The Outlaw Bible Student Demons, Jesus, and the Pigs

கதரேன் பிரதரின் கதறல்!

Share this page with friends

 The Outlaw Bible Student Demons, Jesus, and the Pigs

கதரேன் பிரதரின் கதறல்!

கல்லறைகள் அவனது குடியிருப்பு
பிசாசுகள் அவனது உடன்பிறப்பு

இயேசுவானவர் கதரேன் நாட்டுக் கடற்கரையில்
கால் வைத்தவுடன் பட்ட மரம் போல
அவர் கண்களில் பட்டவன் இவன் தான்.

இந்தக் கதரேன் நாட்டுப் பயலை விடுவிக்க
ஓர் கடும் புயலைக் கடந்து வந்தார்

தரணியின் மைந்தனை வரவேற்க
உள்ளூர் தலைவனோ,
முன்னாள் சீஷர்களோ அந்த
சீ’ shore க்கு வரவில்லை

சொந்த பந்தங்களை மறந்து
சொஸ்த புத்தியை இழந்து
தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்து
DAY AND NIGHT
தொடர்ந்து தொல்லை
கொடுத்துக்கொண்டிருந்தான்

பிசாசுகள் இந்த கதரேன் பிரதரைப்
பிடித்த நாளிலிருந்து
பிரேதக் கல்லறைகளைக் குத்தகைக்கு எடுத்து
கும்மாளமடித்துக்கொண்டிருந்தன

லேகியோன் என்பது ஓர் ரோம படைப்பு பிரிவு
3000 முதல் 6000 வீரர்களைக் கொண்ட ஓர் பட்டாளம்

அத்தனை பிசாசுகளும் அவனுக்குள்
ஐக்கியமாய் இருந்தது ஆச்சரியமாயிருக்கிறது!

சொஸ்த மனம் உள்ளோரால் சபையில்
ஒருமனப்பட முடியவில்லை!

மலையடிவாரத்தில் பணிந்துகொண்ட
குஷ்டரோகியைப் போல
கடற்கரையில் இயேசுவைக் கண்டவுடன்
பணிந்துகொண்டான்

இயேசுவே உன்னதமான தேவனுடைய குமாரனே
என்று கூவி ஊரையே கூட்டிவிட்டான்

“பிசாசுகளும் விசுவாசித்து நடுங்குகின்றன’’ என்பது
உண்மையாகிவிட்டது.

இக்கால கிறிஸ்தவ சமுதாயம்
ஆலயத்திற்குள் நுழைகிறது
அதே வேகத்தில் சீக்கிரம் வெளியேற விழைகிறது
இதன் விளைவாக, நீதியின் விளைச்சல் குறைகிறது
மன உளைச்சலே மிஞ்சுகிறது

சரியான நேரத்தில் கல்லறைவாழ் மனிதன்
கர்த்தரை முகமுகமாய் சந்தித்துவிட்டான்

கடலில் இருக்கும்போதே, இயேசு அனுப்பிய
கட்டளையைப் புரிந்துகொண்டான்

கட்டளை கொடுத்தவரைக் காண
கடற்கரைக்கு வந்துவிட்டான்

அன்றைய தினம் விடிந்துவிட்டது
சூரியனும் உதித்துவிட்டது
சாத்தானின் சாம்ராஜ்யம்
முக்கால்வாசி இடிந்துவிட்டது

நீதியின் சூரியன் உதித்துவிட்டார்
நீதி தேவன் தனியொரு மனிதனை விடுவிக்க
புயலெனப் புறப்பட்டு வந்துவிட்டார்

இயேசுவைச் சந்தித்த உடனே,
சாத்தான்களின் சார்பில் ஓர்
விண்ணப்பத்தை வைத்தான்

இயேசு உடனே அதை ஏற்றுக்கொண்டு
உத்தரவு கொடுத்தார்
உடனே உயர்ந்த மேட்டிலிருந்து
அலறிக்கொண்டு அத்தனைப் பன்றிகளும்
கடலில் விழுந்து மாண்டுபோயின

அந்த க்ஷணமே கதரேன் பிரதர்
விடுதலையாகிவிட்டார்.

யூதாஸ்காரியோத்தும் உயர்ந்த மேட்டிலிருந்து
கல்லில் விழுந்து, வயிறு வெடித்து மாண்டது
நினைவிருக்கலாம்

பார்வோனையும் அவன் சேனைகளையும்
அப்படித்தானே கடலில் அழித்தார்

பிசாசின் கிரியைகளை அழிக்கத்தானே வந்தார்
அதற்குத் தானே உத்தரவு கொடுத்தார்
இதிலென்ன ஆச்சரியம்?

இதற்கிடையில், பன்றிகளை மேய்த்தவர்கள்
ஊரையே உசுப்பிவிட்டு,
உன்னதருக்கு எதிராக எழுப்பிவிட்டார்கள்

இப்படியும் ஓர் எழுப்புதல் ஊழியத்தைச்
செய்கிறவர்கள் ஏராளமாய் எழும்பிவிட்டார்கள்

ஏதோ Facebook, WhatsApp, Twitter-ல்
பார்த்தது போல
உடனடியாக 2000 பன்றிகளுக்கும்
அதிகமான மக்கள் கூடிவிட்டார்கள்!

