சீமானின் சிந்தை (பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்)

Share this page with friends

மனம் உண்டானால் மார்க்கமுண்டு.
இது பழமொழி.
இப்போது, பணம் உண்டானால் மார்க்கமுண்டு
இது புதுமொழி. 

அதாவது பணத்தினால்
வழியை உண்டாக்கிவிடுவார்களாம்.

மார்க்கமாகிய, மதப் பிரச்சாரத்திற்கு
பணம் இருந்தால் போதுமாம்.
எத்தனை சபைகளையும் உருவாக்கலாமாம்.

இந்த வார்த்தைகளை மற்றவர் சொல்லி,
நான் கேட்டபோது, எனக்கு
தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது.

உலகமே சுழலும்போது
நம் தலை சுற்றுவதில்
ஆச்சரியமொன்றுமில்லையே!

பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள்.
ஆனால் பரலோகம் வரை பாயுமா?

பணம் என்றால்
பிணமும் வாய் திறக்கும்
என்ற சொல்,
பணத்திற்கும் பிணத்திற்கும் உள்ள
நெருக்கமான உறவை உணர்த்துகிறது.  

ஆனால், நித்திய ஜீவனைப்
பெற்றுள்ளேன்
என்று சொல்லுகிற
உனக்கும் பணத்திற்கும் எந்த அளவு உறவு?

ஒரு கட்டுக்குள் இருக்கிறதா? அல்லது
கட்டுக் கட்டாய் இருக்கிறதா?

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேர்,
இது வேதம் சொல்லுவது.
வேதத்தில் வாதம் பண்ணுகிறவர்களும்
இப்படிச் சொல்லுகிறார்கள்.

அதாவது பணமோ எல்லாவற்றுக்கும் உதவும்.
இதுவும் வேதம்தான் என்கிறார்கள். 

பணத்தோடு குரோதமாக அல்லது
கோபித்துக்கொண்டு
இருப்பவர்கள்
யாராவது உண்டா?
அநேகமாக யாரும் இருக்க மாட்டார்கள்.

மனைவி மக்களோடு வேண்டுமானால்
கோபித்துக்கொண்டு இருப்பார்கள்.

ஆனால் பணத்தையோ மனதார நேசிப்பார்கள்.
சிலருக்கு அதுதான் மனைவி,
பிள்ளைகளை
விட பெரிதாய் காணப்படுகிறது.

பணம் ஒரு ஐசுவரியவானை
பாதாளம் வரைக் கொண்டுபோய் சேர்த்தது.

தரித்திரனான லாசரு
ஆபிரகாமின் மடிக்குப் போனான்.

ஐசுவரியவானுக்கு உலக ஐசுவரியம்
ஏராளம் இருந்தது.
லாசருவுக்கு அதைவிட ஏராளமாய்  
தேவ கிருபையின் ஐசுவரியம் இருந்திருக்கிறது.

ஐசுவரியவான்
இரத்தாம்பரம்,
விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்திருந்தான்.
அனுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துவந்தான்.

அவனைப் பாதாளத்திற்கு  
பத்திரமாய் கொண்டுபோய் சேர்த்து எது?


சிந்திக்க வேண்டிய கேள்வி!

அவனுடைய மேஜையிலிருந்து விழும்
துணிக்கைகளினாலே பசியாற்ற
ஆசையாய் இருந்த லாசருவை,
அவன் அசட்டைபண்ணினான்.

அவன் லாசருவுடைய  பசியை ஆற்றி,
அவனுக்கு உதவ முன் வரவில்லை.  
,ஒரு ஆதரவற்றவனை, தரித்திரனை
பார்க்கவைத்து தின்றுகொழுத்தவன்.


நன்மை செய்ய அவனுக்கு
திராணி இருந்தும்
அவன்
அதைச் செய்யாமல் போனதால்
அது அவனுக்குப் பாவமாய்ப் போனது.
எனவே அவன் நரகத்தில் தள்ளப்பட்டான்.

பாவத்தின் சம்பளம்
பட்டுவாடா செய்யப்பட்டது   

ஆபிரகாம் சொன்னது என்ன?
மகனே, நீ பூமியிலே
உயிரோடிருக்குங் காலத்தில்
உன் நன்மைகளை அனுபவித்தாய்

(லூக்கா 16:19-31)

உன் நன்மைகளை மட்டும் நினைத்து,
சுயநலத்துடன் நீ வாழ்ந்தால்

உனக்கு நரகம்தான் கிடைக்கும். 
ஒரு சொட்டுத் தண்ணீர் கூட
உனக்குக் கிடைக்காது.
நாவறண்டு தாகத்தால் துடிப்பாய்.

