ற மாளிகையாயிருங்கள் 2:5
ஜீவனுள்ள கல்லாகிய ஆண்டவர் (2:4) நம்மையும் அவரைப்போல ஜீவனுள்ள கற்களாக மாற்றியிருக்கிறார். காரணம், நாம் ஆவிக்குரிய பலிகளை செலுத்தி தேவனுக்கு பிரியமான ஆராதனை செய்ய வேண்டிய ஆசாரியக்கூட்டம்.
ஜீவனுள்ள கற்களின் இணைப்பாகிய ஆவிக்குரிய மாளிகையாம் சபையோடு தொடர்பிலிருக்கிறீர்களா?
5. கிறிஸ்துவில் விசுவாசம் வையுங்கள் 2:7,8
கிறிஸ்துவின் மேல் வைத்த விசுவாசத்தினாலேயே நாம் மறுபடியும் பிறந்திருக்கிறோம். மறுபடியும் பிறந்தவர்களான நாம் எந்த சூழ்நிலையிலும் கிறிஸ்துவின் மீது கொண்டிருக்கும் விசுவாசத்தில் உறுதியாய் இருக்க வேண்டியது அவசியமாகும்.
- இந்த விசுவாசம் சோதிக்கப்படும் (1:7).
- இந்த விசுவாசத்தில் நாம் உறுதியாயிருந்தால், எந்த சூழ்நிலையிலும் நாம் களிகூர முடியும் (1:8).
- இந்த விசுவாசத்தின் உறுதிக்காகவே தேவன் தமது குமாரனை உயிரோடு எழுப்பினார் (1:21).
கிறிஸ்துவின் மேல் வைத்துள்ள விசுவாசம் ஒரு நாளும் நம்மை வெட்கப்படுத்தாது.
6. திருவசனத்திற்கு கீழ்ப்படியுங்கள் 2:7,8
முன்னே நாம் கீழ்ப்படியாமையின் பிள்ளைகளாயிருந்தோம் (1:14). இப்பொழுதோ, நாம் கீழ்ப்படிதலுக்கென்று தெரிந்துகொள்ளப்பட்டோம் (1:2). ஆகையால், திருவசனத்திற்கு கீழ்ப்படியும்படி நம்மை ஒப்புவிக்கும்போது, எவ்விதத்திலும் இடறாது நாம் வளர முடியும்.
நாம் வளரும்படி, ஆவியினாலே திருவசன சத்தியத்திற்கு கீழ்ப்படிவோம் (1:22).
7. அறிந்தவரை அறிவியுங்கள் 2:9
அந்தகார இருளிலிருந்த நம்மை ஆச்சரியமான ஒளியிடத்திற்கு வரவழைத்திருக்கிறார். வரவழைத்தவரின் புண்ணியங்களை ருசித்தறிந்த நாம், இன்னும் இருளுக்குள்ளிருக்கும் ஜனங்களும் அவரை ருசித்தறிய, அவருடைய புண்ணியங்களை அறிவிப்போம்.
அறிந்தவரை அறிவிப்பதே வளர்ச்சியின் அடையாளம்.
“அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம் அநுகிரகம் தரவேண்டுமே”
கே. விவேகானந்த்