வானத்தின் வாசல்!

Share this page with friends

“இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான்” (ஆதி. 28:17).

வீடுகளுக்கு ஒரு வாசலுண்டு. அதைப் போலவே, வானத்துக்கும் ஒரு வாசலுண்டு. ஆலயம் அறியப்படாதிருந்த ஒரு இடத்தில் கர்த்தரை சந்தித்த யாக்கோபு, வானம் திறந்திருக்கிறதைக் கண்டார். பூமிக்கும் வானத்துக்கும் ஏணிப்படி வைத்திருக்கிறதைக் கண்டார். அந்த ஏணியில் தேவதூதர்கள் ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் இருந்ததைக் கண்டார்.

அந்த ஏணியின் வழியாய் மனிதன் ஒருவனும் பரலோகத்திற்கு ஏறி சென்றதை யாக்கோபு காணவில்லை. ஏணியில் ஏற போதுமான பரிசுத்தம் மனிதனுக்கு இல்லை. பாவத்தைப் பார்க்கக்கூடாத சுத்த கண்ணனாகிய தேவனை நெருங்கி கிட்டி சேரும் தைரியமும் அவனுக்கு இல்லை. ஆனால் புதிய ஏற்பாட்டுக்கு வரும்போது, இயேசுவே அந்த ஏணியாய் மாறினார். அவரே பரலோகத்தையும் பூமியையும் ஒன்றாய் இணைத்தார். மனிதன் பரலோகத்திற்குச் செல்லும் பாக்கியத்திற்கு வழி வகுத்துக் கொடுத்தார்.

யோவான் தரிசனத்திலே பார்த்தபோது திரளான ஜனங்கள் பரலோகத்துக்கு ஏறிக்கொண்டிருப்பதைக் கண்டார். மாத்திரமல்ல ‘இங்கே ஏறி வா’ என்ற அழைப்பும், அவனுக்குக் கிடைத்தது. தேவபிள்ளைகளே, இயேசு உங்களுக்காக வாசலாய் மாறியது எத்தனை பாக்கியம்! ‘நானே வழி. என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்’ என்று இயேசு சொன்னாரே!

வேதத்தில் பல வாசல்களைக் குறித்து வாசிக்கலாம். வெளிப்படுத்தல் 3-ம் அதிகாரம், 8-ஆம் வசனத்தில் இன்னொரு வாசலைக் குறித்து வேதம் சொல்லுகிறது. அது திறந்த வாசல். “இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்” என்று வேதம் சொல்லுகிறது. மனிதன் ஒரு வாசலை அடைக்க, கர்த்தர் ஏழு மேன்மையான, மகிமையான வாசல்களைத் திறந்து தருகிறார். ஆசீர்வாதத்தின் திறவுகோல்கள் அத்தனையும் அவருடைய கரத்தில்தான் இருக்கின்றன. அவர் தாவீதின் திறவுகோலையுடையவர். ஒருவரும் பூட்டக்கூடாதபடி திறக்கிறவர். இதோ, திறந்த வாசலை அவர் உங்களுக்கு முன்பாக வைத்திருக்கிறார்.

சுவிசேஷத்தின் வாசல்கள், ஊழியத்தின் வாசல்கள், பரிசுத்தத்தின் வாசல்கள் திறந்திருக்கின்றன. ஜெபத்தின் வாசல் திறந்திருக்கிறது. இன்று ஒரு திறந்த வாசலை கர்த்தர் உங்களுக்குக் காண்பிக்கிறார். பல தடைகளின் பாதையில் நீங்கள் நடந்து வந்தீர்கள். போராட்டத்தின் பாதையிலே நடந்து வந்தீர்கள். முன்னேற முடியாமல் தவித்தீர்கள். ஆனால் கர்த்தரோ, இன்றைக்கு திறந்த வாசலை உங்களுக்கு முன்பாகக் கட்டளையிட்டிருக்கிறார்.

இன்னொரு வாசலைக் குறித்தும் வேதம் சொல்லுகிறது. அது திறப்பின் வாசல். தேவனுடைய பிள்ளைகள் நிற்க வேண்டிய ஒரு வாசல். ஆத்துமாக்களுக்காக, தேசத்திற்காக கண்ணீர் சிந்தி ஜெபிக்க வேண்டிய ஒரு வாசல். அநேக தேவனுடைய பிள்ளைகள் தங்கள் தங்கள் காலத்தில் உத்தரவாதத்தோடு நின்ற ஒரு வாசல்.

தேவபிள்ளைகளே, மோசேயைப்போல நீங்களும் திறப்பின் வாசலில் நிற்பீர்களா? எஸ்தரைப்போல அழிந்துபோகிற ஜனங்களுக்காக கண்ணீரோடு மன்றாடுவீர்களா?

நினைவிற்கு:- “மோசே, அவர்களை அவர் அழிக்காதபடிக்கு, அவருடைய உக்கிரத்தை ஆற்றும்பொருட்டு, அவருக்கு முன்பாகத் திறப்பின் வாயிலே நின்றான்” (சங். 106:23).

மக்கள் அதிகம் வாசித்தவை:

வேதாகமத்தின்படி நல்லது எவைகள்?
வேதத்தில் பிறனிடத்தில் அன்பு கூர்ந்தவர்கள்
தலைமையத்துவ ஒப்பீடு!
பிரசங்க குறிப்புகள்: வெறுத்துவிடுங்கள்
கர்த்தர் உனக்கு கேடகமாய் இருப்பார்
Discerning Imbalance in Biblical doctrine
கிறிஸ்தவர்களின் உபவாசம் பற்றிய அறிவியல் பூர்வமான உண்மைகள் கூறுகிறார் மருத்துவர் சுந்தர் பரமார்த்தலிங...
கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபடலாமா? வேத ஆதாரங்களோடு முழுமையான விளக்கம்
ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய… பயன்படுத்தப்பட்ட ஆணி?” - ரகசிய அறைக்குள்… ‘ஆதாரங்களுடன்’ கண்டெடுப்பு...
அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் கிறிஸ்தவ வேட்பாளர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் உலக தமி...

Share this page with friends