பூமியிலேயே ஒரு குடம் தண்ணீருக்கு
இந்தப் பாடானால்,
நரகத்திலே  
ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்காதே!.

நீ உன்னையும் உனக்கு முன்பாக
இருந்த லாசருவையும் நினைத்துக்கொள்

(வசனம் 25) என்று ஆபிரகாம்  சொன்னார்.

இந்த ஆபிரகாம்  யார்?
எப்படிப்பட்டவர்?
அவர் சிந்தை எப்படிப்பட்டது?

ஆண்டவரால் அழைக்கப்பட்டவர் ஆபிரகாம்.
உன் தேசம், உன் இனம், உன் தகப்பன் வீடு
எல்லாவற்றையும் விட்டு
நான் உனக்கு காண்பிக்கும்
தேசத்திற்குப் போ என்று
தேவன் சொன்னார்.

அவனோ, தன்னோடு
தன் சகோதரனின் குமாரனாகிய 
லோத்தையும் தன் ஜனங்களையும்
கூட்டிக்கொண்டு போனான்.
லோத்தின் நிமித்தம்  
அவனுக்கு நேரிட்ட அனைத்து
சிரமங்களையும் சகித்தான்.

தன்னைப் போல
பிறரை நேசித்தான் (ஆதி. 12:1-5)
கர்த்தர் அவனையும்
அவன் சந்ததியையும்
ஆசீர்வதித்தார்.

பூமியிலுள்ள வம்சங்களெல்லாம்
அவனுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டது

தேவன் அவனுக்கு சிநேகிதரானார்

ஆபிரகாம் சீமான் ஆனான்
(ஆதியாகமம் 13:2).

அவனைச் சுற்றியுள்ள புறஜாதியினர்
அவனை மகா பிரபு என்று
அழைத்தார்கள் (ஆதியாகமம் 23:4) .

ஆனால் அவன் சிந்தை
அவன் பெற்றுக்கொண்ட
பூமியின் ஆசீர்வாதங்களோடு
ஒட்டிக்கொண்டிருக்கவில்லை.


ஓட்டுக்குள் இருந்தாலும்
ஓட்டோடு ஒட்டாமல் இருக்கும்
விளாம்பழம் போல இருந்துள்ளார்

நான் உங்களிடத்தில் அந்நியனும்
பரதேசியுமாயிருக்கிறேன் என்று
தன்னைத் தாழ்த்தி அறிக்கையிட்டான்

(ஆதியாகமம் 23:4).

விசுவாசத்தினாலே  ஆபிரகாம்
வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே
பரதேசியைப்போல சஞ்சரித்தான்.

தேவனால் அழைக்கப்பட்டு
ஆசீர்வதிக்கப்பட்ட அத்தனைபேரும்
பூமியின்மேல் தங்களை
அந்நியரும் பரதேசிகளும் என்று
அறிக்கையிட்டு
விசுவாசத்தோடே தாங்கள் நாடிப் போகிற
சுயதேசமாகிய பரம கானானை
தூரத்திலே கண்டு மரித்தார்கள் (எபிரெயர் 11:13,14).

ஆனால் கர்த்தரால் அழைக்கப்பட்டு,
தெரிந்துகொள்ளப்பட்டு,
ஆசீர்வதிக்கப்பட்ட ஜனங்களின்
இன்றைய அறிக்கையெல்லாம்
எப்படியிருக்கிறது?


கர்த்தர் தந்த உலக ஆசீர்வாதங்களை
மையப்படுத்தி, அதையே பெரிதுபடுத்தி,
அதையே சார்ந்து
காணப்படுகிறதல்லவா?

ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை
போதிக்கிறார்கள்.
ஆனால் உலக ஆசீர்வாதங்களை
ஒட்டிக்கொண்டு சுயநலத்துடன்
வாழும் தேவ ஜனம் எவ்வளவு பேர்!

ஆபிரகாம் சீமானாய் இருந்தும்
கூடாரவாசியாகவே
கடைசிமட்டும் வாழ்ந்தான்.

உட்கார்ந்தால் அது உச்சிவெயில்
அடித்தாலும்
கூடார வாசலில்தான்  உட்காருவான்

(ஆதியாகமம் 18:1).

