• Sunday 5 January, 2025 12:41 AM
  • Advertize
  • Aarudhal FM

கிறிஸ்தவர்களின் பங்களிப்பை பாராட்டிய மோடி

கிறிஸ்தவ சமூக உறுப்பினர்களுடன் தனது இல்லத்தில் உரையாடிய பிரதமர் மோடி, கிறிஸ்தவ சமூகத்துடன் மிகவும் பழமையான, மிக நெருக்கமான, மிகவும் அன்பான உறவு இருப்பதாகக் கூறினார்.

திங்கள்கிழமை கிறிஸ்துமஸ் தினத்தில், பிரதமர் நரேந்திர மோடி,  “இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அதன் பங்களிப்பு முதல் சமூக சேவையில் அதன் செயல் பங்கேற்பு வரை கிறிஸ்தவ சமூகத்தின் பங்களிப்பை இந்தியா பெருமையுடன் ஒப்புக்கொள்கிறது” என்று கூறினார்.

தனது இல்லத்தில் கிறிஸ்தவ சமூக உறுப்பினர்களுடன் உரையாடிய மோடி, கிறிஸ்தவ சமூகத்துடன் “மிகவும் பழமையான, மிக நெருக்கமான, மிகவும் அன்பான உறவு” இருப்பதாகக் கூறினார்.  “நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, கிறிஸ்தவ சமூகத்தினருடன் அடிக்கடி பழகுவேன்… நான் தேர்தலில் போட்டியிடும் மணிநகரில், அதிக (கிறிஸ்தவ) மக்கள் தொகை உள்ளனர். இதன் காரணமாக, எனக்கு இயல்பான நல்லுறவு இருந்தது” என்று அவர் கூறினார்.

“சுதந்திர போராட்ட இயக்கத்தில் கிறிஸ்தவ சமூகம் முக்கியப் பங்காற்றியுள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் பல சிந்தனையாளர்களும், கிறிஸ்தவ சமுதாயத் தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். செயின்ட் ஸ்டீபன் கல்லூரியின் முதல்வர் சுஷில் குமார் ருத்ராவின் ஆதரவில் ஒத்துழையாமை இயக்கம் உருவானது என்று காந்திஜி கூறியுள்ளார்” என்று மோடி கூறினார்.

“சமூகத்திற்கு வழிகாட்டுவதில் கிறிஸ்தவ சமூகம் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது. இது சமூக சேவையில் தீவிரமாக பங்கேற்கிறது, மேலும், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதில் எப்போதும் முன்னணியில் உள்ளது. இன்றும், இந்தியா முழுவதும், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற முக்கியமான துறைகளில் கிறிஸ்தவ நிறுவனங்கள் பெரும் பங்களிப்பை அளித்து வருகின்றன” என்று மோடி கூறினார்.

“கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது… கிறிஸ்தவ சமூகத்தின் பங்களிப்பை இந்தியா பெருமையுடன் அங்கீகரிக்கிறது” என்று பிரதமர் மோடி கூறினார்.

“சமூக வாழ்வின் வெவ்வேறு நீரோடைகளில், நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் பல ஒத்த மதிப்புகளைக் காண்கிறோம். உதாரணமாக, பரிசுத்த வேதாகமம் கூறுகிறது, கடவுள் நமக்குக் கொடுத்த பரிசு எதுவாக இருந்தாலும், அவர் நமக்கு கொடுத்திருக்கும் சக்தியைக் கொண்டு அதை நாம் மற்றவர்களுக்குச் சேவை செய்ய பயன்படுத்த வேண்டும். இதுவே உயர்ந்த மார்க்க சேவையாகும். புனித பைபிளில், உண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், உண்மை மட்டுமே நமக்கு ரட்சிப்பின் பாதையை காட்டும் என்று கூறப்பட்டுள்ளது… புனித உபநிடதங்களும் இறுதி உண்மையை அறிவதில் கவனம் செலுத்துகின்றன, அதனால்தான் நாம் நம்மை விடுவிக்க முடியும்” என்று அவர் கூறினார்.

“நம்முடைய பகிர்ந்துகொள்ளபட்ட விழுமியங்கள் மற்றும் பாரம்பரியத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் நாம் ஒன்றாக முன்னேறலாம். 21-ம் நூற்றாண்டின் நவீன இந்தியாவிற்கு, இந்த ஒத்துழைப்பு, இந்த நல்லிணக்கம், அனைவரின் முயற்சியின் சக்தி இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்” என்று மோடி கூறினார்.

“இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நாம் கொண்டாடும் நாள் கிறிஸ்துமஸ்… இரக்கம் மற்றும் சேவையின் மதிப்புகளை இயேசு வாழ்ந்தார். அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அனைவருக்கும் நீதி இருக்கும் ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார். இந்த விழுமியங்கள் நமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் வழிகாட்டும் வெளிச்சம் போன்றது,” என்று பிரதமர் மோடி கூறினார்.

“பரிசுத்த போப், தனது கிறிஸ்துமஸ் உரையில், வறுமையை ஒழிக்கப் பாடுபடுபவர்கள் ஆசீர்வாதங்களைப் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்… இந்த வார்த்தைகள் வளர்ச்சிக்கான நமது மந்திரத்தில் இருக்கும் அதே உணர்வை பிரதிபலிக்கின்றன. நம்முடைய மந்திரம் ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்’ (அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி)” என்று  பிரதமர் மோடி கூறினார்.

“ஒரு அரசாங்கமாக, வளர்ச்சியின் பலன்கள் அனைவரையும் சென்றடைவதையும், யாரையும் விட்டுவிடாமல் இருப்பதையும் நாங்கள் உறுதிசெய்கிறோம். இன்று, நாட்டில் நடைபெறும் வளர்ச்சியின் பலன்கள், கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த பலரையும், குறிப்பாக ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களைச் சென்றடைகிறது” என்று மோடி கூறினார்.

2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான இலக்கு மற்றும் ஃபிட் இந்தியா இயக்கம் குறித்து விவாதித்த பிரதமர் மோஒடி, கிறிஸ்தவ சமூகத் தலைவர்கள், குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத்துடன் தொடர்புடையவர்கள், இந்த விவகாரங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.