தங்க புஷ்பமும் தங்கரளிக்காயும்

Share this page with friends

“தங்க புஷ்பமும் தங்கரளிக்காயும்”

என்ற நாவலை எழுதியுள்ளேன். இது ஆணவ கொலைகளை தழுவிய நாவல் கொஞ்சம் பொறுமையோடு படியுங்கள் நன்றி

விடியலில் ஒரு இடி தலையில… எழும்பு கழுதன்னு கடும் சத்தம் கண்ணை கசக்கி அடுப்பாங்கறயில கலசத்துல உமிக்கரியை எடுத்து பல்லை விளக்கி முகத்தில தண்ணி தெளிச்சு கருப்பட்டி காப்பி குடிச்சு மாட்டு சாணியை எருகிடங்கில போட்டு அடி பம்புல குதிச்சு குதிச்சு தண்ணி அடிச்சு குளிச்சு சாமி கும்பிட்டு திருநீறு பூசி பைக்கட்டை தோளில் போட்டு அம்மா 50 பைசா வேணும்ன்னு
கேட்க பலகயில நாலனா இருக்கு எடுத்துக்கோ ன்னு சத்தம்.. எடுத்து வெளியில் வர தங்க புஷ்பம் போவாமா ன்னு தோழிகளின் சத்தத்தோடு பள்ளிக்கு செல்கிறாள் நடுவைக்கு செல்லும் ஆட்களை எதிர் கொண்டு… ஒத்தையடிப் பாதை இருபக்கமும் நெருஞ்சி முள் விளைகள்.. காஞ்ச பனைமரம் மொட்டையாக நிற்க நல்ல பனைமரம் காவோலைகளின் சத்தம் எழுப்ப… கிளிகளின் சத்தம் காதில் விழ பள்ளிக்கு அருகில் வந்து வாசலில் இருக்கும் பாட்டியம்மாவிடம் அஞ்சு பைசா அழிரப்பரும் அஞ்சு பைசா சவ்வு மிட்டாயும் வாங்கி… பல்லால நடராஜ் டப்பாவை திறந்து அதுல போட்டு பையில் வைத்து பள்ளிக்குள் சென்று வகுப்பு அறையில் அமர்ந்தால் தங்கபுஷ்பம் சற்றே வயிறு வலிக்க….

முதல் வகுப்பே கணக்கு வகுப்பு கடுமையான கருப்பு கணக்கு வாத்தியார் கையில பெரம்பு வாயில சுண்ணாம்பு பயத்தில் வயிறு வலியை மறைத்தாள் தங்க புஷ்பம் இரண்டாவது வகுப்பு தையல் வகுப்பு பல் நீண்டி டீச்சர் வந்தாங்க… மெல்ல மெல்ல தயங்கி தோழிகள் மூலம் டீச்சர் தங்க புஷ்பத்திற்கு வயிறு வலிக்குது அப்படியா தங்க புஷ்பம் இங்க வா… வந்தாள் தங்க புஷ்பம் அருகில் வந்த தங்கை இளமங்கை யானாள் என்பதை கண்டு கொண்டார் டீச்சர்…. நாலு தோழிகள் புடை சூழ வீட்டிற்கு வந்தாள் தங்க புஷ்பம் தாய் தோட்டத்தில் இருந்து பசு மாட்டோடு வீட்டிற்கு வர மகள் பூப்புனித நிராட்டுக்கு ஆயத்தமானாள் என்று தோழிகள் மூலம் கேள்விப்பட கண்கலங்கினாள் தங்க புஷ்பத்தின் விதவை தாய்.. தாய் மாமன்கள் மூன்று பேருக்கு சொல்லிவிட சொந்த பந்தங்களுக்கு சொல்லி விட… வீட்டு வேப்ப மரத்தில் குழாய் கட்டி பாட்டு போட கிராமமே மகிழ்ந்தது அனைவரின் கையிலும் சீனியும் கசலி பழமும்… வெட்கத்துடன் சேலை கட்டப்பட்ட மகளை பார்த்து தாய் கண் கலங்க அண்ணன் மார்கள் ஊர் பசங்களோடு இலை சாப்பாடு விருந்து போட நிகழ்ச்சி முடிந்தது…