அவன் சிந்தை
கூடாரத்தைக் குறித்தோ,
கூடாரத்தில் உள்ளவற்றைக் குறித்தோ இல்லை.

குறிப்பாகச் சொல்லப்போனால்
சாராளை பற்றியதாகக்கூட இல்லை.
தூரத்திலே வரும் தேவனையும்
தேவ மக்களையும் நோக்கி இருந்தது.

அன்றொரு நாள்
கூடார வாசலில் உட்கார்ந்திருந்த
ஆபிரகாமின் மடியின் மீது,
ஐசுவரியவானுடைய
வாசலில் உட்கார்ந்திருந்த
லாசரு அமர்ந்தான்.


தாய் மடியில் குழந்தை
அமர்ந்திருப்பதுபோல!

தன்னைப் பரதேசி அதாவது
பரமதேசி என்று
அறிக்கையிட்டவனின் மடியில்,
உண்மையாகவே பரதேசியாய் இருந்தவன்,
அதிலும் வீதியில் கிடந்தவன்
உட்கார்ந்திருக்கிறான்!

இதைக் குறித்தெல்லாம்
இன்றைக்கு சபைகளில்
பிரசங்கிப்பதில்லை. 

அறிவிப்புகளும்
அறுவடைகளும்
ஏராளம்

விசுவாச அறிக்கையிட்டால்
நீ ஐசுவரியவான் ஆகிவிடலாம்! 

நீ இன்னமும் கார் வாங்கவில்லை ,
உனக்கு ஒரு சொந்த வீடு இல்லை, அதனால்
நீ ஒரு விசுவாசியே இல்லை,
நீ சரியாக விசுவாச அறிக்கை
செய்யவில்லை என்று,
இப்படி உலக ஐசுவரியத்தைப் பற்றியே
இன்றைக்கு பிரசங்க பீடத்திலிருந்து
பேசப்படுகிறது. 

பரலோகத்திற்குச் செல்ல பணமோ
செல்வமோ தேவையில்லை.

தேவனைக் குறித்த மனமும் ,
தெய்வீக குணமும்
இருந்தால் போதும்.
அது இரட்சிப்பிற்கு நேராய் கொண்டுசெல்லும்.

என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி:
தேவரீர், என் ஆண்டவராயிருக்கிறீர்,
என் செல்வம்

உமக்கு வேண்டியதாயிராமல்,
பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும்,
நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற
மகாத்துமாக்களுக்கும்,
அது வேண்டியதாயிருக்கிறது
என்று சொன்னாய்
(சங்கீதம் 16:2,3)

என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி
உங்கள் குறைவையெல்லாம்
கிறிஸ்து இயேசுவுக்குள்
மகிமையில் நிறைவாக்குவார்
(பிலிபியர் 4:19).

பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்
(1939 – மார்ச் 1 – 2021)

தொகுப்பு:
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை -14

(நீங்கள் வாசித்த இந்தக் கட்டுரை
வழிப்போக்கனின் வார்த்தைகள் என்ற
புத்தகத்தின் இரண்டாம் பாகத்தில்
இடம்பெற்றுள்ள கட்டுரை. 
பத்து ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு,
ஜீவதண்ணீர் மாத இதழில்
வெளியிடப்பட்ட கட்டுரை)

மக்கள் அதிகம் வாசித்தவை:

ஒரு  துண்டு  காகிதம் - கிறிஸ்தவ சிறு கதை
உம்மை நம்புவேன்
தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்க அரசாணை வெளியீடு
உலகின் மிக பெரிய சபையின் போதகர் பால் யாங்கி சோ கர்த்தருடைய ராஜ்யத்தில் பிரவேசித்தார் - முழுமையான விப...
கேள்வி : நம் வேதாகமத்தில் இல்லாத வேறே புஸ்தகங்கள் எவை? ஏன் அவைகள் தள்ளப்பட்டன?
நான் உங்களை தாங்குவேன்
கூகுள் வாய்! - வித்யா'வின் விண் பார்வை!
வெற்றியும் தோல்வியும் உன் கையில் தான் உண்டு.
இஸ்ரேல் நாட்டில் இருந்து 1,300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியா வருகை
கிறிஸ்தவம் சார்ந்த ஆன்லைன் படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது சென்னை பல்கலைக்கழகம்

Share this page with friends