corona awareness images

ஏன் இந்த அவலம்? கிறிஸ்தவ கவிதை

Share this page with friends

corona awareness images

கொள்ளை நோயாய்
உலகமெல்லாம் கொரானா
பெருகிவரும் காலமிது!
இயேசுவின் வருகை
சமீபமென உலகமெல்லாம்
உணரச்செய்யும் நேரமிது!

வாதை தொடங்கிய
அந்நாளினில்
இஸ்ரவேலர் நடுவே
ஆரோன் அன்று ஓடியே
பாவநிவிர்த்தி செய்த
வேளையில் தானே
வாதையும் நின்று போனது!

யூதரின் அழிவை நிறுத்திட
துணிந்திட்ட எஸ்தர்
அந்நாளினில்
அல்லும் பகலும்
உபவாசித்துதானே
ஆமானை அழித்து
காத்திட்டாள்!

தேவ உக்கிரத்தால்
ஆபத்து நெருங்கிட
உடைந்திட்ட எசேக்கியேல்
அந்நாளினில்
தனித்து விழுந்து
முறையிட்டுத் தானே
தேவ கோபத்தைத்
தணித்திட்டான்!

இஸ்ரவேலர்
சிறையிருப்பை மாற்றிட
எழுந்திட்ட எஸ்றா
அந்நாளினில்
துக்கித்து முழங்கால்
படியிட்டுத்தானே
சுதந்திரக் காற்றை
சுவாசித்தான் !

தேவ நாமம் தரிக்கப்பட்ட ஜனமே
இன்று நம் நிலைதான் என்ன! ?
பாவமும் குறைந்த பாடில்லை!
நோயும் நின்று போகவில்லை!
பாவத்தோடு வாழப் பழகிய நாமும்
நோயினோடு வாழப் பழகி விட்டோம்!

ஏன் இந்த அவலம்?

நோயினின்று நம்மைக் காத்திட
தனிமைப்படுத்திட்ட நீயும் நானும்
தேவனோடு நித்தம் தரித்திருந்தோமா?
தேசத்திற்காய் நாளும் ஜெபித்து
நேசரை நோக்கி காத்திருந்தோமா?

தொற்று ஏற்படாமல் இருக்க
முக கவசம் அணிந்திட்ட
நீயும் நானும்
நமக்கு சுவாசம் அளித்திடும்
இயேசுவைத் தினம் தினம் தரிசித்தோமா?

கிருமியை அகற்ற
மறக்காமல் சானிடேசர்
போட்டுக் கழுவிட்ட
நீயும் நானும்
நம் பாவத்தை அகற்றிட
தம் இரத்தத்தை சிந்திய
பரமன் பாதத்தைத்
தஞ்சமென பிடித்திட்டோமா?

ஊரடங்கு காலத்தில்
விதவிதமாய் உணவு உண்டு
உறங்கி எழுந்திட்ட
நீயும் நானும்
உலக மக்களைக் காத்திட
உபவாசித்து துக்கித்து
மன்றாடி ஜெபித்திட்டோமா?

கட்டுக்கதைகளையும்
கிழவிப் பேச்சுகளையும்
இடைவிடாமல்
வாட்சப்பில் பகிர்ந்து வந்த
நீயும் நானும்
பெருகி வரும் பாவத்தை
மக்களுக்கு உணர்த்திட்டோமா?

பொய்யான வதந்திகளை
புடமிட்ட தங்கமென நம்பி
நாட்களைக் கடத்திட்ட
நீயும் நானும்
மெய்யான இயேசுவின்
இரட்சிப்பைக் குறித்து
மற்றவருக்குப் பகிர்ந்திட்டோமா?

சிந்திப்போம் சற்றே!
செயல்படுவோம் இன்றே!

– சுகந்தி பிரபாகரன்


Share this page with friends