கதரேன் பிரதர் முதல் முறையாக
வஸ்திரம் தரித்து இயேசுவின் பாதத்தில்
உட்கார்ந்திருப்பதைப் பார்த்துப் பயந்தார்கள்

கல்லறை மேட்டில் ஆந்தையைப் போல
அலறியபோதும் பயந்தார்கள்
விடுதலைப்பெற்று, ஆட்டுக்குட்டியைப்போல
அமர்ந்திருந்தபோதும் பயந்தார்கள்

அவனைக் கட்டிவைக்கவும்
அடக்கிவைக்கவும்
அதுவரை எந்த கொம்பனாலும்
கூடாதிருந்தது

ஆனால் இயேசுவோ அவனைக்
கட்டியும் வைக்கவில்லை
அடக்கியும் வைக்கவில்லை
மாறாக அவனை அன்பினால்
அமரப்பண்ணியிருந்தார்

அவனைப் பொறுத்தமட்டில் அதற்கு முன்
ஒரு இடத்தில்கூட உருப்படியாய்
உட்கார்ந்திருக்க முடியாது

இதுவே, இக்காலச் சந்ததியின்
அவல நிலையாய் இருக்கிறது

உட்கார்ந்திருப்பதைவிட,
கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு
ஓடிக்கொண்டிருக்கவே மனித மனம் விரும்புகிறது

நிமிஷத்திற்கு ஒரு முறை DEVICE – ஐ தொட்டு
வாட்ஸாப்பில் அப்பீல் செய்கிறது,
மெயில் பார்க்கிறது, வாழ்க்கையில்
பெயில் ஆகிறது.ADVICE-ஐ வெறுக்கிறது

பிசாசுகள் பிடித்திருந்த பிரதருக்கு புத்தி தெளிந்துவிட்டது
உள்ளூர் வாசிகளுக்கு புத்தி கெட்டுவிட்டது
பரபாஸை விடுதலையாக்கும்
இயேசுவை சிலுவையில் அறையும்
என்று கூச்சலிட்டவர்கள் இந்த
கதரேன் ஊரில் சம்பந்தம்
கலந்திருப்பார்களோ என்னவோ!

தங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவனின்
விடுதலையைக் கண்டு
மகிழ்ச்சியைத் தெரிவிக்கும்
மரபுக்கூட அவர்களுக்கு இல்லை

விடுதலை பெற்ற மனிதனைவிட
மக்கள் மனம் பன்றியை விரும்பியது

விடுவித்தவரை உடனடியாக
ஊரைவிட்டு துரத்த கமிட்டி கூடியது

ஓட்டுப்போடும் வயதை எட்டிய
அத்தனைபேரும் ஒருமனமாய்ப் புறப்பட்டு வந்து
தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும்படி
இயேசுவை வேண்டிக்கொண்டபோது
இயேசுவின் இதயம் கனத்தது

பிசாசுகளின் வேண்டுகோளை ஏற்றதுபோல
பன்றிகளின் பங்காளிகள் வைத்த வேண்டுகோளையும்
இயேசு ஏற்றுக்கொண்டார்

மாபெரும் விடுதலைப் பெருவிழாவைப்
பைசா காசு செலவில்லாமல் நடத்தி
தங்கள் ஊரில் சுதந்திரக் காற்றை வீசச்செய்தவருக்கு
கறுப்புக்கொடி காட்ட எப்படித்தான்
அவர்களுக்கு மனம் வந்ததோ?

கதரேன் பிரதர் எல்லாவற்றையும்
பார்த்துக்கொண்டிருந்தார்
அன்றைக்குத் தான் முதல் முறையாக
இயேசுவைப் பார்த்தார்
அந்த நேரமே தன் வாழ்க்கையை
அடியோடு அர்பணித்துவிட்டார்

உடனிருக்க உத்தரவு கேட்டார்
உன்னதரோ, உடனிருக்க உத்தரவு கொடுக்கவில்லை,
ஆனால் ஊழியம் கொடுத்தார்

கதரேன் நாட்டின் முதல் சுவிஷேசகன் அவன் தான்
பிசாசுகளின் பாடு அதற்குப்பின் திண்டாட்டம் தான்

குள்ள நரிகள் நிறைந்த அந்த ஊரில் எழும்பிய
முதல் மிஷனெரி, முன்னாள் லேகியோன் தான்

இயேசு அவனை நோக்கி;
நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்கு போய்
கர்த்தர் உனக்கு இரங்கி உனக்குச் செய்தவைகளை
அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்

பெற்றுக்கொண்ட விடுதலைக்காக “உள்ளதை’’ அல்ல
“உள்ளத்தை’’ கொடுப்பதையே இயேசு விரும்புகிறார்

அந்தப்படி அவன் போய்
“இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம்
தெக்கப்போலி என்னும் நாட்டில்
பிரசித்தம்பண்ணத் தொடங்கினான்
எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்’’

தெக்கப்போலி என்றால் பத்து பட்டணங்கள் சேர்ந்தது,
அந்தப் பத்துப் பட்டணங்களுக்கும் பாஸ்டர் அவன் தான்!

இயேசுவானவரின் ஊழியம் முடிந்தது
படகும் புறப்பட்டது,
இயேசு சந்தோஷமாய் புறப்பட்டுப்
படவிலேறி அக்கரைக்குச் சென்றார்.

‘அக்கரை’யில் காத்திருப்போரைக் குறித்து
அவருக்குத்தானே ‘அக்கறை’!

அன்புடன்
பாஸ்டர் ஜே .இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை -14

என்னை எழுத வைத்த வேத பகுதிகள்: மாற்கு 5: 1-21
யாக்கோபு 2:19, மாற்கு 5:8, யாத்திராகமம் 14:27,28, லூக்கா 23:18,

English version:


Share this page with friends