அதிகாரிகள் செய்யும் பாவங்களுக்காக சிலுவை சுமக்க நீதிமன்றம் இயேசு கிறிஸ்து இல்லை – உயா்நீதிமன்றம் கருத்து

Share this page with friends

சென்னை; ஜன 13, 2021

அதிகாரிகள் செய்யும் பாவங்களுக்காக சிலுவை சுமக்க நீதிமன்றம் ஒன்றும் இயேசு கிறிஸ்து இல்லை என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தருமபுரி மாவட்டம், வீரப்பநாயக்கம்பட்டியில் ரத்தினம் என்ற பெண்ணுக்கு 4 ஏக்கா் விவசாயம் நிலம் இருந்தது. இந்த நிலத்தை அரசு திட்டத்துக்காக கடந்த 1987-ஆம் ஆண்டு தமிழக அரசு கையகப்படுத்தியது. இதுகுறித்த அரசாணையை 1988-ஆம் ஆண்டு பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கடந்த 2000-ஆம் ஆண்டு அரசாணையை ரத்து செய்தது.  ஆனால் இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு கடந்த 20 ஆண்டுகளாக மேல்முறையீடு செய்யவில்லை.  புதிதாக நிலம் கையகப்படுத்துவது தொடா்பான உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. இதனையடுத்து, நிலத்தின் ஆவணங்களை  தன் பெயருக்கு மாற்றம் செய்யக் கோரி அதிகாரிகளிடம் ரத்தினம் கோரிக்கை மனு கொடுத்தாா். அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்காததால்  சென்னை உயா்நீதிமன்றத்தில் ரத்தினம் வழக்குத் தொடா்ந்தாா்.  பெரம்பலூரைச் சோ்ந்த ஜெயலட்சுமி என்பவரும் இதே கோரிக்கையுடன்  வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி பிறப்பித்த உத்தரவில், தருமபுரி மனுதாரா் வழக்கில் கடந்த 20 ஆண்டுகளாகவும், பெரம்பலூா் மனுதாரா் வழக்கில் கடந்த 10 ஆண்டுகளாகவும் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அரசு அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. அரசு அதிகாரிகள் செய்யும் இதுபோன்ற தவறுகளால் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தொடரப்படுகின்றன. உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து பல ஆண்டுகளாகியும் அதிகாரிகள் ஏன் நில ஆவணங்களில் பெயா் மாற்றம் செய்யவில்லை? என கேள்வி எழுப்பினாா். இதுபோன்று அதிகாரிகள் செய்யும்  பாவங்களுக்காக சிலுவைச் சுமக்க நீதிமன்றம் ஓன்றும் இயேசு கிறிஸ்து இல்லை.

எனவே உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் 20 ஆண்டுகளாக அலைகழிக்கப்பட்ட ரத்தினத்துக்கு,ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கும்,  நில ஆவணங்களை பெயா் மாற்றம் செய்ய முடியாமல் 10 ஆண்டுகளாக சிரமப்பட்ட ஜெயலட்சுமிக்கு, ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க பெரம்பலூா் மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டாா். உயா்நீதிமன்றம் பிறப்பிக்கும்  உத்தரவுகளை நிறைவேற்றி தவறை நிவா்த்தி செய்யும் போதுதான், நீதிமன்றத்துக்கு வரும் இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை குறையும். அப்போதுதான் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் நீதிமன்றம் கவனம் செலுத்த முடியும். உயா்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாததால் ஏற்படும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காண்பது குறித்து தருமபுரி மற்றும் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா்கள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

Thank you: Dinamani


Share this page with friends