சிறுகதை : நல்லதை கற்றுக்கொடு, நல்லதை கற்றுக்கொள்

சிறுகதை : நல்லதை கற்றுக்கொடு, நல்லதை கற்றுக்கொள்
இன்று அதிகாரியாக உட்கார்ந்திருந்த மகேஷ், வரிசையாக நின்று கொண்டிருந்த நபர்களின் மனுக்களை வாங்கி அவைகளை பரீசிலிக்கவும், அவைகளில் நிறைவேற்ற முடிந்தவற்றை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளையும் செய்து கொண்டிருந்தவனின் கண்களில் பின் வரிசையில் நின்ற தன் தமிழாசிரியரை கண்டதுதான் தாமதம், இருக்கையை விட்டு எழும்பிச் சென்றவன், ஓடோடிச் சென்று தன் ஆசிரியரை பாதம் தொட்டு வணங்கி, ஐயா, என்னைத் தெரிகிறதா, நான்தான் 1988-ம் ஆண்டு உங்கள் வகுப்பில் படித்த மாணவன் மகேஷ். உங்களிடம் கற்ற பெருமை நான் இன்று இவ்வதிகாரியாக உயர்ந்திருக்கிறேன் என்று அறிமுகப்படுத்தியவன், நான் அதிகாரியாக இருக்கும் போது உங்களை காக்க வைப்பது நியாயமா?, கொடுங்கள் உங்கள் மனுவை, ஒரு நிமிடத்தில் பார்த்து பதில் சொல்கிறேன் என்று மனுவை வாங்க கையை நீட்டினான்.
நீ என் மாணவன் என்று சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது, நீ ஒடோடி வந்து எனக்கு வணக்கம் சொன்னாய், நான் மகிழ்ந்தேன், உன்னை அதிகாரி என்று அறிமுகப்படுத்தினாய், நான் பெருமையடைந்தேன், ஆனால் வரிசையில் இவ்வளவு மக்கள் காத்திருக்கும் போது, தெரிந்தவர் என்ற முறையில் பிந்தி வந்த எனக்கு நீ முன்னுரிமை கொடுக்க நினைப்பது, எனக்கு வருத்தமாயிருக்கிறது என்று சொல்லி மனுவை கொடுக்க மறுத்தார் ஆசிரியர், சுற்றியிருந்தவர்கள் அதிகாரியை ஏளனமாகப் பார்த்தனர், ஒன்றும் சொல்ல முடியாதவனாய் தன் இருக்கையில் வந்து அமர்ந்தான் மகேஷ்.
மகேஷின் உதவி அலுவலர் மகேஷைப் பார்த்து, நீங்கள் அவரை கெளரவப்படுத்த நினைத்தீர்கள் அவரோ உங்களை கேவலப்படுத்திவிட்டார் , நீங்கள் இப்போது யார் என்பதை அந்த ஆசிரியருக்கு காட்டுங்கள் என்று, வருத்தத்தோடும், கோபத்தோடும் சொன்னான். மகேஷ் அதற்கு மெதுவாக சொன்னான், அவர் அன்று மட்டுமல்ல, இன்றும் அவர் எனக்கு ஆசிரியர்தான், நான் கேட்காமலே இரண்டு பாடங்களை கற்றுதந்துவிட்டார் ஒன்று மனுக்களை வாங்க பாரபட்சம் பார்க்காதே என்று, இரண்டு, எவ்வளவு உயர்ந்தவர்களாயிருந்தாலும் அதனால் பிறருடைய இடத்தை பறிக்காதே என்று. உதவியாளர் வாயடைத்து நின்றார். ஆம் அன்புக்குரியவர்களே, எவ்விடத்திலும் மாதிரியாய் இருப்பவரே நல்ல ஆசிரியர், எவ்விடத்திலும் கற்றுக்கொள்ள விரும்புபவனே நல்ல மாணவன்.
Bro. மெர்லின்