அங்கிகரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் (பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்)

Share this page with friends

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது (1 தீமோத்தேயு 1 :15).

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உலகமுழுதும்  களைகட்ட த் தொடங்கிவிட்டன. ஆனால் மேற்கண்ட சத்திய வசனத்தின் வார்த்தைகள் எத்தனை பேருடைய உள்ளங்களில் அதாவது வாழ்க்கையில் உண்மையும், அங்கீகாரமும் பெற்றிருக்கின்றன? கொஞ்சம் உங்கள் சிந்தனை மண்டலத்தில் அமர்ந்து சிந்தியுங்களேன்!

பிறப்பிற்கும் இறப்பிற்கும் அரசாங்கத்தில் அங்கீகாரச் சான்று  உண்டு. அவரவர் அந்தந்த நாட்டுக் குடிமக்கள் என்பதற்கான அங்கீகாரமும் உண்டு.   முரண்பாடு இருக்கக்கூடாது.  இருக்கவும் முடியாது. மதம் என்றாலும், ஜாதி என்றாலும், சமுதாயம் என்றாலும் வயதிற்கும் கூட அங்கீகாரம் இல்லையென்றால் தொடர முடியாது.  எந்த ஸ்தாபனமானாலும், நிறுவனமானாலும் அதற்குரிய அங்கீகாரம் தேவை.

மதத்தின் விழாவாக நீ கிறிஸ்துமஸ் கொண்டாடினால் அதற்கு அங்கீகாரம் தேவையில்லை!  நீ எப்படியும் கொண்டாடிக்
கொள்ளலாம். ஆனால் மனதின் விழாவாக கொண்டாட விரும்பினால் அதற்கு அங்கீகாரம் தேவை!! 

ஆண்டவர் இயேசு உலகில் வந்தார் என்பதற்கு ஆதாரமும், அங்கீகாரமும் அடுக்கடுக்காக உண்டு. கி.மு. கி. பி. அதாவது, உலகம் முழுவதும் இது நடைமுறையில் உள்ளது. கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்குப் பின் என்பதை யாரும் மறுக்க முடியாது. பாவிகளை இரட்சிக்க வந்தார் என்பதற்கும் மேகம் போன்ற திரளான சாட்சிகள் உண்டு.  இந்த சாட்சிகளின் எண்ணிக்கை நாள்தோறும் உலகமெங்கிலும் உயர்ந்துகொண்டே போகிறது.

நீ கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்கு முன் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். 

நீ உன்னைப் பாவி என்று ஒத்துக்கொள்கிறாயா?
உன் பாவங்களை கிறிஸ்து இயேசு மன்னித்தார் என்ற நிச்சயம் உனக்கு உண்டா?
கிறிஸ்துவை உன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக் கிறாயா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஆம் என்று உண்மையான உள்ளதோடு பதில் உன்னிடத்தில் உண்டானால் கிறிஸ்து இயேசுவின் அங்கீகாரம் உனக்கு உண்டு. இல்லையெனில் வாண வேடிக்கைகளைப் போலத்தான் உன் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் புகையைப் போல  மறைந்துவிடும். கொண்டாட்டம் முடிவதற்குள் பல ஆயிரங்கள் வீணாகிப் போகும். 

உண்மையும் அங்கீகரிப்புமான இரட்சிப்பின் வார்த்தை, உன் வாழ்க்கையில் நிச்சயம் இடம்பெறவேண்டுமென்பதே கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியும்  சமாதானமுமாகும்.  இது இல்லையென்றால் எப்படி தேவ மைந்தனுக்குச் சத்திரத்தில் இடமில்லையோ அப்படியே உன் வாழ்க்கைச் சரித்திரத்தில் கிறிஸ்துவுக்கு இடமில்லாமல்போகும்.

தேவ வார்த்தை என்பவரே மாம்சமானார். வார்த்தையின் அங்கீகாரமே உன் வாழ்க்கையின் அங்கீகாரமாக மாறும். 

உன் உள் மனதில் தேவ வார்த்தையை ஏற்றுக்கொள்ளாத அகங்காரப் பெருமைகள் உன்னை வீண் அலங்கார கிறிஸ்த வனாய் மாற்றிவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாய் இரு.

உண்மையும் அங்கீகரிப்புமான தேவ வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு அதற்கு கீழ்ப்படி.

உனது இந்த வருட கிறிஸ்துமஸ் மிகுந்த ஆனந்த சந்தோஷ கிறிஸ்துமஸ் ஆக  இருக்கட்டும் (மத்தேயு 2:10)

அன்பின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்
எழுத்தாளர் / போதகர்


Share this page with friends