அடிமையின் உள்ளம், அது, அமைதியின் இல்லம் வித்யா’வின் விண் பார்வை

Share this page with friends


கனிக்குள் விதை
மறைந்திருப்பது போல,

ஒரு கன்னிகை
நாசரேத் என்னும் ஊரில்
மனிதர்களின் கண்களுக்கு
மறைந்திருந்தார்.

 
ஆனால், விண்ணக
தேவனின் விழிகளுக்கு
அந்த கன்னிகையால்
மறைந்திருக்க முடியவில்லை. 

பூமியெங்கும்
உலாவிக் கொண்டிருந்த
கர்த்தரின் கண்களில்
இந்த கன்னிகை
கிருபை பெற்றுவிட்டார்.

 
உலக இரட்சகரை
உலகத்திற்குள் கொண்டுவர,
இயேசுவானவரை மண்ணுலகில்
மனிதனாய் பிறக்கச்செய்ய,
தேவன் மாம்சத்தில் வெளிப்பட,
இந்தக் கன்னிகையைக்
கருவியாக பயன்படுத்த,
பரலோகம்  தீர்மானித்துவிட்டது.
 
தேவனின் செய்தியை
சுமந்துவந்த காபிரியேல்
என்னும் தூதன்
மரியாளின் வீட்டிற்குள்
பிரவேசித்து
கிருபை பெற்றவளே வாழ்க
என்றான்.

 
அமைதியாய் ஆரவாரமற்றுக் கிடந்த
கிணற்றுத் தண்ணீரில்
ஒரு சிறிய கல் விழுந்ததும்
சின்னஞ்சிறிய அலைகள் எழும்பி
அடங்குவது போல,
அந்தக் கன்னிகையின்
எண்ண அலைகள் சற்று
அதிர்ந்து பின்னர் அடங்கியது.

தேவ தூதனால்
சொல்லப்பட்ட அத்தனை
வார்த்தைகளையும்
கேட்ட மரியாளின்
ஓரக்கண்கள் ஈரங்கட்டியது
இதற்கெல்லாம்
எனக்கென்ன தகுதி இருக்கிறது?
என்று அவரது உள்ளம்
அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தது

 
இது எப்படி ஆகும்?
புருஷனை அறியேனே
என்ற மரியாளின் கேள்விகளுக்கு
அந்த தூதன் அழகாய் பதிலுரைத்தான்

வயது சென்ற எலிசபெத் அம்மையார்
கர்த்தரின் கருணையால் கர்ப்பவதியானதை
அற்புதத்தின் அடையாளமாகக்
காண்பித்தான் (லூக்கா 1:36).
 
தேவனால் கூடாதது
ஒன்றுமில்லை (லூக்கா 1:37) 
என்று சொல்லி
மரியாளின் ஒட்டுமொத்தக்
கேள்விகளுக்கு பதிலாக
தேவனை கொண்டுவந்து
தூதன் நிறுத்தின பின்பு


மரியாளின் உள்ளம்
அமைதியின் இல்லமாக
மாறிவிட்டது.

 
மரியாள் இதோ,
நான் ஆண்டவருக்கு அடிமை
என்று ஆண்டவருக்கு
தன்னை அர்ப்பணித்து
உம்முடைய வார்த்தையின்படி
எனக்கு ஆகக்கடவது என்றாள்
(லூக்கா 1:38).

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
நல்லாசான் – சர்வதேச விருது -2021
இயக்குனர் -இலக்கிய துறை (TCN MEDIA)

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends