• Sunday 12 January, 2025 01:59 AM
  • Advertize
  • Aarudhal FM

நாகையில் 250 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட டச்சு தேவாலயம் மீண்டும் திறப்பு

நாகப்பட்டினம்: நாகையில் பழைய பேருந்து நிலையம் எதிரே 1774ஆம் ஆண்டு டச்சுக்காரர்களால் தூய பேதுரு தேவாலயம் கட்டப்பட்டது. இறை வழிபாடு, கல்வி, மருத்துவத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த தேவாலயம், நாளடைவில் சிதிலமடைந்தது. இதையடுத்து, இந்த தேவாலயத்தைப் புனரமைக்க ஓராண்டுக்கு முன் முடிவெடுக்கப்பட்டு, அதன்படி 80 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசின் பங்களிப்புடன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டன.

இந்நிலையில், பணிகள் அனைத்தும் முடிந்ததைத் தொடர்ந்து, டச்சுக்காரர்களால் எழுப்பப்பட்ட 250 ஆண்டு கால சிஎஸ்ஐ தூய பேதுரு தேவாலயத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தேவாலயத்தை திருச்சி தென்னிந்திய திருச்சபையின் பேராயர் சந்திரசேகரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கீர்த்தனை, பாமாலையுடன் ஆராதனை ஆகியவை நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், கரூர் மற்றும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பேராயர், ஆயர்கள் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

பல கோடி செலவில் காலணி வடிவ கண்ணாடி தேவாலயம்

தாய்வான்: தாய்வான் நாட்டில் சீயாயி கவுண்டியில் அமைந்துள்ளது காலணி வடிவ கண்ணாடி தேவாலயம். தேவாலயம் என்றவுடன் இது ஒரு பிரார்த்தனை கூடம் என்று பலரும் நினைக்கக்கூடும். ஆனால் இது வழக்கமான சேவைகளுக்கு பயன்படுத்தப்படாது. மாறாக திருமணத்திற்கு முன்பு போட்டோசூட் மற்றும் திருமண விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலயத்திற்குள் காதலர்களுக்கான நாற்காலி, பிஸ்கட்டு, கேக்குகள் போன்றவை வைக்கப்பட்டிருக்கும். இதில் 32 க்கும் மேற்பட்ட நிறமுள்ள கண்ணாடி பேனல்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. 1060களில் வாங் என்ற பெயர் கொண்ட 24 வயது  பெண் பிளாக் ஃபுட் நோயால் பாதிக்கப்பட்டதால் அவருடைய இரண்டு கால்களையும் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணின் திருமணமானது நின்று போனது. அதன் பின்னரான காலத்தை அந்த பெண் திருமணமாகாமல் தேவாலத்திலேயே கழித்ததாக கூறப்படுகிறது. இவர் நோயால் பாதிக்கப்பட்ட காலத்தை நினைவூட்டுவது மட்டுமல்லாமல் பெண்கள் தங்களுடைய மகிழ்ச்சியான எதிர்காலத்தை நோக்கி நடக்க முடியும் என்ற நம்பிக்கையின் அடையாளமாகவே இந்த தேவாலயம் காலணி வடிவில் கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செங்குத்துப் பாறை மேல் குகைக் தேவாலய கட்டிடம்

அபுனா யெமடா குஹ் என்பது வடக்கு எத்தியோப்பியாவின் டைக்ரே பகுதியில் அமைந்துள்ளது. ஒரு பெரிய மலைப் பாறையைக் குடைந்து செதுக்கிக் கட்டப்பட்ட ஒரு தனித்துவமான வரலாற்றுச் சிறப்புமிக்க கிருஸ்துவ மத தேவாலயமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,580 மீட்டர் (8,460 அடி) உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கட்டடம் கெரால்டா மலைகளில் உள்ள அமைதியும் தூய்மையும் கொண்ட ஒரு குன்றின் மேல் பகுதியில் அமைந்துள்ளது, இது உலகின் எளிதில் அணுக முடியாத தேவாலயங்களில் ஒன்றாகும்.

தேவாலயம் ஒரு குன்றின் விளிம்பில் உள்ள திடமான பாறையால் செதுக்கப்பட்டது. அதை அடைய, பார்வையாளர்கள் செங்குத்துப் பாறை முகத்தில் ஏற வேண்டும். பல நூற்றாண்டுகளாகப் பாறையில் அமைந்திருக்கும் கைப்பிடிகள் மற்றும் கால்தடங்களைத் தான் பயன்படுத்தித் தான் ஏறுக்கிறார்கள். இதற்கு நல்ல உடல் தகுதி தேவை.

