தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணுகிறான்

Share this page with friends

தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணுகிறான் – நீதி 29:15

பிள்ளைகளை இரட்சிப்புக்கு நேராக வழி நடத்தாமல், அவர்களுடைய இரட்சிப்பின் காரியத்தில் நீங்கள் நிர்விசாரம் காண்பித்து, அவர்களுக்கு உயர்வான உலகக் கல்வி அளித்து, அவர்கள் நல்ல சம்பளங்களில் உத்தியோகங்களில் அமருவதை நீங்கள் காணத் துடி துடிப்பீர்களானால் அதின் எதிர் விளைவுகள் காலப்போக்கில் உங்களை இரத்தக் கண்ணீர் வடிக்க வைத்துவிடும். “உனக்கு 12 ஆண் மக்கள் இருக்கின்றனர் என்று பெருமைப்படாதே. நினைவில் வைத்துக்கொள், தின்பதற்கு பின் நாட்களில் தவிடு கூட உனக்கு கிடையாமற் போகலாம்” என்று காஷ்மீரி பண்டிதர்கள் மத்தியில் ஒரு பழமொழி இருப்பதாக நான் வாசித்தேன். உண்மையான வரிகள்.

சமீபத்தில் ஒரு தேவப்பிள்ளை தான் பெற்ற தனது மகனின் மனைவி வீட்டில் வளர்க்கும் நாய்க்கு இட்லி கொடுக்கும் அதே வேளையில் தனக்கு இட்லி கொடுக்க மறுப்பதால் ஹோட்டலில் விலைக்கு இட்லி வாங்கி சாப்பிடுவதாக வேதனையுடன் எழுதியிருந்தார்கள். எத்தனை துயரமான காரியம் பாருங்கள்! அந்த மகனைப் பெற்ற பொழுது அந்த தாயார் எவ்வளவாய் சந்தோசப்பட்டிருப்பார்கள்! எத்தனையான வருங்கால மனக்கோட்டைகளை எல்லாம் கட்டியிருப்பார்கள்! ஆனால், இப்பொழுது அந்த தாயாருக்கு அதே மகன் வீட்டில் இருக்கும் ஒரு நாய்க்கு கொடுக்கப்படும் கனம், மரியாதை கிடையாது.

அநேக குடும்பங்களில் ஆண் மக்களைப் பெற் பெற்றோர் மருமகள்கள் மூலமாக அனுபவிக்கும் கொடுமைகளை சொல்லி மாளாது. இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர்.
அதின் ஒரே காரணம், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் இரட்சிப்பு, மறுபிறப்பு, பரிசுத்த ஜீவியத்தில் இளம் பருவ நாட்களில் கவனம் செலுத்தாமல் அவர்களின் உலகக் கல்வி, உத்தியோகம் போன்றவைகளில் முழுக்கவனம் செலுத்தி பிள்ளைகளை அவர்களின் சிருஷ்டிகரின் உறவிலிருந்து துண்டித்து விட்டதுதான். பிள்ளைகள் ஜெபிக்கின்றார்களா? தேவனுடைய வார்த்தைகளை வாசித்து தியானிக்கின்றார்களா? கர்த்தருடைய அன்பில் வளருகின்றார்களா? என்பதைக் குறித்தெல்லாம் அவர்களுக்கு அக்கறையே கிடையாது. அரசு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, பட்டம் பதவிகளை அடைந்து, உலகத்தரம் வாய்ந்த கம்பியூட்டர் கம்பெனிகளில் திரண்ட சம்பளங்களில் நல்ல வேலை வாய்ப்புகளைப் பெற்று இந்த உலக வாழ்வில் அவர்கள் எல்லா சீரும் சிறப்புமாக வாழவேண்டும் என்ற ஒரே ஏக்கமும், தாகமும்தான். அதின் ஒரே எதிர்விளைவுதான் வீட்டுக்கு வரும் மருமகள் அவர்களை வீட்டில் வளர்க்கும் நாய்க்கு கொடுக்கும் கனத்தைக் கூட கொடுக்காமல் அவர்களை அற்பமாக எண்ணி நடத்துகின்றாள். அதுமட்டுமல்ல, அவர்களின் துரிதமான சாவுக்காக ஆசை ஆவலாக அவள் காத்துக் கொண்டிருக்கின்றாள். எத்தனை பயங்கரம் பாருங்கள்!

இதை கருத்தோடு வாசிக்கும் அன்பான தேவபிள்ளையே, உங்கள் அருமைப் பிள்ளைகளை கர்த்தருக்குப் பயப்படும் பயத்திலும், நித்திய ஜீவப்பாதையிலும் மிகுந்த ஜெபத்தோடு வழிநடத்துங்கள். பிள்ளைகளின் ஓய்வு நேரங்கள் கர்த்தருடைய வேத வசன தியானத்திலும், ஜெபத்திலும், கர்த்தரைப் பாடித் துதிப்பதிலும் செலவிடப்படுகின்றதா என்பதை கவனியுங்கள். உங்கள் வீட்டில் கரும் பெட்டி இருந்தால் அதில் பிள்ளைகள் பார்க்கும் நிகழ்ச்சிகளை கவனியுங்கள். அதில் செலவிடும் நேரத்தை ஆண்டவரின் பாதங்களில் ஜெபத்தில் செலவிட அவர்களுக்கு தேவ ஆலோசனை கொடுங்கள். மிகவும் சுருக்கமான வாழ்நாட் காலம். அதுவும் சீக்கிரமாக பறந்தே மறைந்துவிடும் (சங்கீதம் 90 : 10 ) பிள்ளைகளின் இரட்சிப்பின் காரியத்தில் தீவிர கவனம் செலுத்துங்கள். அவர்களின் இரட்சிப்புக்காக கண்ணீர் சிந்தி அழுது ஜெபியுங்கள்.
நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
லூக் 23-28 என்று இயேசு சிலுவையை சுமந்து கொண்டு சொன்ன வார்த்தை எவ்வளவு உண்மை.ஒரு குறிப்பிட்ட வயதை பிள்ளைகள் கடந்துவிடும்போது இரட்சிப்பை பெற்றுக் கொள்ளுவது கடினமாகிவிடும். கிருபையின் காலத்தில் பிள்ளைகளை உன்னதமானவரின் செட்டைகளின் மறைவில் அடைக்கலம் புகுந்து கொள்ளச் சொல்லுங்கள். பிள்ளைகள் இரட்சிப்பின் பாத்திரங்களாகி ஆண்டவருடைய அடியார்களாக மாறும்போது அவர்களுக்கு வரும் வாழ்க்கைத் துணைகள் உங்களைப் பெற்ற தாய் தந்தையர்களைப் போல நேசித்துக் கனப்படுத்தும் அன்பின் இருதயத்தை தேவன் அவர்களுக்கு கொடுப்பார். உண்மைதான், “என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்” (1 சாமுவேல் 2 : 30) என்ற தேவ வாக்கு உங்களில் பலிக்கும். அதற்கான கிருபைகளை தேவன் தாமே உங்களுக்குத் தந்தருள்வாராக.


Share this page with friends