தூண்டிவிட்டு துராகிருதம் செய்தவள்!

சிரேஷ் என்றால் பொன் என்று பொருள்
இந்தப் பொன்னை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்
ஆங்காங்கு குறிப்பிடும்போது எளிதில் புரிந்துகொள்ளுவதற்காக
திரைகடல் ஓடி திரவியம் தேடுகிறவர்கள் உண்டு
ஆமானின் மனைவியான சிரேஷ் என்பவளோ திரைமறைவிலிருந்து “காய்” நகர்த்திக்கொண்டிருந்தாள்
திட்டமிட்டு அவள் நகர்த்த நினைத்த “காய்”
திரு. மொர்தெ’காய்!
சிரேஷ் என்பவள்
ஆகாபின் மனைவியான யேசபேலின்
உடன்பிறவா சகோதரி என்றுகூடச் சொல்லலாம்
கண்ணுக்கு மை போட்டுக் கொண்டு
அவள் செய்த அட்டகாசத்தினால்
அடியோடு அழிந்துபோனாள்
இவளது புருஷனான ஆமான்
ஓர் மும்முகத்தான்!
கர்வம், மூர்க்கம், உக்கிரகோபம்
இத்தனையும் கலந்த ஓர்
கலப்பின மனிதன்
தனக்கு தலை வணங்காத
மொர்தெகாயின் தலையை
என்ன விலை கொடுத்தாகிலும்
வாங்கிப்போட தருணம்
தேடிக் கொண்டிருந்தான்
அரமனைக்குச் செல்லும் போதெல்லாம்
பயங்கரமாய் டென்ஷன் ஆகி,
பயங்கரவாதியைப் போலாகிவிடுவான்
பரமதேவனின் மக்கள் அனைவருமே
இந்த ஆமானுக்கு ஆகாதவர்கள்
இவனுக்கும் சனகெரிப்புக்கும்
ஏதோ தொடர்பு இருந்திருக்கவேண்டும்
இஸ்ரவேலரை இருப்புக்கோலால் நொறுக்கி
யூத குலத்தைக் குயக்கலத்தைப் போல
உடைத்துப்போடவும், வேரறுக்கவும்
திட்டமிட்டு, சகுணம் பார்த்து, அதற்காக
நாள் குறித்தவன் இந்த ஆமான்!
நூற்றிருபத்தேழு நாடுகளை
அரசாண்ட அகாஸ்வேரு ராஜாவுக்கு
அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த ஆமானுக்கு பெருமை என்ற எருமை தலையில் ஏறியதால்
நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட் டிருந்தது
தன்னை மேன்மேலும் ராஜா உயர்த்தியதால்
தான் செய்ய நினைத்தது எதுவுமே தடைபடாது
என்ற மமதையில், மனைவி சிரேஷுடன்
கதைத்துக்கொண்டிருந்தான்
இவன் ஒரு குடிகாரன் என்பது குறிப்பிடத்தக்கது
சிரேஷ் தன் கணவனுக்கு
துர் ஆலோசனை கொடுப்பதில்
பேர்போ……னவள்!

இன்றைக்கெல்லாம் கவுன்சிலிங் கோர்ஸ் ஏதும் படிக்காமலேயே
சிரேஷ் என்ற பொன்னையும் மிஞ்சி
கவுன்சிலிங் கொடுத்துக் கணவனைக் கவிழ்த்துப்போடுகிறவர்கள் உண்டு.
“மொர்தெகாய் இல்லாவிட்டால்
நீவீர் சந்தோஷமாய் இருக்கலாமே”
என்பதுபோன்ற ஆசை வார்த்தைகளைப் பேசி
கொலைவெறியைத் தூண்டிவிட்டவள்
பொன் என்று அர்த்தம்கொண்ட
அந்தப் பெண் என்று சொன்னால்
வழக்குத் தொடுக்க யாருமில்லை!
நெடுமரம் போல வளர்ந்த அந்த
மொர்தெ’காயை அகற்றுவதற்கு,
ஓர் ஐம்பதுமுழத் திட்டம்
ஒன்றை வைத்திருக்கிறேன் என்றாள்
ஐம்பதுமுழத் தூக்குமரம் ஒன்றைச் செய்து
ராஜாவின் மனதை மாற்றி,
அந்த நெடுமரம் போன்றவனைத்
தொழுமரத்தில் தூக்கிபோடுமய்யா
நூற்றிருபத்தேழு நாடுகளில், உம்மைத் தடுக்க
ஒருவனுமில்லை என்றாள்!
தூண்டில்போட்டு மீன் பிடிக்கலாம், ஆனால்
தூண்டிவிட்டு துராகிருதம் பண்ணக்கூடாது
மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்
அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து
புறப்படவேண்டாம் என்றெல்லாம் ஜெப வீராங்கனை
அன்னாள் அம்மையார் பேசினது ஆமானின் மனைவியின்
காதுகளை எட்டவில்லை.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி,
தூக்குமரத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி
துரிதப்படுத்தினாள் சிரேஷ்.
ஆனால்
காரியம் மாறுதலாய் முடிந்தது.
அவள் அவசர கதியில் ஆசாரிகளை வைத்து
உண்டாக்கிய தூக்குமரத்தில்
தொங்கி மரித்தது அவளது ஆலோசனையைக் கேட்ட அன்புக் கணவனே!
