அடைக்கப்பட முடியாத இதய கதவு

அந்த ஆற்றங்கரை ஓரத்தில் நடந்த
சின்ன கூட்டத்தில்
ஜெபக்கூட்டத்திற்கு பின்
பவுல் உபதேசித்துக்
கொண்டிருந்தபோது
கர்த்தர் லீதியாளின்
இருதயத்தைத் திறந்தார்
(அப்போஸ்தலர் 16: 14)
ஆலயத்தின் கதவுகளை
அடைத்துவைக்கலாம்
ஆற்றங்கரை ஓரத்தை
அடைத்துவைக்க கதவுகள் ஏது?
திறக்கப்பட்ட
லீதியாள்களின் இருதயக் கதவை
யாரால் அடைக்க முடியும்?
உலைப் பானையை மூடிவிடலாம்
ஊர் வாயை யாரால் மூடமுடியும்?
மாதப்பிறப்பிலும்
நியமித்த காலத்திலும்
நம்முடைய பண்டிகை நாட்களிலும்
எக்காளம் ஊதவிடாமல்
தடுத்துவைக்கலாம்
(சங்கீதம் 81:3)
ஆனால்,
அந்த வியாபாரக் கப்பலைக்
கவிழ்க்க, தடுக்க எந்த
புயலாலும் முடியாது
(நீதிமொழிகள் 31:14)
கோடாக் கோடி லீதியாள்களின்
இதயக் கதவுகள்
சுவிஷேத்தினால்
திறக்கப்பட்டுள்ளது.
தினமும் திறக்கப்பட்டுக்
கொண்டேயிருக்கிறது
எண்ணற்ற பவுல்களும்
தீமோத்தேயுக்களும்
இரட்சிக்கப்பட்டுவிட்டனர்
ஆலயங்கள் நிரப்பப்பட்டுவிட்டன
நிரம்பிவழிந்து
கொண்டேயிருக்கின்றன
சனகெரிப்பின் கொக்கரிப்பு
எருசலேமை (சபையை)
அசைக்கமுடியவில்லை
சபை என்ற ஊரின் வாய் மட்டுமல்ல
மோசேயின் கைகளைத் தாங்கின
ஆரோன் மற்றும் ஊரின் கைகளும்
தளர்ந்துபோகவில்லை
திறந்தே இருக்கிறது
தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூரு
கர்த்தர் பெரிய காரியங்களை
செய்வார்
(யோவேல் 2 :21)
சபையே பயப்படாதே
மகிழ்ந்து களிகூரு
கர்த்தர் பெரிய காரியங்களை
செய்வார்
சனகெரிப்பின்
சப்த நாடி அடங்கிப்போய்
அவனது கர்ப்பப்பிறப்பான
பிள்ளைகளாலே
அவனது கோயில் வாசலிலேயே
கொல்லப்பட்டான் (ஏசாயா 37:38)
இந்தக்கல்லின் மேல்
என் சபையைக்கட்டுவேன்;
பாதாளத்தின் வாசல்கள்
அதை மேற்கொள்வதில்லை
(மத்தேயு 16 :18)
திறக்கப்பட்ட
லீதியாள்களின் இருதயக் கதவை
யாரால் அடைக்க முடியும்?

Director – Department of Literature
tcnmedia.in