குடும்பம் ஒரு குருவி கூடு! வித்யா’வின் விண் பார்வை

பிரிப்பது எளிது,
கட்டுவது கடினம்.
இரட்டைக் கோபுரங்களைக்
கட்டிவிடலாம்,
ஒரு தென்னை மட்டையின்
ஓரத்தில் தூக்கணாங்குருவி
வாயாலே கட்டும்
கூட்டைப் போல,
கையாலே கட்டிவிட
எந்தக் கொம்பனாலும் முடியாது.
குடும்பம் என்பது ஒரு குருவிக் கூடு,
பிரிப்பது எளிது,
அதனால்தான்
என்னவோ,
தேவன் இணைத்ததை மனுஷன்
பிரிக்காதிருக்கக்கடவன் (மத்தேயு 19:6)
என்ற கண்டிப்பான உத்தரவை
தேவன் பிறப்பித்துவிட்டார் போலும்.
“உனக்கு நான் வேண்டாம்
எனக்கு நீ வேண்டாம்“
ஆனால்,
நம் குழந்தைக்கு
பெற்றோர் வேண்டுமே!
என்ற இந்தப் பாழாய்ப் போன
கொள்கை அடிப்படையில்,
ஒருவித ஒப்பந்த அடிப்படையில்,
குடும்பத்தை நடத்தும்
கூட்டம் இன்றைக்குப் பெருகிவிட்டது.
கொர்நேலியுவின் குடும்பம்
அப்படிப்பட்டதல்ல.
இத்தாலியா பட்டாளம்
(Italian Regiment)
என்னப்பட்ட பட்டாளத்திலே
நூற்றுக்கு அதிபதியாகிய
கொர்நேலியு என்னும்
பேர் கொண்ட ஒரு மனுஷன்
செசரியா பட்டணத்திலே இருந்தான்.
(அப்போஸ்தலர் 10:1)
இவன், நூற்றுக்கு அதிபதி,
தன் வீட்டுக்குத் தளபதி.
மனைவிக்குத் தலை,
குடும்பத்திற்குத் தலைவன்.
இவன் தேவபக்தியுள்ளவன்
தன் வீட்டாரனைவரோடும்
தேவனுக்குப் பயந்தவன்
ஜனங்களுக்கு மிகுந்த
தருமங்களை செய்தவன்
எப்பொழுதும் தேவனை நோக்கி
ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தவன்
(அப்போஸ்தலர் 10:2)
இன்றைக்கு,
பக்தி என்ன விலை?
பரவசம் எங்கே கிடைக்கும்?
என்று கேட்கும் மக்கள் கூட்டம்
பெருகிவிட்டது.
இளங் கன்று பயம் அறியாது என்று
சொல்லுவார்கள்
இன்றைய ‘இளங் கன்று’களுக்கு
தெய்வ பயம் என்றால்
என்ன என்று தெரியாது
கொர்நேலியு தேவ பக்தியுள்ளவன்
யோசுவாவைப் போல,
நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம் என்று
வீட்டார் அனைவரோடுங்கூட
தேவனை சேவித்தவன்
(யோசுவா24:15)
தனக்கு மிஞ்சின
கருமங்களில் தலையிடாமல்
தான
தருமங்களில் தலையிட்டவன்.
இப்படிப்பட்ட இராணுவ தலைவன்
எப்படித்தான் எப்பொழுதும்
ஜெபம்பண்ணினானோ?
தூதனே, அவன் வீட்டுக்கு வந்துவிட்டான்
கொர்நேலியுவே என்று அழைத்துவிட்டான்
இந்த தரிசனத்தைக் கண்டவுடன்,
அவனோ, கண்டபடி பயந்துவிட்டான்
பவுலைப் போல, உடனே
ஆண்டவரே என்று
அழைத்துவிட்டான்
உன் ஜெபங்களும்
உன் தானதருமங்களும்
தேவனுக்கு எட்டிவிட்டது
என்ற செய்தியைக் கேட்டுவிட்டான்.
இன்றைக்கெல்லாம்
ஜெபிக்கிறார்கள்,
Angel வருகிற மாதிரி ஜெபிக்கிறதில்லை
Blessing வருகிற மாதிரி வேண்டுகிறதில்லை
என்னப்பா? என்று கேட்டால்
எங்க வீட்டுக்கு 24 மணி நேரமும்
Angel (டிவி) வருகிறது
Blessing (டிவி ) ஐ பார்க்கிறோம் என்கிறார்கள்
ஓகே, பாருங்கள்
பரவசமடையுங்கள்.
ஆனால்,
பச்சிளம் குழந்தைகளுக்காக
பாசம் காண்பித்து,
நாசம் பண்ணாமல்
ராஜாவின் கட்டளைக்குக்
கீழ்ப்படியாமல்,
தேவனுக்குப் பயந்து,
துணிச்சல் காட்டி
ராஜாவுக்குத் ‘தண்ணீ’ காட்டி
கண்ணைக் கட்டி,
பிரசவத்தைத் தடுக்காமல்
பிரசவிக்கச் செய்கிற கர்த்தருக்கு
கைகொடுத்து (ஏசாயா 66:9)
தங்கள் பிள்ளைகளை
பெற்றெடுத்து
வளர்த்து ஆளாக்கிய
தாய் குலங்களாகிய
சிப்பிராள், பூவாள் என்ற
அந்த மருத்துவச்சிகளின்
குடும்பம் தழைத்ததுபோல
(யாத்திராகமம் 1:21)
உங்கள் குடும்பங்கள்
தழைக்க,
ஊரெங்கும் உலகமெங்கும் இருக்கும்
ஜெப கோபுரங்கள் போல உயர்ந்து நிற்க,
ஆல மரம் போல
விழுதுவிட்டு அசையாமல் நிற்க,
பச்சையான ஒலிவ மரம் போல
பசுமையாய் இருக்க,
இன்றைய அவசரத் தேவை,
அவசியத் தேவை
கொர்நேலியு
கட்டியெழுப்பிய குடும்பங்களே,
என்பதை மனதில் கொள்ளும்
நாள் இதுவே.
15 May – International Day of Families – க்காக
எழுதப்பட்ட சிறப்புக் கவிக் கட்டுரை
(33 ஆண்டுகளாக தேவன் எனக்கு
கிருபையாய் அமைத்துக் கொடுத்த
குடும்பம் என்னும் குருவிக்கூட்டுக்குள்
வாழ்ந்துகொண்டிருக்கும் நான்,
இதை வாசித்த உங்களையும்
உங்கள் குடும்பங்களையும் வாழ்த்துகிறேன்).
நன்றி.

நல்லாசான்
ஜே.இஸ்ரேல் வித்ய பிரகாஷ், மதுரை,
தமிழ்நாடு, தென் இந்தியா