உபவாசித்துக் கொண்டும்
ஜெபித்துக்கொண்டுமிருந்த
ஒட்டுமொத்த யூத குலத்துக்கும்
அன்றையதினம் விடுதலை பிறந்தது
எஸ்தர் ராஜாத்தியை ஜெபிக்கத் தூண்டின
மொர்தெகாய்,
ராஜாவுக்கு இரண்டாவது ஸ்தானத்தில் பதவியேற்றார்
யூத குழந்தையையோ
யூத ராஜ சிங்கத்தின் குட்டிகளையோ
படைத்தவரின் கரத்திலிருந்து
பறித்துகொள்ள ஒருவானாலும் கூடாமற்போனது
சிரேஷ் தன்னைத்தானே
விதவையாக்கிக்கொண்டாள்!
பத்துப் பிள்ளைகளையும் ஒரே நாளில்
பறிகொடுத்துப் பட்டமரமானாள்
பதவியிலிருக்கும் கணவனுக்குப்
பக்கத்திலிருக்கும் மனைவிமாரே!
இதைக் கொஞ்சம் காதுக்கொடுத்துக் கேளுங்கள்
கர்த்தர் ஞானமுள்ள தேவன் என்றும்
அவர் செய்கைகள் யதார்த்தமானவைகள் என்றும்
அறிந்துகொள்ளுங்கள்
எந்த நிலையும் எந்த நேரமும் மாறலாம்
வந்தவண்ணமாகவே இருக்கப்போவதில்லை
எனவே, ஆணவத்தை அகற்றி
தாழ்மையைத் தரித்துக்கொள்ளுங்கள்
அரமனை வாசலில் இருந்த மொர்தெகாயைத்
தூக்கிவிட தேவன் திட்டமிட்டிருக்கும்போது,
சிரேஷ் தூக்குமரம் செய்து தூக்கிப்போட
நினைத்தது முட்டாள்தனம் என்பது அப்போது அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும்
எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும்
என்ற வாக்கைப் பெற்றவர்களுக்கு விரோதமாய்
உருவாக்கப்படும் ஆயுதங்கள் அத்தனையும் DOOR LOCKED என்று முத்திரை குத்தப்பட்டு, Returned to sender என்று எழுதப்பட்டு, தேவனால் திருப்பி அனுப்பிவைக்கப்படும்!
ஆமான் தனக்கு இருக்கும் அதிகாரங்களைப்
பட்டியல் போட்டு, அதை எழுதி
சுத்தியல் வைத்து சுவற்றில் ஆணிஅடித்து
அடிக்கடிப் பார்த்துப் பெருமிதம் அடைந்தவன்
பெருமையுள்ளவனுக்கு தேவன்
எதிர்த்து நிற்கிறார் என்பது
இவனுக்குத் தெரியாது!
அது சரி. இதைத் தெரிந்து வைத்திருப்பவர்கள்
தாழ்மையாகவா இருக்கிறார்கள்?
துராகிருதம்பண்ணாதிருங்கள் என்று
எழுதப்பட்டதை வேதத்தில் வாசித்து,
அதைக் அடிக்கோடிட்டு மட்டும் வைக்காதீர்கள்
அடிக்கடி வாயைத்திறந்து சொல்லிப்பாருங்கள்
சிலர் பைபிள் முழுவதும் வசனங்களின் கீழே “கோடு” போட்டிருப்பார்கள்.
வறுமைக்’கோடு மாறவேண்டுமானால் வெறும் கோடு மாத்திரம் உதவாது. வார்த்தைகளை விசுவாசிக்கவேண்டும்
புத்தியுள்ள ஸ்திரீ, தன் வீட்டைக் கட்டுகிறாள்
புத்தியில்லாத சிரேஷ் தன் கைகளினால்
தன் வீட்டை இடித்துபோட்டுவிடுகிறாள்
இவளைப் பொறுத்தமட்டில் இடிப்பதற்கு
JCB எந்திரங்கள் எதும் தேவைப்படவில்லை
அவள் கைகளே போதும்
அத்தனை வலிமைவாய்ந்த கைகள்!
ஆவதும் பெண்ணாலே
அழிவதும் பெண்ணாலே என்று
சொல்லுவார்கள்
ஆமானைப் பொறுத்தமட்டில் அது
உண்மையாகிவிட்டது
ஆமான் அந்தப் பெண்ணாலே,
அந்தப் பொன்னாலே (சிரேஷ்)
அழிந்து மண்ணாகிப்போனான்
தூக்குமரம் ஏதும் செய்யப்படாதிருந்தால்
ஆமானுக்கு ராஜாவிடம் மேல்முறையீடு செய்ய
முகாந்தரம் கிடைத்திருக்கும், தப்பிப் பிழைத்திருப்பான்
அதற்கு வழியில்லாமற் போகப்பண்ணியவள்
அவனது (பொன்னான) மனைவி சிரேஷ்!
அழிவுக்கு முன்னானது அகந்தை
தூக்குமரத்தில் விழுதலுக்கு முன்னானது
மனமேட்டிமை
விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிற
மொர்தக்காய் போன்றவர்கள் நாட்டுக்கும் வீட்டுக்கும் சபைக்கும் தேவை
மொர்தெ’காய் என்ற காயை நகர்த்த
பன்னாட்டு முயற்சிகள் பலிக்கவில்லை
நூற்றிருபத்தேழு நாடுகள் என்ன?
அறுநூற்றிருபத்தேழு நாடுகள் சேர்ந்தாலும்
ஜெபிக்கிற மனிதனை அசைக்க முடியாது
என்பது உலகறிந்த உண்மையாகிவிட்டது.
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை -14
====================
என்னை எழுத வைத்த வசனங்கள்:
தலைப்பைத் தந்த வசனம்: ரோமர் 1:30
எஸ்தர் 5:10 / 1 சாமுவேல் 2:3 / ஏசாயா 54:17 / யாக்கோபு 4:6 / ரோமர் 1:30,31 / நீதி. 14;1 / நீதி. 16:18