The mask is available here

முகக்கவசம் இங்கு கிடைக்கும்!

Share this page with friends

The mask is available here
The mask is available here

முகக்கவசம் இங்கு கிடைக்கும்!

ஒரு வீட்டின் முகப்பில் எழுதித்
தொங்கவிடப்பட்டிருந்த வாசகம் இது.
அப்படியானால் முகத்திற்கு இரட்சிப்பு
எங்கே கிடைக்கும்?

கேட்கவேண்டிய கேள்வி
வாழும்போதே,
சிந்திக்கவேண்டிய விஷயம்

தொற்றுநோய்க் கிருமிகளைத்
தொலைப்பதற்கு வேண்டுமானால்
முகக்கவசம் உதவலாம்

தொட்டுத் தொடரத் துடிக்கும்
பாவங்களையும் சாபங்களையும்
தொலைத்துக்கட்ட
பரிசுத்தரைப் பணிந்துகொள்ள
முகத்திற்கு இரட்சிப்பு தேவை

கதரேன் நாட்டில் பிசாசுகளின் பிடியில்
சிக்கியிருந்தவனின்
முகத்திற்கு இரட்சிப்பும்
உடல்மூட புது வஸ்திரமும் தந்தவர்
உள்ளூர் பிரமுகர் அல்ல,
உன்னதத்திலிருந்து வந்த இயேசு

லாபமே என் லட்சியம் என்றிருந்த
லாபானின் முகக்கவசம்
இருபது ஆண்டுகளாக அவனது
சுயரூபத்தை மட்டுமே
மறைத்துவைக்க உதவியது

இருபதாவது ஆண்டின் முடிவில்
முகக்கவசம் கிழிந்தது
முகரூபம் தெரிந்தது
மருமகனான யாக்கோபு
மாறுபட்ட மாமனாரின்
முகத்தைக் கண்டு மலைத்துப்போய்விட்டார்

இருபது ஆண்டுகளாக
இளக்கமாயிருந்த உறவு
இப்போது கெட்டிப்பட்டுப்போனது

சிமெண்ட் கெட்டிப்பட்டுப்போனால்
சித்தாள்கூட, இது ஒன்றுக்கும் உதவாது
என்று சொல்லிவிடுவான்

உறவுகள் கெட்டிப்பட்டுப்போனால்
தண்ணீரற்ற துரவுகளாக மாறிப்போகும்

கணவன் மனைவி உறவு கெட்டிப்பட்டுப்போனால்
குடும்பத்தைக் கட்டியெழுப்ப முடியாது
குட்டிச்சுவராய் போகும் குடும்பம்

லாபானின் அகோர முகத்தைக் கண்டபின்
பதப்படுத்தப்பட்டுப் பழகிய அந்த பதான் அராமில்
பத்து நிமிஷம்கூட யாக்கோபு
இருக்க விரும்பவில்லை
இருபது ஆண்டுகளுக்கு முன்
ஒருநாள் ஒண்டவந்த யாக்கோபு
சரியாக உற்றுப் பார்க்காத காரணத்தால்
முதல் முறையாக ஏமாற்றப்பட்டார்

கூச்சப்பார்வை கொண்ட
மூத்த மகள் லேயாளுக்கு
முகக்கவசம் அணிவித்து
ராகேலைப் போல நடிக்கவைத்து
யாக்கோபைக் கைப்பிடிக்கவைத்து,
காரியத்தைக் கச்சிதமாக முடித்துவிட்டார்
காரியக்காரனான லாபான்

தனது தாய் மாமனின்
கவசம் அணியாத
முகத்தைப் பார்த்து
அதிர்ச்சியடைந்தார் யாக்கோபு

அது நேற்று முந்தையநாள்
இருந்ததுபோல் இராமல்
வேறுபட்டிருக்கிறதைக் கண்டார்

அன்றைய தினம் சரியாக
அதிரடியாக கர்த்தரே அவன்
முகத்திற்கு முன் வந்துவிட்டார்
அதாவது லாபானின் வீட்டிற்கே வந்துவிட்டார்

