மாறுவேடத்தில் இருக்கும் இராஜா

Share this page with friends

ஒரு ராஜா தன் குடிமக்களின் வாழ்க்கையை ஆராய்வதற்கு ஒரு ஏழை மனிதனைப் போல மாறுவேடத்தில் சென்றார். அவர் பலரிடம் சென்று தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். பலர் அவரை ஏளனபடுத்தியும், நிந்தித்தும் அனுப்பினார்கள். சிலர் மட்டுமே அவருக்கு உதவி செய்தார்கள். ஆனாலும் எந்த மனிதனின் அவச் சொல்லையும், நிந்தனையையும் அந்த மாறுவேடத்திலிருக்கும் ராஜா ஒரு பொருட்டாக எண்ணவில்லை.

ஏனென்றால் யார் எந்த நிந்தையான மொழிகளை அவர் மேல் சொன்னாலும், தான் ஒரு ராஜா என்பதை அவர் அறிந்திருந்தார். மாறுவேடத்திலிருந்தாலும் தான் ஒரு ராஜா என்பதால் மற்றவர்களுடைய வார்த்தை அவரை காயப்படுத்தவில்லை.

நம் ஆண்டவராகிய இயேசுவை கவனியுங்கள், மத். 11:19ல் இயேசுவை சாப்பாட்டு ராமன், குடிகாரன், பாவி என்றார்கள். மாற்கு 3:22ல் பிசாசுகளின் தலைவன்/பேய் என்றார்கள். யோவான் 8:48ல் பிசாசு பிடித்தவன் என்றார்கள். கடைசியாக கள்ளர்களோடு ஒருவராக இயேசுவை சிலுவையில் அறைந்து கள்ளன் என்றார்கள். இன்னும் எத்தனை பெயர்களை சொல்லி நிந்தித்தார்களோ, தெரியவில்லை!

தான் தேவ குமாரன் என்பதை இயேசு நன்கு அறிந்திருந்த படியினால், மற்றவர்கள் அவரைக் குறித்து சொன்ன தவறான, நிந்தையான வார்த்தைகள் அவரை பாதிக்கவில்லை. தான் மனிதஉருவத்திலிருக்கும் சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதை இயேசு நன்கு அறிந்திருந்தார்.

இன்று கர்த்தர் உங்கள் கண்களையும் திறக்க விரும்புகின்றார். 1 பேதுரு 2:9ல் நம்முடைய உண்மையான அடையாளம் என்ன என்பதை கர்த்தர் நன்கு வெளிப்படுத்தியிருக்கின்றார். “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.”

நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், நீங்கள் அதிகாரம் நிறைந்த ராஜா அல்லது ராணி, நீங்கள் தேவனுக்கு ஊழியம் செய்யும் பரிசுத்த ஆசாரியர்கள், நீங்கள் பரிசுத்தமான ஜாதி, நீங்கள் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு நெருங்கின உறவினர்கள், நீங்கள் தேவனுடைய பிள்ளைகள்… இன்னும் எத்தனையோ மேன்மையான அடையாளங்களை கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கின்றார்.

இந்த உலகத்தார் உங்களை முக்கியப்படுத்தவில்லை. உங்களை புறக்கணிக்கின்றார்கள். காரணம் அவர்கள் உங்கள் உண்மையான அடையாளத்தை கண்டு கொள்ளமுடியவில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் மாறுவேடத்திலுள்ள ராஜாக்களாக, ராணிக்களாக இந்த உலகத்தில் நடமாடிக்கொண்டிருக்கின்றீர்கள்.

எனவே அவர்கள் என்னை அப்படி சொன்னார்கள், இவர்கள் என்னை இப்படிச் சொன்னார்கள் என்று எப்பொழுதும் மனக்காயப்பட்டு வருத்தப்பட்டுக் கொண்டே இருக்காதீர்கள். போகின்ற இடத்திலெள்ளாலம் மனிதர்களோடு கசந்து கொள்ளாதீர்கள். எல்லோரும் உங்களை முக்கியப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் யார் என்பதின் நிச்சயம் உங்களுக்கு இருந்தால் மற்றவர்கள் உங்களை முக்கியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் வராது.

நம்மில் அநேகர் தான் ஒரு ராஜா / ராணி என்பதை மறந்து தெருவில் குரைக்கும் ஒவ்வொரு நாய்களுடனும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். அது உங்களைத்தான் பாதிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். முக்கியத்துவத்தை எதிர்பார்த்து, மனக்காயங்களையும், பகைகளையும் சம்பாதிக்காதீர்கள்.

நீங்கள் ராஜாக்களாக, ராணிக்களாக, தேவனுடைய பிள்ளைகளாக இந்த உலகத்தில் வாழுங்கள்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்


Share this page with friends