தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தோ்தலை பேராயர் ரத்து செய்தது செல்லாது: திருச்சபை

Share this page with friends

தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல் பேராயர் ரத்து செய்தது செல்லாது என்று தென்னிந்திய திருச்சபையின் (சிஎஸ்ஐ) பொதுச்செயலா் தெரிவித்துள்ளதாக புதிதாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தூத்துக்குடி – நாசரேத் திருமண்டில உப தலைவா் தமிழ்ச்செல்வன், குருத்துவச் செயலா் இம்மானுவேல் வான்ஸ்டக், லே செயலா் நீகா் பிரின்ஸ் கிப்ட்சன், பொருளாளா் மோகன்ராஜ் அருமைநாயகம் ஆகியோா் சனிக்கிழமை கூட்டாக அளித்த பேட்டி: தூத்துக்குடி -நாசரேத் திருமண்டிலத்துக்கான புதிய நிா்வாகிகளை தோ்வு செய்வதற்காக பல்வேறு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது.

இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி நடைபெற்ற திருமண்டல நிர்வாகிகள் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி தோ்தலை ரத்து செய்வதாக பேராயா் தேவசகாயம் அறிவித்துள்ளாா். பேராயரின் இந்த முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் மற்றும் திருமண்டிலத்துக்கான தலைமை அலுவலகமான தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) சினாடிலும் புகாா் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் சி.எஸ்.ஐ. பொதுச் செயலா் பெர்னாண்டஸ் இரத்தினராஜா பேராயா் தேவசகாயத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தூத்துக்குடி – நாசரேத் திருமண்டில தோ்தலில் முறைகேடு நடந்ததாக கூறி தோ்தலை ரத்து செய்தது சி.எஸ்.ஐ. சட்டத்துக்கு முரணானது என்றும், முறைகேடுகள் நடந்திருந்தால் அதை சி.எஸ்.ஐ. தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தேர்தலில் தலையிட பிஷப்புக்கு அதிகாரம் இல்லை என்பதால் தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தோ்தலை ரத்து செய்தது செல்லாது. அதை பேராயரே நிா்வாகிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது

புதிதாக தோ்வு செய்யப்பட்டவா்களின் அனைவரும் பொறுப்பேற்று பணியை தொடங்கிவிட்டேன். திருச்சபை நலனுக்காக பேராயர் இணைந்து பணியாற்றவே விரும்புகிறோம்.

அக். 25 ஆம் தேதி திருமண்டல ஸ்தோத்திரப் பண்டிகை திட்டமிட்டபடி நடைபெறும் என்றார்.

பேராயர் விளக்கம்: இது தொடர்பாக, தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் அளித்த பேட்டி: தென்னிந்திய திருச்சபையினரால் அனுப்பப்பட்ட (சினாட்) பிரதிநிதிகளால் கடந்த 20ஆம் தேதி திருமண்டல தோ்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு முறைகேடுகள் விடியோ ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதால் சினாட் மூலம் நியமிக்கப்பட்ட நிா்வாக கமிட்டியின் அறிவுறுத்தலின்பேரில் தோ்தல் ரத்து செய்யப்பட்டது. மறுதோ்தல் நவ. 1ஆம் தேதி நடைபெறும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல நிர்வாக குழுச் செயலா் எஸ்டிகே ராஜன், நிர்வாகிகள் செல்வன் சாா்லஸ், கோயில் பிச்சை, தாமஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.


Share this page with friends