நானாக இருந்திருந்தால்
இருபது வருஷகாலமாக
இந்த மனிதனோடும், வெயிலோடும்
பனியோடும் போராடிக்கொண்டிருந்தேனே
நீர் எங்கே போயிருந்தீர்? என்று
வாய் கூசாமல் கேட்டிருப்பேன்

குணசாலியும் கூடாரவாசியுமான
யாக்கோபு அப்படியெல்லாம் பேசவில்லை
‘’கர்த்தர் யாக்கோபை நோக்கி
உன் பிதாக்களுடைய தேசத்திற்கும்
உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப் போ
நான் உன்னோடேகூட இருப்பேன்’’
என்று பேசினார்

இன்றைக்கும் Lock down நாட்களில்
மாறுபடும் (ஆறு) முகங்களைக் கண்டு
மலைத்துப் போய் நிற்கிறீர்களோ?
திருமுகம் நோக்கிப் பாருங்கள்
திருப்தியில் மூழ்குவீர்கள்

நீங்கள் (லாபான் என்கிற)
தாய்மாமன் வீட்டில் இருந்தாலும்
உங்களைத் தேடி அங்கேயும் வருவார்
எத்தனைமுறை ஏமாற்றப்பட்டிருந்தாலும்
உங்கள் முகத்திற்கு இரட்சிப்புத்
தருவதற்காக வருவார்
நொறுங்குண்ட உங்களை
காயப்பட்டுள்ள உங்களை
கட்டுண்ட உங்கள் பிள்ளைகளை
விடுவிக்க கடந்து வருவார்

இருபது ஆண்டுகளாக யாக்கோபு,
லாபானின் வீட்டில் இருந்தபோது
ஜீவனுள்ள தேவனை
அண்டிக்கொள்ளவில்லை என்பது,
லாபான் மேல் வைக்கப்படும்
கூடுதல் குற்றச்சாட்டு
தனக்கென தெய்வங்களை வைத்திருந்த
லாபானுக்கு கொடுக்கப்பட்ட
தவணைக்காலம் முடிந்தது
முகக்கவசம் முழுவதுமாக அறுந்தது

இன்றைக்கும் தனக்கென தெய்வங்களை
வைத்திருக்கும் லாபான்களைக் குறித்து
யாக்கோபு’க்கள் கவனமாயிருக்கவேண்டும்

லாமேக்கு என்றுகூட சிலருக்குப்
பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால்
யாருமே லாபான் என்று பெயரிட்டதில்லை

இருப்பினும் லாபானின் உடன்பிறவா
சகோதர, சகோதரிகள் ஊருக்குள்ளே இருக்கிறார்கள்
இப்படிப்பட்டவர்களை,
அவர்களுடைய கனிகளினால் அறியலாம்
இதற்காக லாபான் என்று பெயரிடவேண்டியதில்லை
கனிகள் சொல்லும் அவர்கள் பெயர்களை

யாக்கோபு, இஸ்ரவேலாக மாறினார்
அவனது பெயரை, அவன் வாழ்ந்த தேசத்திற்கே
சூட்டினார்கள்

israel location in the world map
Israel location in the world map

இதனால் ஒரு தேசமே
இஸ்ரவேல் தேசம் என்று
இன்றைக்கும் அழைக்கப்படுகிறது
இவரது மகன் யூதாவின் பெயரால்
இஸ்ரவேலர் யூதர்கள் என்று
அழைக்கப்படுகிறார்கள்

Israel flag

முன்னொருநாளில்
முழுக் கவசமணிந்து, நான்தான் ஏசா
என்று ரொம்ப லேசாக
அப்பாவை ஏமாற்றியவன்
பதான் அராமில் ஏமாற்றப்பட்டான்
ஏமாற்றினால் எப்படியும் ஒருநாள்
ஏமாற்றப்படுவோம் என்பது நிச்சயம்

