தானியேல் மேல் இருந்த விசேஷித்த ஆவியானவரின் தன்மைகள்

Share this page with friends

தானியேல் மேல் இருந்த விசேஷித்த ஆவியானவரின் தன்மைகள்

தானியேல் மேல் பரிசுத்த தேவர்களின் ஆவி இருக்கிறது என்றும், தேவர்களின் ஆவி இருக்கிறது என்றும், விசேஷித்த ஆவி இருக்கிறது என்றும் சாட்சிப் பெற்றார். திரியேக தெய்வத்தின் மூன்றாம் நபராக இருக்கும் பரிசுத்த ஆவியானவர் தான் இன்றும் நமக்குள் வல்லமையாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார். கிறிஸ்துவை விசுவாசித்து, பிதாவை மகிமைப்படுத்தும் போது ஜீவ நதியாக நமக்குள் இருந்து செயல்படுவார். இந்த விசேஷித்த ஆவியானவரின் தன்மைகள் என்ன வென்று தொடர்ந்து கவனிப்போம்.

  1. உணர்வின் ஆவியானவர்

பாவத்தை, நீதியை, நியாயத்தை மற்றும் உலகத்தை குறித்து கண்டித்து உணர்த்தி பரிசுத்த பாதையில் செல்ல அறிவை உணர்த்தும் ஆவியானவராக இருக்கின்றார்.

  1. போதிக்கும் ஆவியானவர்

கல்வி மானின் நாவை கொடுத்து, கற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தந்து நம்மை போதித்து, வழிகாட்டும் ஆலோசனை கர்த்தர். சத்தியத்தையும் ஞானத்தையும் போதித்து அதினால் விடுதலை தருகிறவர்.

  1. வெளிப்பாட்டின் ஆவியானவர்

ஆவியானவர் வரங்கள் மூலம் நம்மில் கிரியை செய்கின்றார். தரிசனம், சொப்பனம், தீர்க்கதரிசனம் மற்றும் அசரீதி மூலம் நமக்கும் ஞானத்தை கொடுத்து, அறிவை கொடுத்து நமது எதிர்காலம் மற்றும் சூழ்நிலைகளை வெளிப்படுத்தி அவர் பாதையில் நடத்துகிறார். ஞானத்தை அருளும், மறைபொருள் வெளிப்படுத்தும் ஆவியானவராகவும் செயல்படுகிறார்.

  1. விண்ணப்பத்தின் ஆவியானவர்

நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று அறியாமல் இருக்கையில் வாக்குக்கடங்காத பெருமூச்சுடன் விண்ணப்பம் செய்ய விண்ணப்பத்தில் உதவி செய்கின்றார். இடைவிடாமல் ஜெபிக்க வைக்கும் ஆவியானவர்.

  1. வசனத்தின் ஆவியானவர்

வேதத்தை ஆராயவும், கிறிஸ்துவின் வார்த்தைகளை ஞாபகம் செய்து தரவும், வசனத்தின் படி சமயத்திற்கு ஏற்ற வார்த்தையை நமக்கு தந்து உதவி செய்யும் நல்ல தேற்றரவாளன்.

  1. ஆராதனையின் ஆவியானவர்.

பிதாவாகிய தேவனை குமாரன் முன்னிலையில் ஸ்தோத்திரம் இடைவிடாமல் செய்ய நம்மை தூண்டுபவர் இவரே. பெந்தேகோஸ்தே நாளில் இவர் ஊற்றப் பட்ட உடன், தேவமகத்துவங்கள் தானாக பேசப்பட்டது. இவர் இருக்கிற இடத்தில் ஆவியோடும் உண்மையோடும், பரிசுத்த அலங்காரத்தோடும், நடுக்கத்தோடும், கர்த்தருக்கு பயப்படும் பயத்தோடும், சங்கீதங்களோடும், கீர்த்தனைகளோடும், கருத்தோடும் ஒழுக்கத்தோடும் அவரில் நிறைந்த ஒரு ஆராதனை வெளிப்படும். அந்த ஆராதனை எங்கு உண்டோ அங்கு விடுதலை.

  1. பாடுகளின் வழியாக நடத்தும் ஆவியானவர்

சிலுவையை சந்தோசமாக, முறுமுறுப்பு இல்லாமல் ஏற்றுக்கொள்ள வைக்கும் ஆவியானவர். சிலுவையை குறித்து மேன்மை பாராட்டும் ஆவியானவர். சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை முன் நிறுத்தும் ஆவியானவர். பாடுகளின் வழியாக கடந்து செல்ல உதவி செய்யும் ஆறுதல் செய்யும் ஆவியானவர்.

  1. பெலத்தின்/ வல்லமையின் ஆவியானவர்

தேவன் நமக்கு பயத்தின் ஆவியை அல்ல, அன்பும், பலமும், புத்தியும் உள்ள தெளிந்த புத்தியின் ஆவியை தந்து இருக்கிறார் என்று எழுதப்பட்ட படி, நம்மை உள்ளான மனிதனில் பெலப்படுத்தி பாவத்திற்கு மரித்து நீதிக்கு பிழைக்க உயிர்ப்பிக்கும் ஆவியானவர்.

  1. சாட்ச்சியின் ஆவியானவர்

நம்மை வரங்களினாலும் கனிகளினாலும் நிரப்பி தேவ நாம மகிமைக்காக உலகமெங்கிலும் அவருக்கு மேன்மையாக, சீடர்களாக மாற்றி, சபையில் நம்மை ஒன்றாக கணுக்களாக, ஒரே கல்லின் மேல் கல்லாக கட்டி நம்மை பக்தி விருத்தி அடைய செய்து கிறிஸ்துவை போல மாற்றும் ஆவியானவர்.

  1. புத்திர சுவிகாரத்தின் ஆவியானவர்

நம்மை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டு, அப்பா பிதாவே என்று கூப்பிடும் அதிகாரம் தந்து நம்மை பரிசுத்தப்படுத்தி, எக்காள சத்தம் தொனிக்கும் போது நம்மை மறுரூபமாக்கி உயிரடைய செய்யும் ஆவியானவர். இதற்காவே நாம் நம்மில் தவிக்கிறோம்.

இந்த ஆவியானவர் இன்னும் நம்மில் பூரணமடைவாரக!

செலின்


Share this page with friends