6ஆம் நூற்றாண்டில் பைசண்டைன் பேரரசில் இருந்து எத்தியோப் பியாவிற்கு கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப வந்த ஒன்பது பேரில் ஒருவரான அபுனா யெமாதா குஹ் என்பவரால் இது உருவாக்கப்பட்டுள்ளது. தேவாலயம் இன்னும் செயலில் உள்ள வழிபாட்டுத் தலமாக உள்ளது. பாதிரியார்களும் சுற்றுலாப் பயணிகளும் இதைக் காண்பதற்கான பயணத்தைத் தவறாமல் மேற்கொள்கின்றனர்.

கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி விழா

கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான குருத்தோலை ஞாயிறு, திருநாள் நிகழ்ச்சி இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றது.

கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி விழா! title=

கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான குருத்தோலை ஞாயிறு, திருநாள் நிகழ்ச்சி இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றது

குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு இன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையில் உள்ள பழமையான புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் நான்கு கிலோமீட்டர் தூரம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் குருத்தோலை கையில் ஏந்தி பவனியாக ஊர்வலம் வந்து தேவாலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர் .

வண்ணாரப்பேட்டை ஆரோக்கியநதர் ஆலயம் பங்குத்தந்தை வர்கீஸ் ரோசாரியோ தலைமையில் 1000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு ஆராதனையில் ஈடுபட்டனர். குருத்தோலை முக்கிய பிரார்த்தனையின் போது வருகின்ற 19 ஆம் தேதி நடக்கக்கூடிய தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்கவும் என பங்குத் தந்தை கிறிஸ்தவ பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். 

கோவையிலும், பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். கோவை காந்திபுரம் சி எஸ் ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் சார்பில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் ஆலயம் முன்பாக துவங்கியது. இதில், ஆயர் தலைவர் டேவிட் பர்னபாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயச்சந்திரன் பொருளாளர் ரவி இன்பசிங்,உதவி ஆயர் சாம் ஜெபசுந்தர்,சபை ஊழியர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காந்திபுரம் சி‌ எஸ் ஐ‌ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் இருந்து துவங்கிய ஊர்வலத்தில், ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் குருத்தோலைகளை கையில் ஏந்திக்கொண்டு ஓசன்னா ஓசன்னா எனும் இயேசுவின் திரு நாமத்தை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.

கிறிஸ்தவர்களின் பங்களிப்பை பாராட்டிய மோடி

கிறிஸ்தவ சமூக உறுப்பினர்களுடன் தனது இல்லத்தில் உரையாடிய பிரதமர் மோடி, கிறிஸ்தவ சமூகத்துடன் மிகவும் பழமையான, மிக நெருக்கமான, மிகவும் அன்பான உறவு இருப்பதாகக் கூறினார்.

திங்கள்கிழமை கிறிஸ்துமஸ் தினத்தில், பிரதமர் நரேந்திர மோடி,  “இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அதன் பங்களிப்பு முதல் சமூக சேவையில் அதன் செயல் பங்கேற்பு வரை கிறிஸ்தவ சமூகத்தின் பங்களிப்பை இந்தியா பெருமையுடன் ஒப்புக்கொள்கிறது” என்று கூறினார்.

தனது இல்லத்தில் கிறிஸ்தவ சமூக உறுப்பினர்களுடன் உரையாடிய மோடி, கிறிஸ்தவ சமூகத்துடன் “மிகவும் பழமையான, மிக நெருக்கமான, மிகவும் அன்பான உறவு” இருப்பதாகக் கூறினார்.  “நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, கிறிஸ்தவ சமூகத்தினருடன் அடிக்கடி பழகுவேன்… நான் தேர்தலில் போட்டியிடும் மணிநகரில், அதிக (கிறிஸ்தவ) மக்கள் தொகை உள்ளனர். இதன் காரணமாக, எனக்கு இயல்பான நல்லுறவு இருந்தது” என்று அவர் கூறினார்.