பத்துமுறை மருமகனின் சம்பளத்தை
லாபான் மாற்றினான் இதற்காக
சம்பளக் கமிஷன் ஏதும் அமைக்கவில்லை
அவனைப் பொறுத்தமட்டில் ஆடுகளில்
கமிஷன் மட்டுமே போதுமானதாயிருந்தது

முதல் முறையாக
முழுஇரவு
ஜெபத்தை நடத்தியவர்
நம்முடைய முற்பிதாவாகிய யாக்கோபு
என்பதை இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்

சமூக விலகலை
SOCIAL DISTANCING, QUARANTINE, AND ISOLATION
அனைத்தையும் அன்றைக்கே
கடைபிடித்திருக்கிறார்
அன்றைய தினம் யாக்கோபு
முகக்கவசத்துக்கு
முழுக்கு போட்டுவிட்டு
நான்தான் யாக்கோபு என்று பரமத் தகப்பனிடம்
பணிவுடன் ஒத்துக்கொண்டு
இஸ்ரவேலாக மாறிய சரித்திரம்
உங்களுக்கும் தெரிந்த விஷயம்தான்

இரட்சிப்பைக் கண்ட
முற்பிதாவாகிய யாக்கோபின்
முகமும் அகமும்
அந்நிய தேசத்தில்
17 ஆண்டுகள் பிரகாசித்தது

யோசேப்பு பிறந்ததிலிருந்து
தகப்பனோடுகூட 17 வருஷம்
செல்லப்பிள்ளையாக இருந்தான்
யாக்கோபு கடைசிக் காலத்தில் 17 வருஷம்
தன் செல்ல மகனோடு எகிப்தில் இருந்தார்

முகக்கவசம் இங்கு கிடைக்கும்
முகத்திற்கு இரட்சிப்பு எங்கே கிடைக்கும்?

இதில் முன்னது மூச்சிருக்கும்வரைதான்
பின்னது மூச்சைவிட்டபின்னும்
நித்தியம் வரை தொடரக்கூடிய
இரட்சணியத்தின் இராணுவ கவசம்

முகத்திற்கு இரட்சிப்பு தருகிறவர் யார்?
அது எங்கே கிடைக்கும்?

தாவீது ராஜாவிடம் கேட்போம் வாருங்கள்
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்?
ஏன் எனக்குள் தியங்குகிறாய்
தேவனை நோக்கிக் காத்திரு;
என் முகத்திற்கு இரட்சிப்பும்

என் தேவனுமாயிருக்கிறவரை
நான் இன்னும் துதிப்பேன்

முகத்திற்கும் அகத்திற்கும்
இரட்சிப்பு தருகிறவர்
நம்முடைய முதல்வர்
இரட்சிப்பு கர்த்தருடையது.

வாசியுங்கள். கர்த்தரை நேசியுங்கள்
அன்புடன்,
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை -14

இந்தக் கவி + கட்டுரையை எழுத, என் உள்ளத்தில் உதித்த வசனங்களை எழுதியுள்ளேன். கட்டுரையை வாசித்தபின், காரியங்கள் இப்படி இருக்கிறதா? என்று, வேத வாக்கியங்களையும் ஆராய்ந்து பாருங்கள். அதற்கு வசதியாகத் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

மாற்கு 5: 1-15 // 2. ஆதியாகமம் 31:2 -7 // 3. ஆதியாகமம் 29: 23-28 // 4. ஆதியாகமம் 31:30 // 5. ஆதியாகமம் 5:25-31 // 6. ஆதியாகமம் 32:28 // 7. ஆதியாகமம் 27: 15-29 // 8. ஆதியாகமம் 47:9 & 28 // 9.சங்கீதம் 42:11 // 10. கொலோசெயர் 1:18.

“அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்”.


Share this page with friends