மூன்று வருடங்கள் கழிந்தது தாவணி கட்டி அழகு முகத்தோடு பக்கத்து தோட்டத்திற்கு ஒடிப்போன கன்றை பிடிக்க அந்த தோட்டத்தில் கீழ் சாதி பையன் தென்னைக்கு தண்ணீர் பாய்ச்சினான் இவள் மனதில் அன்பை பாய்ச்சினான்… மழைக்கு கூட பள்ளிக்கு ஒதுங்காத விடலைப் பையன் இவள் கனவில் அவன் வர அவன் கனவில் இவள் வர பார்க்கும் ஆசை மேலோங்க படிப்பும் பத்து முடிந்து விட்டது… தங்க புஷ்பத்திற்கு… மேல்நிலைப் பள்ளிக்கு படிவம் வாங்க போகிறேன் என்று போன மகள் மாலை நேரம் ஆகியும் வீடு வரவில்லை.. மனம் கசந்த அழுத தாய் கோபத்துடன் அண்ணன்மார்கள் வசைபாடி அசத்தும் ஊர் மக்கள் மறு நாள் விடிந்தது காபி தண்ணி கூட குடிக்காத தாய் நாள் முழுதும் சாப்பிடாத அண்ணன் மார்கள் செய்தி கேள்வி பட்டு சைக்கிளில் வந்த தாய் மாமன்கள்… தங்கப்புஷ்பத்தின் தோழியின் அண்ணன் மூலம் தான் தெரிந்தது.. நேற்று கணபதி பஸ்ஸில் தோட்டத்து பையனும் தங்கப்புஷ்பமும் ஊரை விட்டு ஓடிவிட்டார்கள் என்று..

நம்ம சாதி பையனா இருந்தாலும் பரவாயில்லை கீழ் சாதி பையன் கூட வா ஓடிப்போய்ட்டா… ஒரு வருடம் கழித்து வெகுண்டு எழுந்த அண்ணன்மார்கள் தாய் மாமன்மார்களின் அருவாளுக்கு பலியானான் தென்னை மரத்திற்கு தண்ணீர் பாய்ச்சி தங்க புஷ்பத்தின் மனதில் அன்பை பாய்ச்சின கீழ்சாதி விடலை பையன்… கைப்பிள்ளையோடு மெல்லிய தேகத்தோடு ஊருக்கு வந்து வாழ்வோம் என்று வந்த தங்கபுஷ்பத்தை சாடை சாட்டை அடியினால் ஒவ்வொரு நாளும் அடித்தனர்.. விலைமாதுவாக மாறிவிடுவோமோ என்ற பயத்தில் குளத்தங்கரையில் மணல் வாய்க்காலில் நின்றுகொண்டிருந்த தங்கரளி மரத்தின் காய்களை பறித்து குளத்தங்கரையிலே நாவல் பழ மரத்தின் அடியிலே பாறாங்கல்லில் அறைத்து தின்று அப்படியே திரும்ப ஒருக்காலும் திரும்பாதப்படிக்கு உயிரை விட்டாள் பாவி மகள் தான் பெற்ற பெண் பிள்ளையை தவிக்க விட்டு…..

பதறி அடித்து குளத்தங்கரைக்கு ஓடுது இனம் பார்க்கும் ஊரு சனம்… மறுநாள் அரசாங்க அறிவிப்பு திருமண வயது பெண்களுக்கு பதினெட்டு வயது.. ஆனால் தங்கபுஷ்பமோ சுடு காடு செல்கிறாள் பதினேழு வயதினிலே… பெற்ற பெண் பிள்ளையோ அரசாங்க தொட்டிலிலே…

Davd Livingstone


Share this page with friends