“சுதந்திர போராட்ட இயக்கத்தில் கிறிஸ்தவ சமூகம் முக்கியப் பங்காற்றியுள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் பல சிந்தனையாளர்களும், கிறிஸ்தவ சமுதாயத் தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். செயின்ட் ஸ்டீபன் கல்லூரியின் முதல்வர் சுஷில் குமார் ருத்ராவின் ஆதரவில் ஒத்துழையாமை இயக்கம் உருவானது என்று காந்திஜி கூறியுள்ளார்” என்று மோடி கூறினார்.

“சமூகத்திற்கு வழிகாட்டுவதில் கிறிஸ்தவ சமூகம் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது. இது சமூக சேவையில் தீவிரமாக பங்கேற்கிறது, மேலும், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதில் எப்போதும் முன்னணியில் உள்ளது. இன்றும், இந்தியா முழுவதும், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற முக்கியமான துறைகளில் கிறிஸ்தவ நிறுவனங்கள் பெரும் பங்களிப்பை அளித்து வருகின்றன” என்று மோடி கூறினார்.

“கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது… கிறிஸ்தவ சமூகத்தின் பங்களிப்பை இந்தியா பெருமையுடன் அங்கீகரிக்கிறது” என்று பிரதமர் மோடி கூறினார்.

“சமூக வாழ்வின் வெவ்வேறு நீரோடைகளில், நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் பல ஒத்த மதிப்புகளைக் காண்கிறோம். உதாரணமாக, பரிசுத்த வேதாகமம் கூறுகிறது, கடவுள் நமக்குக் கொடுத்த பரிசு எதுவாக இருந்தாலும், அவர் நமக்கு கொடுத்திருக்கும் சக்தியைக் கொண்டு அதை நாம் மற்றவர்களுக்குச் சேவை செய்ய பயன்படுத்த வேண்டும். இதுவே உயர்ந்த மார்க்க சேவையாகும். புனித பைபிளில், உண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், உண்மை மட்டுமே நமக்கு ரட்சிப்பின் பாதையை காட்டும் என்று கூறப்பட்டுள்ளது… புனித உபநிடதங்களும் இறுதி உண்மையை அறிவதில் கவனம் செலுத்துகின்றன, அதனால்தான் நாம் நம்மை விடுவிக்க முடியும்” என்று அவர் கூறினார்.

“நம்முடைய பகிர்ந்துகொள்ளபட்ட விழுமியங்கள் மற்றும் பாரம்பரியத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் நாம் ஒன்றாக முன்னேறலாம். 21-ம் நூற்றாண்டின் நவீன இந்தியாவிற்கு, இந்த ஒத்துழைப்பு, இந்த நல்லிணக்கம், அனைவரின் முயற்சியின் சக்தி இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்” என்று மோடி கூறினார்.

“இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நாம் கொண்டாடும் நாள் கிறிஸ்துமஸ்… இரக்கம் மற்றும் சேவையின் மதிப்புகளை இயேசு வாழ்ந்தார். அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அனைவருக்கும் நீதி இருக்கும் ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார். இந்த விழுமியங்கள் நமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் வழிகாட்டும் வெளிச்சம் போன்றது,” என்று பிரதமர் மோடி கூறினார்.

“பரிசுத்த போப், தனது கிறிஸ்துமஸ் உரையில், வறுமையை ஒழிக்கப் பாடுபடுபவர்கள் ஆசீர்வாதங்களைப் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்… இந்த வார்த்தைகள் வளர்ச்சிக்கான நமது மந்திரத்தில் இருக்கும் அதே உணர்வை பிரதிபலிக்கின்றன. நம்முடைய மந்திரம் ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்’ (அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி)” என்று  பிரதமர் மோடி கூறினார்.

“ஒரு அரசாங்கமாக, வளர்ச்சியின் பலன்கள் அனைவரையும் சென்றடைவதையும், யாரையும் விட்டுவிடாமல் இருப்பதையும் நாங்கள் உறுதிசெய்கிறோம். இன்று, நாட்டில் நடைபெறும் வளர்ச்சியின் பலன்கள், கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த பலரையும், குறிப்பாக ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களைச் சென்றடைகிறது” என்று மோடி கூறினார்.

2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான இலக்கு மற்றும் ஃபிட் இந்தியா இயக்கம் குறித்து விவாதித்த பிரதமர் மோஒடி, கிறிஸ்தவ சமூகத் தலைவர்கள், குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத்துடன் தொடர்புடையவர்கள், இந்த விவகாரங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.